NEW TESTAMENT - TAMIL
- Get link
- X
- Other Apps
LIBRARY
BackNEW TESTAMENT - TAMIL
மத்தேயு
1. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:
2. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;
3. யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
4. ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
5. சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
6. ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
7. சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;
8. ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
9. உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;
10. எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
11. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.
12. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்;
13. சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
14. ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;
15. எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
16. யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்.
17. இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்துவரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.
18. இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
24. யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;
25. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.
1. ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லெகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்.
3. ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
4. அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான்.
5. அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லெகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:
6. யூதேயா தேசத்திலுள்ள பெத்லெகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.
7. அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து:
8. நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லெகேமுக்கு அனுப்பினான்.
9. ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.
10. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
11. அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
12. பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
13. அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்.
14. அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,
15. ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
16. அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லெகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.
17. புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று,
18. எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.
19. ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு:
20. நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்துபோனார்கள் என்றான்.
21. அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான்.
22. ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய்,
23. நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
1. அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து:
2. மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான்.
3. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.
4. இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தது.
5. அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய்,
6. தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
7. பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?
8. மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
9. ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
10. இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
11. மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
12. தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
13. அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
14. யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
15. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.
16. இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
17. அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
1. அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
2. அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
3. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
4. அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
5. அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி:
6. நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
7. அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.
8. மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
9. நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
10. அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
11. அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
12. யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய்,
13. நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.
14. கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே,
15. இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,
16. ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
17. அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
18. இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:
19. என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
20. உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
21. அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபெதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபெதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார்.
22. உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
23. பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.
24. அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
25. கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.
1. அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.
2. அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:
3. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
4. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
5. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
6. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.
7. இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
9. சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
10. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
11. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;
12. சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
13. நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
14. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
15. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
16. இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
19. ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.
20. வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
21. கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
22. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.
23. ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில்,
24. அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
25. எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.
26. பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
27. விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
28. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
29. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
30. உன் வலதுகை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
31. தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது.
32. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.
33. அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
34. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.
35. பூமியின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்.
36. உன் சிரசின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே.
37. உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
38. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
39. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.
40. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.
41. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
42. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
43. உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
45. இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
46. உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
47. உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா?
48. ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.
1. மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.
2. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
3. நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.
4. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
5. அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
6. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.
7. அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
8. அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.
10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.
11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
12. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
13. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.
14. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
15. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
16. நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
17. நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.
18. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
19. பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
20. பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
21. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
22. கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.
23. உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!
24. இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.
25. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
26. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
27. கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
28. உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;
29. என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
30. அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
31. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்.
32. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
33. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
34. ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.
1. நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
2. ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
3. நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
4. இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
5. மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
6. பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.
7. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;
8. ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
9. உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
10. மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?
11. ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
12. ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.
13. இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
14. ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
15. கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
16. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
17. அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.
18. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.
19. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.
20. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
24. ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
26. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
27. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
28. இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,
29. ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
1. அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்.
2. அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.
3. இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.
4. இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.
5. இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து:
6. ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
7. அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்.
8. நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
9. நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான்.
10. இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
11. அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.
12. ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
13. பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்.
14. இயேசு பேதுருவின் வீட்டிலே வந்து, அவன் மாமி ஜுரமாய்க் கிடக்கிறதைக் கண்டார்.
15. அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜுரம் அவளைவிட்டு நீங்கிற்று; அவள் எழுந்திருந்து, அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.
16. அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்.
17. அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
18. பின்பு, திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதை இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார்.
19. அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
20. அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
21. அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
22. அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.
23. அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.
24. அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. அவரோ நித்திரையாயிருந்தார்.
25. அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.
26. அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
27. அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.
28. அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியாக ஒருவனும் நடக்கக்கூடாதிருந்தது.
29. அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள்.
30. அவர்களுக்குக் கொஞ்சதூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.
31. அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவு கொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.
32. அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிக்கூட்டத்தில் போயின; அப்பொழுது, பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, ஜலத்தில் மாண்டுபோயின.
33. அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் சங்கதிகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்குச் சம்பவித்தவைகளையும் அறிவித்தார்கள்.
34. அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டுவந்து, அவரைக் கண்டு, தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.
1. அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.
2. அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
3. அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.
4. இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
5. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?
6. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.
7. உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான்.
8. ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
9. இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.
10. பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள்.
11. பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
12. இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
13. பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
14. அப்பொழுது, யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள்.
15. அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.
16. ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடே இணைத்த துண்டு வஸ்திரத்தை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும்.
17. புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதும் இல்லை; வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்; புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
18. அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரைப் பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்; ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.
19. இயேசு எழுந்து, தம்முடைய சீஷரோடுகூட அவன் பின்னே போனார்.
20. அப்பொழுது, பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ:
21. நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.
22. இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம்முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.
23. இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர்களையும், இரைகிற ஜனங்களையும் கண்டு:
24. விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள்.
25. ஜனங்கள் வெளியே துரத்தப்பட்ட பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.
26. இந்தச் சங்கதி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.
27. இயேசு அவ்விடம் விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
28. அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள்.
29. அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
30. உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
31. அவர்களோ புறப்பட்டு, அத்தேசமெங்கும் அவருடைய கீர்த்தியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.
32. அவர்கள் புறப்பட்டுப் போகையில், பிசாசுபிடித்த ஊமையான ஒரு மனுஷனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
33. பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள்.
34. பரிசேயரோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
35. பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
36. அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,
37. தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்;
38. ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.
1. அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
2. அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,
3. பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,
4. கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,
6. காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
7. போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
8. வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.
9. உங்கள் கச்சைகளில் பொன்னையாவது வெள்ளியையாவது செம்பையாவது,
10. வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.
11. எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.
12. ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.
13. அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.
14. எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.
15. நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
16. ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.
17. மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.
18. அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.
19. அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.
20. பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
21. சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்.
22. என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
23. ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
24. சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல.
25. சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?
26. அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.
27. நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.
28. ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
29. ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.
30. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
31. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
32. மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்.
33. மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.
34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
36. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
37. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
38. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
39. தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.
40. உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.
41. தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.
42. சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
1. இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கும் கட்டளைகொடுத்து முடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அவ்விடம் விட்டுப் போனார்.
2. அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து:
3. வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.
4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்;
5. குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.
6. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
7. அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?
8. அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள்.
9. அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
10. அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.
11. ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்.
12. யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம்பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.
13. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.
14. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.
15. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
16. இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து:
17. உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.
18. எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள்.
19. மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும், ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.
20. அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற் போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்:
21. கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.
22. நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
23. வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும்.
24. நியாயத்தீர்ப்புநாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25. அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
26. ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
27. சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.
28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
29. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
30. என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.
1. அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.
2. பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள்.
3. அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?
4. அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே.
5. அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?
6. தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
7. பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
8. மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
9. அவர் அவ்விடம் விட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார்.
10. அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள்.
11. அதற்கு அவர்: உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?
12. ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மைசெய்வது நியாயந்தான் என்று சொன்னார்.
13. பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல் சொஸ்தமாயிற்று.
14. அப்பொழுது, பரிசேயர் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள்.
15. இயேசு அதை அறிந்து, அவ்விடம் விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி,
16. தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
17. ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் உரைத்ததாவது:
18. இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்.
19. வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை.
20. அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்தநாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.
21. அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள் என்பதே.
22. அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார்.
23. ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்.
24. பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.
25. இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.
26. சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?
27. நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.
28. நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
29. அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.
30. என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
31. ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.
32. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
33. மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.
34. விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
35. நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.
36. மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
37. ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.
38. அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள்.
39. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
40. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
41. யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
42. தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.
43. அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்:
44. நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு,
45. திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார்.
46. இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள்.
47. அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.
48. தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,
49. தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!
50. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
1. இயேசு அன்றையத்தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.
2. திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள்.
3. அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
4. அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
5. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது.
6. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.
7. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.
8. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.
9. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
10. அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
11. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
12. உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
13. அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.
14. ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.
15. இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.
16. உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.
17. அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
18. ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.
19. ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.
20. கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்;
21. ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.
22. முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான்.
23. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.
24. வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.
25. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.
26. பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது, களைகளும் காணப்பட்டது.
27. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.
28. அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.
29. அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.
30. அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப்பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.
31. வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.
32. அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.
33. வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.
34. இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை.
35. என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
36. அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.
37. அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்;
38. நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்;
39. அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.
40. ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.
41. மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து,
42. அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
43. அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
44. அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.
45. மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.
46. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.
47. அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.
48. அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.
49. இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,
50. அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
51. பின்பு, இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம், ஆண்டவரே, என்றார்கள்.
52. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிறபடியால், பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார்.
53. இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்தபின்பு, அவ்விடம் விட்டு,
54. தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?
55. இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?
56. இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,
57. அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
58. அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.
1. அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு,
2. தன் ஊழியக்காரரை நோக்கி: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.
3. ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.
4. ஏனெனில்: நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்.
5. ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான்.
6. அப்படியிருக்க, ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள்.
7. அதினிமித்தம் அவன்: நீ எதைக் கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான்.
8. அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள்.
9. ராஜா துக்கமடைந்தான். ஆகிலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக் கட்டளையிட்டு,
10. ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யோவானைச் சிரச்சேதம்பண்ணுவித்தான்.
11. அவனுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள்.
12. அவனுடைய சீஷர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம்பண்ணி, பின்பு போய் அந்தச் சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.
13. இயேசு அதைக் கேட்டு, அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள்.
14. இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்.
15. சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்குப் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
16. இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார்.
17. அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள்.
18. அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
19. அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்.
20. எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.
21. ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.
22. இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.
23. அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.
24. அதற்குள்ளாகப் படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது.
25. இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.
26. அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.
27. உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
28. பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.
29. அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான்.
30. காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான்.
31. உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.
32. அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.
33. அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
34. பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள்.
35. அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து,
36. அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.
1. அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து:
2. உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்றார்கள்.
3. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
4. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.
5. நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து,
6. உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.
7. மாயக்காரரே, உங்களைக்குறித்து:
8. இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
9. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.
10. பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள்.
11. வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
12. அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.
13. அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.
14. அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
15. அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான்.
16. அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?
17. வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?
18. வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
19. எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
20. இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.
21. பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.
22. அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
23. அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
24. அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.
25. அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.
26. அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
27. அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
28. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.
29. இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
30. அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்.
31. ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
32. பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.
33. அதற்கு அவருடைய சீஷர்கள்: இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள்.
34. அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
35. அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,
36. அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.
37. எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள்.
38. ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் நாலாயிரம்பேராயிருந்தார்கள்.
39. அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு, படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார்.
1. பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
2. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள்.
3. உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?
4. இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார்.
5. அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
6. இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.
7. நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
8. இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?
9. இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும்;
10. ஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா?
11. பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
12. அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
13. பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
14. அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
15. அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
16. சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
17. இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
18. மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
19. பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
20. அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்.
21. அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
22. அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.
23. அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
24. அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.
25. தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.
26. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
27. மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
28. இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
1. ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்,
2. அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.
3. அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.
4. அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.
5. அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
6. சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள்.
7. அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாதேயுங்கள் என்றார்.
8. அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில் இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.
9. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
10. அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள்.
11. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்.
12. ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்.
13. அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.
14. அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தபோது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:
15. ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான்.
16. அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைச் சொஸ்தமாக்க அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.
17. இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
18. இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான்.
19. அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள்.
20. அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாதகாரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
21. இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.
22. அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.
23. அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.
24. அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.
25. அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.
26. அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.
27. ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.
1. அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள்.
2. இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி:
3. நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
4. ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.
5. இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்.
6. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
7. இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
8. உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
9. உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
10. இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
11. மனுஷகுமாரன் கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார்.
12. உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ?
13. அவன் அதைக் கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
14. இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
15. உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.
16. அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.
17. அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.
18. பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
19. அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
20. ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
21. அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.
22. அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
23. எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப் பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
24. அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.
25. கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.
26. அப்பொழுது, அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்.
27. அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.
28. அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு, அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.
29. அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.
30. அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்.
31. நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.
32. அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.
33. நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,
34. அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
35. நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
1. இயேசு இந்த வசனங்களைச் சொல்லி முடித்தபின்பு, அவர் கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவின் எல்லைகளில் வந்தார்.
2. திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவ்விடத்தில் அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
3. அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.
4. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,
5. இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
6. இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
7. அதற்கு அவர்கள்: அப்படியானால், தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள்.
8. அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயகடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை.
9. ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10. அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: மனைவியைப்பற்றிப் புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம்பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள்.
11. அதற்கு அவர்: வரம்பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
12. தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்.
13. அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கைகளை வைத்து ஜெபம்பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
14. இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,
15. அவர்கள்மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப்போனார்.
16. அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்.
17. அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
18. அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக;
19. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார்.
20. அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்.
21. அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
22. அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.
23. அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
24. மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25. அவருடைய சீஷர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் ரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
26. இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
27. அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான்.
28. அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
29. என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;
30. ஆகிலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.
1. பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.
2. வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான்.
3. மூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு:
4. நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள்.
5. மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான்.
6. பதினோராம் மணிவேளையிலும் அவன் போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.
7. அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான்.
8. சாயங்காலத்தில், திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் காரியக்காரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான்.
9. அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.
10. முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.
11. வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை நோக்கி:
12. பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
13. அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா?
14. உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்.
15. என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.
16. இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
17. இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீஷரையும் தனியே அழைத்து:
18. இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து,
19. அவரைப் பரியாசம்பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
20. அப்பொழுது, செபெதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.
21. அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலதுபாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள்செய்யவேண்டும் என்றாள்.
22. இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள்.
23. அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலதுபாரிசத்திலும் என் இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
24. மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்பேரிலும் எரிச்சலானார்கள்.
25. அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
26. உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.
27. உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.
28. அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
29. அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப்போகையில், திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்.
30. அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
31. அவர்கள் பேசாதிருக்கும்படி ஜனங்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள்.
32. இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார்.
33. அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.
34. இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.
1. அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷரில் இரண்டுபேரை நோக்கி:
2. உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்.
3. ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
4. இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,
5. தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
6. சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,
7. கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.
8. திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.
9. முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
10. அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.
11. அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.
12. இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து:
13. என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்.
14. அப்பொழுது, குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
15. அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து,
16. அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.
17. அவர்களை விட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவுக்குப் போய், அங்கே இராத்தங்கினார்.
18. காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பிவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.
19. அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று.
20. சீஷர்கள் அதைக் கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப்போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.
21. இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப்பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
22. மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
23. அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணுகையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.
24. இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.
25. யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;
26. மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி,
27. இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.
28. ஆயினும் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.
29. அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான்.
30. இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.
31. இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
32. ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார்.
33. வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான்.
34. கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான்.
35. தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
36. பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.
37. கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
38. தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
39. அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள்.
40. அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார்.
41. அதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்றகாலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள்.
42. இயேசு அவர்களை நோக்கி: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?
43. ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.
44. இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
45. பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து,
46. அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.
1. இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்:
2. பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
3. அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள்.
4. அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.
5. அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைபண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய்விட்டார்கள்.
6. மற்றவர்கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள்.
7. ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.
8. அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள்.
9. ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான்.
10. அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது.
11. விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு:
12. சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.
13. அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.
14. அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
15. அப்பொழுது, பரிசேயர் போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைபண்ணி,
16. தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
17. ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
18. இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
19. வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
20. அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.
21. இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
22. அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
23. உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையத்தினம் அவரிடத்தில் வந்து:
24. போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.
25. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான்.
26. அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள்.
27. எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
28. ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை விவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.
29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
30. உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;
31. மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?
32. தேவன் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார் என்றார்.
33. ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
34. அவர் சதுசேயரை வாயடைத்தார் என்று பரிசேயர் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
35. அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:
36. போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.
37. இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
38. இது முதலாம் பிரதான கற்பனை.
39. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
40. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
41. பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி:
42. கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
43. அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?
44. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
45. தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
46. அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
1. பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி:
2. வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;
3. ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.
4. சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.
5. தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி,
6. விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,
7. சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்.
8. நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.
9. பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
10. நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
11. உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.
12. தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
13. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை.
14. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.
15. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.
16. குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
17. மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ?
18. மேலும், எவனாகிலும் பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
19. மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?
20. ஆகையால், பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
21. தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
22. வானத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
23. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.
24. குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்.
25. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.
26. குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.
27. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.
28. அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
29. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து:
30. எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.
31. ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
32. நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள்.
33. சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?
34. ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்;
35. நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.
36. இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
37. எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
38. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.
39. கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
1. இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.
2. இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
3. பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;
5. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
6. யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது.
7. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
8. இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
9. அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
10. அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
11. அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
12. அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.
13. முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
14. ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
15. மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,
16. யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.
17. வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன்.
18. வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன்.
19. அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.
20. நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
21. ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
22. அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.
23. அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.
24. ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
25. இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
26. ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.
27. மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.
28. பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.
29. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.
30. அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
31. வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.
32. அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.
33. அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
34. இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
35. வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
36. அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
37. நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
38. எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்,
39. ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.
40. அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.
41. இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.
42. உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.
43. திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்.
44. நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
45. ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?
46. எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான்.
47. தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
48. அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,
49. தன் உடன்வேலைக்காரரை அடிக்கத் தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால்,
50. அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து,
51. அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
1. அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.
2. அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.
3. புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை.
4. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.
5. மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.
6. நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.
7. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.
8. புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.
9. புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
10. அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.
11. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.
12. அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
13. மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
14. அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.
15. அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.
16. ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான்.
17. அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான்.
18. ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.
19. வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.
20. அப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.
21. அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
22. இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.
23. அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
24. ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன்.
25. ஆகையால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.
26. அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.
27. அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே, என்று சொல்லி,
28. அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள்.
29. உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
30. பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.
31. அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.
32. அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,
33. செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.
34. அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
35. பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;
36. வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.
37. அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?
38. எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?
39. எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.
40. அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
41. அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.
42. பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை;
43. அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.
44. அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.
45. அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
46. அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
1. இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, அவர் தம்முடைய சீஷரை நோக்கி:
2. இரண்டுநாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.
3. அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து,
4. இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள்.
5. ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.
6. இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில்,
7. ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்.
8. அவருடைய சீஷர்கள் அதைக் கண்டு விசனமடைந்து: இந்த வீண்செலவு என்னத்திற்கு?
9. இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.
10. இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.
11. தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன்.
12. இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது.
13. இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
14. அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்:
15. நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.
16. அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்.
17. புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
18. அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார்.
19. இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
20. சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார்.
21. அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
22. அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்.
23. அவர் பிரதியுத்தரமாக: என்னோடேகூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.
24. மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.
25. அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.
26. அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.
27. பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;
28. இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
29. இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
30. அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.
31. அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
32. ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார்.
33. பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றான்.
34. இயேசு அவனை நோக்கி: இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
35. அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீஷர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள்.
36. அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;
37. பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
38. அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி,
39. சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
40. பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா?
41. நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
42. அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
43. அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது.
44. அவர் மறுபடியும் அவர்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
45. பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளை வந்தது.
46. என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார்.
47. அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.
48. அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
49. உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.
50. இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவின்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.
51. அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கை நீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.
52. அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.
53. நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?
54. அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்.
55. அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே.
56. ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.
57. இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்.
58. பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப் பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான்.
59. பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்;
60. ஒருவரும் அகப்படவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து:
61. தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்றுநாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள்.
62. அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.
63. இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.
64. அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
65. அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே.
66. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள்.
67. அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து:
68. கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
69. அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடேகூட இருந்தாய் என்றாள்.
70. அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று, எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான்.
71. அவன், வாசல் மண்டபத்திற்குப் போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடேகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள்.
72. அவனோ: அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும் மறுதலித்தான்.
73. சற்றுநேரத்துக்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள்.
74. அப்பொழுது அவன்: அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று.
75. அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துக்கொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
1. விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி,
2. அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.
3. அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து:
4. குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.
5. அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
6. பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொல்லி,
7. ஆலோசனைபண்ணினபின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.
8. இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள்வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.
9. இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,
10. கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.
11. இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
12. பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
13. அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.
14. அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.
15. காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது.
16. அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான்.
17. பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து,
18. அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான்.
19. அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச்சொன்னாள்.
20. பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும், இயேசுவைக் கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள்.
21. தேசாதிபதி ஜனங்களை நோக்கி: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள்.
22. பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள்.
23. தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
24. கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.
25. அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.
26. அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
27. அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமனையிலே கொண்டுபோய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து,
28. அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி,
29. முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி,
30. அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்.
31. அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.
32. போகையில், சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள்.
33. கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது,
34. கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.
35. அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
36. அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.
37. அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.
38. அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.
39. அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:
40. தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள்.
41. அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி:
42. மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.
43. தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.
44. அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.
45. ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.
46. ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
47. அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
48. உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.
49. மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.
50. இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
51. அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
52. கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
53. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
54. நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.
55. மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
56. அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள்.
57. சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து,
58. பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான்.
59. யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி,
60. தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப் போனான்.
61. அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள்.
62. ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து:
63. ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்றுநாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.
64. ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள்.
65. அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்றான்.
66. அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.
1. ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்.
2. அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.
3. அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.
4. காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்.
5. தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.
6. அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;
7. சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்குமுன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.
8. அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
9. அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
10. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
11. அவர்கள் போகையில், காவல்சேவகரில் சிலர் நகரத்துக்குள்ளே வந்து, நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.
12. இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:
13. நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
14. இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.
15. அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.
16. பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
17. அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
18. அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
மாற்கு
1. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.
2. இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;
3. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;
4. யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.
5. அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத்திற்குப்போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
6. யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான்.
7. அவன்: என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல.
8. நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான்.
9. அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
10. அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.
11. அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
12. உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார்.
13. அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்.
14. யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து:
15. காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
16. அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார்.
17. இயேசு அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
18. உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
19. அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு,
20. உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
21. பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, போதகம் பண்ணினார்.
22. அவர் வேதபாரகரைப்போலப் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால், அவருடைய போதகத்தைக்குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
23. அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான்.
24. அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்.
25. அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்.
26. உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது.
27. எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
28. அதுமுதல் அவருடைய கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று.
29. உடனே அவர்கள் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள்.
30. அங்கே சீமோனுடைய மாமி ஜுரமாய்க் கிடந்தாள்; உடனே அவர்கள் அவளைக்குறித்து அவருக்குச் சொன்னார்கள்.
31. அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
32. சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, சகல பிணியாளிகளையும், பிசாசுபிடித்தவர்களையும், அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
33. பட்டணத்தார் எல்லாரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.
34. பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.
35. அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
36. சீமோனும் அவனோடே இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய்,
37. அவரைக் கண்டபோது: உம்மை எல்லாரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.
38. அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ண வேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி;
39. கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் பிரசங்கம் பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.
40. அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான்.
41. இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.
42. இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான்.
43. அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு;
44. ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்.
45. அவனோ புறப்பட்டுப்போய், இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய்ப் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.
1. சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டிலிருக்கிறாரென்று ஜனங்கள் கேள்விப்பட்டு;
2. உடனே வாசலுக்கு முன்னும் நிற்க இடம்போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார்கள்; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார்.
3. அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்;
4. ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.
5. இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
6. அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்:
7. இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.
8. அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன?
9. உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது?
10. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி:
11. நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
12. உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்குமுன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
13. அவர் மறுபடியும் புறப்பட்டுக் கடலருகே போனார்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்குப் போதகம்பண்ணினார்.
14. அவர் நடந்துபோகையில், அல்பேயுவின் குமாரனாகிய லேவி ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.
15. அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் அவரோடுகூட வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள்.
16. அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதை வேதபாரகரும் பரிசேயரும் கண்டு, அவருடைய சீஷரை நோக்கி: அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
17. இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
18. யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள்.
19. அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே.
20. மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள்.
21. ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடு இணைக்கமாட்டான், இணைத்தால், அதினோடே இணைத்த புதியதுண்டு பழையதை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும்.
22. ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால், புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்; புதுரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும் என்றார்.
23. பின்பு, அவர் ஓய்வுநாளில் பயிர் வழியே போனார்; அவருடைய சீஷர்கள் கூட நடந்துபோகையில், கதிர்களைக் கொய்யத் தொடங்கினார்கள்.
24. பரிசேயர் அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள்.
25. அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது,
26. அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தெய்வசமுகத்து அப்பங்களைத் தானும் புசித்துத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார்.
27. பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;
28. ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
1. மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.
2. அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
3. அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்று சொல்லி;
4. அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக் காப்பதோ அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள்.
5. அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.
6. உடனே பரிசேயர் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண்ணினார்கள்.
7. இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம்விட்டு, கடலோரத்துக்குப் போனார்.
8. கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள். அல்லாமலும் தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளிலுமிருந்து திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, அவரிடத்தில் வந்தார்கள்.
9. அவர் அநேகரைச் சொஸ்தமாக்கினார். நோயாளிகளெல்லாரும் அதை அறிந்து அவரைத் தொடவேண்டுமென்று அவரிடத்தில் நெருங்கிவந்தார்கள்.
10. ஜனங்கள் திரளாயிருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு, தமக்காக ஒரு படவை ஆயத்தம்பண்ணவேண்டுமென்று, தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.
11. அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.
12. தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
13. பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.
14. அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்,
15. வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.
16. அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார்.
17. செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார்,
18. அந்திரேயா, பிலிப்பு, பற்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன்,
19. அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
20. பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள்.
21. அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.
22. எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
23. அவர்களை அவர் அழைத்து, உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?
24. ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே.
25. ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே.
26. சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற்கமாட்டாமல், அழிந்துபோவானே.
27. பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடைமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான்.
28. மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;
29. ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார்.
30. அசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார்.
31. அப்பொழுது அவருடைய சகோதரரும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.
32. அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.
33. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி;
34. தம்மைச் சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து: இதோ, என் தாயும், என் சகோதரரும் இவர்களே!
35. தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
1. அவர் மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கடற்கரையில் நின்றார்கள்.
2. அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது:
3. கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
4. அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
5. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது;
6. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று.
7. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி, அதை நெருக்கிப்போட்டது.
8. சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.
9. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார்.
10. அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள்.
11. அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
12. அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.
13. பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?
14. விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.
15. வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள்.
16. அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும்,
17. தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.
18. வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்.
19. இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்.
20. வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் என்றார்.
21. பின்னும் அவர் அவர்களை நோக்கி: விளக்கைத் தண்டின்மேல் வைக்கிறதற்கேயன்றி, மரக்காலின் கீழாகிலும், கட்டிலின் கீழாகிலும், வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?
22. வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை.
23. கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.
24. பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள். எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும், கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்.
25. உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
26. பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து;
27. இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.
28. எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும்.
29. பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்.
30. பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?
31. அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது;
32. விதைக்கப்பட்ட பின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்.
33. அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.
34. உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.
35. அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்.
36. அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது.
37. அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று.
38. கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள்.
39. அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
40. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.
41. அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
1. பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள்.
2. அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான்.
3. அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது.
4. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது.
5. அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான்.
6. அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு:
7. இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்குத் தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.
8. ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார்.
9. அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி,
10. தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.
11. அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது.
12. அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன.
13. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக் கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது.
14. பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு;
15. இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
16. பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் சம்பவித்ததைக் கண்டவர்களும் அவர்களுக்கு விவரமாய்ச் சொன்னார்கள்.
17. அப்பொழுது தங்கள் எல்லைகளை விட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
18. அப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது, பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக்கொண்டான்.
19. இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்.
20. அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
21. இயேசு படவில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்திலிருந்தபோது, திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
22. அப்பொழுது, ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்து:
23. என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.
24. அவர் அவனோடேகூடப் போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்று, அவரை நெருக்கினார்கள்.
25. அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ,
26. அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது,
27. இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி;
28. ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.
29. உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.
30. உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்.
31. அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.
32. இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார்.
33. தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள்.
34. அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.
35. அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்.
36. அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத்தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி;
37. பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறொருவரும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்;
38. ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து, சந்தடியையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு,
39. உள்ளே பிரவேசித்து: நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.
40. அதற்காக அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தம்மோடே வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளையிருந்த இடத்தில் பிரவேசித்து,
41. பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.
42. உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.
43. அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரம் கொடுக்கும்படி சொன்னார்.
1. அவர் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தாம் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீஷரும் அவரோடேகூட வந்தார்கள்.
2. ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத் தொடங்கினார். அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கேயிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
3. இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள்.
4. இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
5. அங்கே அவர் சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல்,
6. அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார்.
7. அவர் பன்னிருவரையும் அழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரங்கொடுத்து,
8. வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும், எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியை மாத்திரம் எடுத்துக்கொண்டுபோகவும்;
9. பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார்.
10. பின்பு அவர்களை நோக்கி: நீங்கள் எங்கேயாகிலும் ஒரு வீட்டில் பிரவேசித்தால், அவ்விடத்தை விட்டுப் புறப்படுகிறவரைக்கும் அங்கேதானே தங்கியிருங்கள்.
11. எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக் கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.
12. அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து;
13. அநேகம் பிசாசுகளைத் துரத்தி, அநேகம் நோயாளிகளை எண்ணெய் பூசிச் சொஸ்தமாக்கினார்கள்.
14. அவருடைய பேர் பிரசித்தமானபடியினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால் அவனிடத்தில் இந்தப் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.
15. சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறு சிலர்: அவர், ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போலிருக்கிறாரென்று சொன்னார்கள்.
16. ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன் நான் சிரச்சேதம் பண்ணின யோவான்தான்; அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றான்.
17. ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டபோது,
18. யோவான் ஏரோதை நோக்கி: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று சொன்னதினிமித்தம், ஏரோது சேவகரை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.
19. ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆகிலும் அவளால் கூடாமற்போயிற்று.
20. அதேனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தான்.
21. பின்பு சமயம் வாய்த்தது; எப்படியென்றால், ஏரோது தன் ஜென்மநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், சேனாதிபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனுஷருக்கும் ஒரு விருந்து பண்ணினபோது,
22. ஏரோதியாளின் குமாரத்தி சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடேகூடப் பந்தியிருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடத்தில் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொன்னதுமல்லாமல்;
23. நீ என்னிடத்தில் எதைக் கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு ஆணையும் இட்டான்.
24. அப்பொழுது, அவள் வெளியே போய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயினிடத்தில் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள்.
25. உடனே அவள் ராஜாவினிடத்தில் சீக்கிரமாய் வந்து: நீர் இப்பொழுதே ஒரு தாலத்தில் யோவான்ஸ்நானனுடைய தலையை எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள்.
26. அப்பொழுது ராஜா மிகுந்த துக்கமடைந்தான்; ஆகிலும், ஆணையினிமித்தமும், கூடப்பந்தியிருந்தவர்களினிமித்தமும், அவளுக்கு அதை மறுக்க மனதில்லாமல்;
27. உடனே அவனுடைய தலையைக் கொண்டுவரும்படி சேவகனுக்குக் கட்டளையிட்டு அனுப்பினான்.
28. அந்தப்படி அவன் போய், காவற்கூடத்திலே அவனைச் சிரச்சேதம்பண்ணி, அவன் தலையை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறுபெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயினிடத்தில் கொடுத்தாள்.
29. அவனுடைய சீஷர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் உடலை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
30. அப்பொழுது அப்போஸ்தலர் இயேசுவினிடத்தில் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் உபதேசித்தவைகள் யாவையும் அவருக்கு அறிவித்தார்கள்.
31. அவர் அவர்களை நோக்கி: வனாந்தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்; ஏனெனில், வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால் போஜனம் பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில்லாதிருந்தது.
32. அப்படியே அவர்கள் தனிமையாய் ஒரு படவில் ஏறி வனாந்தரமான ஓர் இடத்திற்குப் போனார்கள்.
33. அவர்கள் புறப்பட்டுப் போகிறதை ஜனங்கள் கண்டார்கள். அவரை அறிந்த அநேகர் சகல பட்டணங்களிலுமிருந்து கால்நடையாய் அவ்விடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்னே அங்கே சேர்ந்து, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
34. இயேசு கரையில் வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.
35. வெகுநேரம் சென்றபின்பு, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், வெகுநேரமுமாயிற்று;
36. புசிக்கிறதற்கும் இவர்களிடத்தில் ஒன்றுமில்லை; ஆகையால் இவர்கள் சுற்றியிருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் போய், தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
37. அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள்.
38. அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் உண்டு என்றார்கள்.
39. அப்பொழுது எல்லாரையும் பசும்புல்லின்மேல் பந்திபந்தியாக உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
40. அப்படியே வரிசை வரிசையாய், நூறுநூறுபேராகவும் ஐம்பதைம்பதுபேராகவும், உட்கார்ந்தார்கள்.
41. அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப்பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார்.
42. எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்.
43. மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.
44. அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.
45. அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி, அவர்களைத் துரிதப்படுத்தினார்.
46. அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார்.
47. சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார்.
48. அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல் காணப்பட்டார்.
49. அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள்.
50. அவர்களெல்லாரும் அவரைக் கண்டு கலக்கமடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி,
51. அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.
52. அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாயிருந்தபடியினால் அப்பங்களைக் குறித்து அவர்கள் உணராமற்போனார்கள்.
53. அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்தென்னும் நாட்டிற்கு வந்து, கரைபிடித்தார்கள்.
54. அவர்கள் படவிலிருந்து இறங்கினவுடனே, ஜனங்கள் அவரை அறிந்து,
55. அந்தச் சுற்றுப்புறமெங்கும் ஓடித்திரிந்து, பிணியாளிகளைப் படுக்கைகளில் கிடத்தி, அவர் வந்திருக்கிறாரென்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்து கொண்டுவந்தார்கள்.
56. அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.
1. எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
2. அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள்.
3. ஏனெனில் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிடமாட்டார்கள்.
4. கடையிலிருந்து வரும்போதும் ஸ்நானம்பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும் கிண்ணங்களையும் செப்புக்குடங்களையும் மணைகளையும் கழுவுகிறதுமல்லாமல், வேறு அநேக ஆசாரங்களையும் கைக்கொண்டுவருவார்கள்.
5. அப்பொழுது, அந்தப் பரிசேயரும் வேதபாரகரும் அவரை நோக்கி: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள்.
6. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும்,
7. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.
8. நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்துவருகிறீர்கள் என்றார்.
9. பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்குத் தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது.
10. எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.
11. நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி,
12. அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்;
13. நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.
14. பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள்.
15. மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்.
16. கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.
17. அவர் ஜனங்களைவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.
18. அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?
19. அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும்.
20. மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
21. எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
22. களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
23. பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
24. பின்பு, அவர் எழுந்து அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய், ஒரு வீட்டுக்குள் பிரவேசித்து, ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும், அவர் மறைவாயிருக்கக் கூடாமற்போயிற்று.
25. அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.
26. அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள்.
27. இயேசு அவளை நோக்கி: முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
28. அதற்கு அவள்: மெய்தான், ஆண்டவரே, ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
29. அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம். பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார்.
30. அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்.
31. மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார்.
32. அங்கே கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்.
33. அப்பொழுது, அவர் அவனை ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டு;
34. வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்.
35. உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான்.
36. அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆகிலும் எவ்வளவு அதிகமாய் அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் அதைப் பிரசித்தம்பண்ணி,
37. எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்; செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.
1. அந்த நாட்களிலே திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கையில், அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது, இயேசு தம்முடைய சீஷரை அழைத்து:
2. ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்றுநாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்.
3. இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால், நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.
4. அதற்கு அவருடைய சீஷர்கள்: இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை பேர்களைத் திருப்தியாக்கக்கூடும் என்றார்கள்.
5. அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் உண்டு என்றார்கள்.
6. அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையிலே பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்; அவர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.
7. சில சிறுமீன்களும் அவர்களிடத்தில் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறும்படி சொன்னார்.
8. அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள்.
9. சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நாலாயிரம்பேராயிருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்.
10. உடனே அவர் தம்முடைய சீஷரோடேகூடப் படவில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளில் வந்தார்.
11. அப்பொழுது பரிசேயர் வந்து அவரோடே தர்க்கிக்கத்தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
12. அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
13. அவர்களை விட்டு மறுபடியும் படவில் ஏறி, அக்கரைக்குப் போனார்.
14. சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம் மாத்திரம் இருந்தது.
15. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார்.
16. அதற்கு அவர்கள்: நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
17. இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா?
18. உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா?
19. நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். பன்னிரண்டு என்றார்கள்.
20. நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள்.
21. அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
22. பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.
23. அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து: எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார்.
24. அவன் ஏறிட்டுப்பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான்.
25. பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்.
26. பின்பு அவர் அவனை நோக்கி: நீ கிராமத்தில் பிரவேசியாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
27. பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு, பிலிப்புச் செசரியா பட்டணத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
28. அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
29. அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான்.
30. அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.
31. அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
32. இந்த வார்த்தையை அவர் தாராளமாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.
33. அவர் திரும்பித் தம்முடைய சீஷரைப் பார்த்து, பேதுருவை நோக்கி: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்து கொண்டார்.
34. பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
35. தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
36. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
37. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
38. ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமைபொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார்.
1. அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
2. ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்.
3. அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது.
4. அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.
5. அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.
6. அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான்.
7. அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
8. உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது, இயேசு ஒருவரைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.
9. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, அவர் அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் கண்டவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
10. மரித்தோரிலிருந்து எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரிடத்தில் ஒருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு:
11. எலியா முந்தி வரவேண்டுமென்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
12. அவர் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்; அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு, அவமதிக்கப்படுவாரென்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார்.
13. ஆனாலும் எலியா வந்தாயிற்று, அவனைக்குறித்து எழுதியிருக்கிற பிரகாரம் தங்களுக்கு இஷ்டமானபடி அவனுக்குச் செய்தார்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
14. பின்பு அவர் சீஷரிடத்தில் வந்தபோது, அவர்களைச் சுற்றித் திரளான ஜனங்கள் நிற்கிறதையும், அவர்களோடே வேதபாரகர் தர்க்கிக்கிறதையும் கண்டார்.
15. ஜனங்களெல்லாரும் அவரைக் கண்டவுடனே மிகவும் ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவருக்கு வந்தனஞ்செய்தார்கள்.
16. அவர் வேதபாரகரை நோக்கி: நீங்கள் இவர்களோடே என்னத்தைக் குறித்துத் தர்க்கம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார்.
17. அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்.
18. அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன்; அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.
19. அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
20. அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்.
21. அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயதுமுதற்கொண்டே உண்டாயிருக்கிறது;
22. இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று. நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள்மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.
23. இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
24. உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்.
25. அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்.
26. அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போல் கிடந்தான்.
27. இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான்.
28. வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள்.
29. அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.
30. பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அதை ஒருவரும் அறியாதிருக்க வேண்டுமென்று விரும்பினார்.
31. ஏனெனில், மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்.
32. அவர்களோ அந்த வார்த்தையை அறிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள்.
33. அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார்.
34. அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள்.
35. அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து: எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன் என்று சொல்லி;
36. ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு:
37. இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்.
38. அப்பொழுது யோவான் அவரை நோக்கி: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால், அவனைத் தடுத்தோம் என்றான்.
39. அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ் செய்கிறவன் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான்.
40. நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான்.
41. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
42. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
43. உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
44. அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.
45. உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
46. அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.
47. உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
48. அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.
49. எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.
50. உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்.
1. அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மறுபடியும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார்.
2. அப்பொழுது பரிசேயர், அவரைச் சோதிக்கவேண்டுமென்று, அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.
3. அவர் பிரதியுத்தரமாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார்.
4. அதற்கு அவர்கள்: தள்ளுதற்சீட்டை எழுதிக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவுகொடுத்திருக்கிறார் என்றார்கள்.
5. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்கள் இருதயகடினத்தினிமித்தம் இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான்.
6. ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.
7. இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்;
8. அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்.
9. ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
10. பின்பு வீட்டிலே அவருடைய சீஷர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மறுபடியும் அவரிடத்தில் விசாரித்தார்கள்.
11. அப்பொழுது அவர்: எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.
12. மனைவியும் தன் புருஷனைத் தள்ளிவிட்டு, வேறொருவனை விவாகம்பண்ணினால், விபசாரஞ்செய்கிறவளாயிருப்பாள் என்றார்.
13. அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
14. இயேசு அதைக் கண்டு, விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
15. எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
16. அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.
17. பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்.
18. அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.
19. விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார்.
20. அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.
21. இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார்.
22. அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான்.
23. அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்.
24. சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது!
25. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.
26. அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
27. இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
28. அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான்.
29. அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,
30. இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
31. ஆகிலும் முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.
32. பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகையில், இயேசு அவர்களுக்கு முன்னே நடந்துபோனார்; அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்:
33. இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்.
34. அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
35. அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள்.
36. அவர் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
37. அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலதுபாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள்.
38. இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்களால் கூடுமா என்றார்.
39. அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.
40. ஆனாலும் என் வலதுபாரிசத்திலும் என் இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
41. மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின் மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள்.
42. அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
43. உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.
44. உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.
45. அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
46. பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
47. அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான்.
48. அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று, முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான்.
49. இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.
50. உடனே அவன் தன் மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான்.
51. இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
52. இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.
1. அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி:
2. உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.
3. ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
4. அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள்.
5. அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் குட்டியை அவிழ்க்கிறது என்னவென்றார்கள்.
6. இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள்.
7. அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார்.
8. அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.
9. முன்நடப்பாரும் பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;
10. கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
11. அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்தில் பிரவேசித்து, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து, சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூடப் பெத்தானியாவுக்குப் போனார்.
12. மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.
13. அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை.
14. அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்.
15. அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து,
16. ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டுபோகவிடாமல்:
17. என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.
18. அதை வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள்.
19. சாயங்காலமானபோது அவர் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார்.
20. மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள்.
21. பேதுரு நினைவுகூர்ந்து, அவரை நோக்கி: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான்.
22. இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.
23. எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
24. ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
25. நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.
26. நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார்.
27. அவர்கள் மறுபடியும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கையில், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் வந்து:
28. நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள்.
29. இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு உத்தரவு சொல்லுங்கள், அப்பொழுது நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.
30. யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ, மனுஷரால் உண்டாயிற்றோ, எனக்கு உத்தரவு சொல்லுங்கள் என்றார்.
31. அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லையென்று கேட்பார்.
32. மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படவேண்டியதாயிருக்கும்; எல்லாரும் யோவானை மெய்யாகத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி;
33. இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.
1. பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.
2. தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டுவரும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்.
3. அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள்.
4. பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள்.
5. மறுபடியும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள்.
6. அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான்.
7. தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
8. அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள்.
9. அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா?
10. வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று;
11. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக்கவில்லையா என்றார்.
12. இந்த உவமையைத் தங்களைக்குறித்துச் சொன்னாரென்று அவர்கள் அறிந்து, அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் ஜனத்துக்குப் பயந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
13. அவர்கள், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படிக்கு, பரிசேயரிலும் ஏரோதியரிலும் சிலரை அவரிடத்தில் அனுப்பினார்கள்.
14. அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சணியம் இல்லாதவராய்த் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? நாம் கொடுக்கலாமோ, கொடுக்கக்கூடாதோ? என்று கேட்டார்கள்.
15. அவர்களுடைய மாயத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்க்கும்படிக்கு ஒரு பணத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
16. அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்; இராயனுடையது என்றார்கள்.
17. அதற்கு இயேசு: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
18. உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர் அவரிடத்தில் வந்து:
19. போதகரே, ஒருவனுடைய சகோதரன் சந்தானமில்லாமல் தன் மனைவியை விட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டுமென்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
20. இப்படியிருக்க, ஏழுபேர் சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனான்.
21. இரண்டாம் சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் சந்தானமில்லாமல் இறந்துபோனான். மூன்றாம் சகோதரனும் அப்படியேயானான்.
22. ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
23. ஆகையால், உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? ஏழுபேரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தார்களே என்று கேட்டார்கள்.
24. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங் கொள்ளுகிறீர்கள்?
25. மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும்போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள்.
26. மரித்தோர் எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாய் இருக்கிறேன் என்று, தேவன் முட்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் ஆகமத்தில் அவனுக்குச் சொன்னதை, நீங்கள் வாசிக்கவில்லையா?
27. அவர் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார்; ஆகையால் நீங்கள் மிகவும் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள் என்றார்.
28. வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.
29. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
30. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
31. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.
32. அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை.
33. முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப்பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்.
34. அவன் விவேகமாய் உத்தரவுசொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார். அதன்பின்பு ஒருவரும் அவரிடத்தில் யாதொரு கேள்வியுங் கேட்கத் துணியவில்லை.
35. இயேசு தேவாலயத்திலே உபதேசம்பண்ணுகையில், அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்?
36. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே.
37. தாவீதுதானே அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அநேக ஜனங்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள்.
38. பின்னும் அவர் உபதேசம்பண்ணுகையில் அவர்களை நோக்கி: நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும்,
39. ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
40. விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம் பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.
41. இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள்.
42. ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப் போட்டாள்.
43. அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்;
44. அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.
1. அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக் கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.
2. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பெரிய கட்டடங்களைக் காண்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார்.
3. பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்துவந்து:
4. இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
5. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
6. ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
7. யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காதேயுங்கள்; இவைகள் சம்பவிக்கவேண்டியதே. ஆனாலும், முடிவு உடனே வராது.
8. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், பஞ்சங்களும் கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்.
9. நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெபஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள்.
10. சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்.
11. அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசுவோமென்று முன்னதாகக் கவலைப்படாமலும் சிந்தியாமலுமிருங்கள்; அந்த நாழிகையிலே உங்களுக்கு எது அருள் செய்யப்படுமோ அதையே பேசுங்கள்; ஏனெனில் பேசுகிறவர்கள் நீங்களல்ல, பரிசுத்த ஆவியே பேசுகிறவர்.
12. அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள்.
13. என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
14. மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்; அது நிற்கத்தகாத இடத்திலே நீங்கள் அதை நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.
15. வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டுக்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாகிலும் எடுத்துக்கொள்ள உள்ளே போகாமலும் இருக்கக்கடவன்.
16. வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரத்தை எடுப்பதற்குப் பின்னிட்டுத் திரும்பாதிருக்கக்கடவன்.
17. அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ!
18. நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலே சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
19. ஏனெனில் தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும்.
20. கர்த்தர் அந்நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தமோ, அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.
21. அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கேயிருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால், நம்பாதேயுங்கள்.
22. ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
23. நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
24. அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்;
25. வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும்.
26. அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
27. அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களைப் பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்.
28. அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.
29. அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
30. இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
31. வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
32. அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.
33. அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.
34. ஒரு மனுஷன் தன் வீட்டைவிட்டு, புறத்தேசத்துக்குப் பிரயாணம்போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காக்கிறவனுக்குக் கற்பிப்பான்.
35. அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.
36. நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்.
37. நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.
1. இரண்டு நாளைக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள்.
2. ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகாதபடிக்கு, பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.
3. அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்.
4. அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்?
5. இதை முந்நூறு பணத்துக்கு அதிகமான கிரயத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைக்குறித்து முறுமுறுத்தார்கள்.
6. இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.
7. தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன்.
8. இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்.
9. இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10. அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியருக்குக் காட்டிக்கொடுக்கும்படி அவர்களிடத்திற்குப் போனான்.
11. அவர்கள் அதைக் கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுப்போம் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்.
12. பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற முதலாம் நாளிலே, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
13. அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான், அவன் பின்னே போங்கள்;
14. அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ அந்த வீட்டு எஜமானை நீங்கள் நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள்.
15. அவன் கம்பளம் முதலானவைகள் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற விஸ்தாரமான மேல்வீட்டறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே நமக்காக ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
16. அப்படியே, அவருடைய சீஷர் புறப்பட்டு நகரத்தில் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
17. சாயங்காலமானபோது, அவர் பன்னிருவரோடுங்கூட அவ்விடத்திற்கு வந்தார்.
18. அவர்கள் பந்தியமர்ந்து போஜனம்பண்ணுகையில், இயேசு அவர்களை நோக்கி: என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
19. அப்பொழுது அவர்கள் துக்கமடைந்து: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடத்தில் கேட்கத் தொடங்கினார்கள்.
20. அவர் பிரதியுத்தரமாக: என்னுடனேகூடத் தாலத்தில் கையிடுகிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன் என்று சொல்லி;
21. மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ! அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.
22. அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.
23. பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள்.
24. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
25. நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
26. அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.
27. அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
28. ஆகிலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார்.
29. அதற்குப் பேதுரு: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன் என்றான்.
30. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே, நீ மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
31. அதற்கு அவன்: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான்; எல்லாரும் அப்படியே சொன்னார்கள்.
32. பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;
33. பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
34. அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,
35. சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டு:
36. அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்.
37. பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?
38. நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
39. அவர் மறுபடியும் போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
40. அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால், தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள்.
41. அவர் மூன்றாந்தரம் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.
42. என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார்.
43. உடனே, அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.
44. அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான்.
45. அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.
46. அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.
47. அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.
48. இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;
49. நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக் கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்றார்.
50. அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.
51. ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள்.
52. அவன் தன் துப்பட்டியைப் போட்டு விட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போனான்.
53. இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே ஆசாரியர் மூப்பர் வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள்.
54. பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் வந்து, சேவகரோடேகூட உட்கார்ந்து, நெருப்பண்டையிலே குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.
55. அப்பொழுது பிரதான ஆசாரியரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகச் சாட்சி தேடினார்கள்; அகப்படவில்லை.
56. அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒவ்வவில்லை.
57. அப்பொழுது சிலர் எழுந்து, கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று,
58. அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள்.
59. அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வாமற்போயிற்று.
60. அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக் குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
61. அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.
62. அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்.
63. பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன?
64. தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.
65. அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.
66. அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்து,
67. குளிர்காய்ந்துகொண்டிருக்கிற பேதுருவைக் கண்டு, அவனை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடே இருந்தாய் என்றாள்.
68. அதற்கு அவன்: நான் அறியேன்; நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வெளியே வாசல் மண்டபத்துக்குப் போனான்; அப்பொழுது சேவல் கூவிற்று.
69. வேலைக்காரி அவனை மறுபடியும் கண்டு: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள்.
70. அவன் மறுபடியும் மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு மறுபடியும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: மெய்யாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள்.
71. அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான்.
72. உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரங் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவுகூர்ந்து, மிகவும் அழுதான்.
1. பொழுது விடிந்தவுடனே, பிரதான ஆசாரியரும் மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, இயேசுவைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.
2. பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
3. பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங் குற்றங்களைச் சாட்டினார்கள். அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
4. அப்பொழுது பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, அதற்கு நீ உத்தரவு ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
5. இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.
6. காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது.
7. கலகம்பண்ணி அந்தக் கலகத்தில் கொலைசெய்து, அதற்காகக் காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான்.
8. ஜனங்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டுமென்று சத்தமிட்டுக் கேட்டுக்கொள்ளத் தொடங்கினார்கள்.
9. பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்களென்று பிலாத்து அறிந்து,
10. அவர்களை நோக்கி: நான் யூதருடைய ராஜாவை உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்களா என்று கேட்டான்.
11. பரபாசைத் தங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளும்படி, பிரதான ஆசாரியர்கள் அவர்களை ஏவிவிட்டார்கள்.
12. பிலாத்து மறுபடியும் அவர்களை நோக்கி: அப்படியானால், யூதருடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
13. அவனைச் சிலுவையில் அறையும் என்று மறுபடியும் சத்தமிட்டுச் சொன்னார்கள்.
14. அதற்குப் பிலாத்து: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று பின்னும் அதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
15. அப்பொழுது பிலாத்து ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
16. அப்பொழுது போர்ச்சேவகர் அவரைத் தேசாதிபதியின் அரமனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அவ்விடத்தில் போர்ச்சேவகருடைய கூட்டமுழுவதையும் கூடிவரச்செய்து,
17. சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி:
18. யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,
19. அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.
20. அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.
21. சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்.
22. கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய்,
23. வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
24. அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்.
25. அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது.
26. அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின்மேல் கட்டினார்கள்.
27. அல்லாமலும், அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
28. அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று.
29. அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே,
30. உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.
31. அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களுக்குள்ளே பரியாசம்பண்ணி: மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை.
32. நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.
33. ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.
34. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
35. அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
36. ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்க வருவானோ பார்ப்போம் என்றான்.
37. இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
38. அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.
39. அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான்.
40. சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய்துவந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,
41. அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள்.
42. ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது,
43. கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
44. அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான்.
45. நூற்றுக்கு அதிபதியினாலே அதை அறிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பினிடத்தில் கொடுத்தான்.
46. அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான்.
47. அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.
1. ஓய்வுநாளானபின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு,
2. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து,
3. கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
4. அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள்.
5. அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக் கண்டு பயந்தார்கள்.
6. அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.
7. நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
8. நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற் போனார்கள்.
9. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.
10. அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடேகூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள்.
11. அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை.
12. அதன்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்.
13. அவர்களும் போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.
14. அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதயகடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார்.
15. பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
16. விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
19. இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.
20. அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.
லூக்கா
1. மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,
2. ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்,
3. ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று,
4. அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.
5. யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து.
6. அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
7. எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயதுசென்றவர்களாயும் இருந்தார்கள்.
8. அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,
9. ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்.
10. தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
11. அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
12. சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
13. தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
14. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
15. அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.
16. அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
17. பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.
18. அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.
19. தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
20. இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்.
21. ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
22. அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகை காட்டி ஊமையாயிருந்தான்.
23. அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான்.
24. அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி: ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து,
25. எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள்.
26. ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,
27. தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.
28. அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
29. அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
30. தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
31. இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.
32. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
33. அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.
34. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
35. தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
36. இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.
37. தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்.
38. அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.
39. அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய்,
40. சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
41. எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,
42. உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
43. என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது.
44. இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.
45. விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
46. அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.
47. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.
48. அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.
49. வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.
50. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.
51. தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.
52. பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
53. பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.
54. நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து,
55. தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள்.
56. மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள்.
57. எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்.
58. கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள்.
59. எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள்.
60. அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிடவேண்டும் என்றாள்.
61. அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி,
62. அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.
63. அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
64. உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.
65. அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது.
66. அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.
67. அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
68. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
69. அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;
70. தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி:
71. உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று,
72. அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்;
73. ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே,
74. தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு,
75. தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக் கொம்பை ஏற்படுத்தினார்.
76. நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
77. நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய்.
78. அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,
79. நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.
80. அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.
1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
2. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
3. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.
4. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,
5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லெகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.
6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.
7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
8. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
9. அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
10. தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
12. பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
13. அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
14. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
15. தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லெகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,
16. தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
17. கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.
18. மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
19. மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.
20. மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
21. பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.
22. மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது,
23. முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும்,
24. கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.
25. அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார்.
26. கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
27. அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில்,
28. அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
29. ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
30. புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
31. தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
32. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
33. அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
34. பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
35. உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.
36. ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.
37. ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.
38. அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்.
39. கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயாநாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்.
40. பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
41. அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள்.
42. அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப்போய்,
43. பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.
44. அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.
45. காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.
46. மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.
47. அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.
48. தாய் தகப்பன்மாரும் அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.
49. அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்.
50. தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.
51. பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
52. இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
1. திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், லிசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,
2. அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்குத் தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.
3. அப்பொழுது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
4. பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,
5. மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,
6. அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.
7. அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திரளான ஜனங்களை நோக்கி: விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?
8. மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
9. இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்.
10. அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
11. அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.
12. ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
13. அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
14. போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.
15. யோவானைக்குறித்து: இவன்தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு, தங்கள் இருதயங்களில் யோசனையாயிருக்கையில்,
16. யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்தஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்.
17. தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
18. வேறு அநேக புத்திமதிகளையும் அவன் ஜனங்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.
19. காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,
20. தான் செய்த மற்றெல்லாப் பொல்லாங்குகளும் தவிர, யோவானையும் காவலில் அடைத்துவைத்தான்.
21. ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;
22. பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
23. அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;
24. ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின் குமாரன்;
25. யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன்.
26. நங்காய் மாகாத்தின் குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன்.
27. யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா சொரொபாபேலின் குமாரன்; சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன்.
28. நேரி மெல்கியின் குமாரன்; மெல்கி அத்தியின் குமாரன்; அத்தி கோசாமின் குமாரன்; கோசாம் எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம் ஏரின் குமாரன்; ஏர் யோசேயின் குமாரன்.
29. யோசே எலியேசரின் குமாரன்; எலியேசர் யோரீமின் குமாரன்; யோரீம் மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்.
30. லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனான் எலியாக்கீமின் குமாரன்.
31. எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன்.
32. தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேதின் குமாரன்; ஓபேத் போவாசின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.
33. நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.
34. யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன்.
35. நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன்.
36. சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன்.
37. லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேதின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கேனான் ஏனோசின் குமாரன்.
38. ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.
1. இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,
2. நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.
3. அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்.
4. அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
5. பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
6. இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
7. நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.
8. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
9. அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்.
10. ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
11. உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
12. அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.
13. பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.
14. பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.
15. அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார்.
16. தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
17. அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:
18. கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
19. கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,
20. வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.
21. அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.
22. எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.
23. அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்.
24. ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
25. அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.
26. ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா (சாறிபாத்) ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை.
27. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்; ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
28. ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு,
29. எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
30. அவரோ அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார்.
31. பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வுநாட்களில் ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார்.
32. அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
33. ஜெபஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்.
34. அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்தசத்தமிட்டான்.
35. அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது.
36. எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப்போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
37. அவருடைய கீர்த்தி சுற்றிலுமிருந்த நாடுகளிலுள்ள இடங்களிலெல்லாம் பிரசித்தமாயிற்று.
38. பின்பு அவர் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜுரமாய்க் கிடந்தாள். அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள்.
39. அவர் அவளிடத்தில் குனிந்துநின்று, ஜுரம் நீங்கும்படி கட்டளையிட்டார், அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.
40. சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
41. பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார்.
42. உதயமானபோது, அவர் புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப் போனார். திரளான ஜனங்கள் அவரைத் தேடி, அவரிடத்தில் வந்து, தங்களை விட்டுப் போகாதபடிக்கு அவரை நிறுத்திக்கொண்டார்கள்.
43. அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்.
44. அந்தப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம் பண்ணிக்கொண்டுவந்தார்.
1. பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்.
2. அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலைசிக்கொண்டிருந்தார்கள்.
3. அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.
4. அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்.
5. அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்.
6. அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.
7. அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.
8. சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.
9. அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான்.
10. சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்.
11. அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
12. பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
13. அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.
14. அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலி செலுத்து என்று கட்டளையிட்டார்.
15. அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று. திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள்.
16. அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
17. பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று.
18. அப்பொழுது சில மனுஷர் திமிர்வாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடே எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவர் முன்பாக வைக்கவும் வகைதேடினார்கள்.
19. ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள்.
20. அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
21. அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள்.
22. இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்கள் இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறதென்ன?
23. உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?
24. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25. உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான்.
26. அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.
27. இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார்.
28. அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.
29. அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள்.
30. வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
31. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
32. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
33. பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீஷர் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம்பண்ணிக்கொண்டு வருகிறார்கள், பரிசேயருடைய சீஷரும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.
34. அதற்கு அவர்: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா?
35. மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார்.
36. அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதிய வஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது.
37. ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்.
38. புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.
39. அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.
1. பஸ்காபண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்துபோகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித் தின்றார்கள்.
2. பரிசேயரில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யத்தகாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
3. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் மாத்திரமே தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக் கேட்டு வாங்கி,
4. தான் புசித்ததுமன்றி, தன்னுடனே கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார்.
5. மேலும் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
6. வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்து உபதேசித்தார். அங்கே சூம்பின வலதுகையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.
7. அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
8. அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.
9. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்று கேட்டு,
10. அவர்களெல்லாரையும் சுற்றிப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.
11. அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள்.
12. அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
13. பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.
14. அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பற்தொலொமேயு,
15. மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன்,
16. யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
17. பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம்பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயாதேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள்.
18. அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள்.
19. அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள்.
20. அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.
21. இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள்.
22. மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
23. அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
24. ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது.
25. திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ; பசியாயிருப்பீர்கள். இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ; இனி துக்கப்பட்டு அழுவீர்கள்.
26. எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
27. எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.
28. உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.
29. உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.
30. உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே.
31. மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
32. உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே.
33. உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.
34. திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே.
35. உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.
36. ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.
37. மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
38. கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
39. பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?
40. சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.
41. நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
42. அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
43. நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது.
44. அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை.
45. நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.
46. என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?
47. என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன்.
48. ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம் போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக் கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
49. என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
1. அவர் தம்முடைய வார்த்தைகளையெல்லாம் ஜனங்களுடைய காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.
2. அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான்.
3. அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான்.
4. அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான்.
5. அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெபஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.
6. அப்பொழுது இயேசு அவர்களுடனே கூடப்போனார். வீட்டுக்குச் சமீபமானபோது, நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரிடத்தில் போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல;
7. நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
8. நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான்; என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.
9. இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10. அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க் கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள்.
11. மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.
12. அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.
13. கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,
14. கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
15. மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.
16. எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
17. இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று.
18. இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து,
19. நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.
20. அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள்.
21. அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார்.
22. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.
23. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
24. யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?
25. அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர்கள் அரசர் மாளிகைகளிலே இருக்கிறார்கள்.
26. அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
27. இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.
28. ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
29. யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள்.
30. பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாகத் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.
31. பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்?
32. சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
33. எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.
34. மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.
35. ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.
36. பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.
37. அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து,
38. அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
39. அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
40. இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார். அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.
41. அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.
42. கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார்.
43. சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி,
44. ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
45. நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.
46. நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ, என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.
47. ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி;
48. அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
49. அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
50. அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
1. பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள்.
2. அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,
3. ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.
4. சகல பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் அவரிடத்தில் வந்து கூடினபோது, அவர் உவமையாகச் சொன்னது:
5. விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
6. சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று.
7. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.
8. சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.
9. அப்பொழுது அவருடைய சீஷர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
10. அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
11. அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
12. வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.
13. கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.
14. முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்.
15. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
16. ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
17. வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை.
18. ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
19. அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் வந்தார்கள்; ஜனக்கூட்டத்தினாலே அவரண்டையில் அவர்கள் சேரக்கூடாதிருந்தது.
20. அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.
21. அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்.
22. பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள்.
23. படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல்காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது.
24. அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டாயிற்று.
25. அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
26. பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள்.
27. அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான்.
28. அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான்.
29. அந்த அசுத்தஆவி அவனை விட்டுப் போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்தஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.
30. இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான்.
31. தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.
32. அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவுகொடுத்தார்.
33. அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனைவிட்டு நீங்கி, பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டது.
34. அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.
35. அப்பொழுது, சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
36. பிசாசுகள் பிடித்திருந்தவன் சொஸ்தமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
37. அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்கள் எல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களை விட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி, திரும்பிப்போனார்.
38. பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.
39. இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்.
40. இயேசு திரும்பிவந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.
41. அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால்,
42. தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள்.
43. அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,
44. அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.
45. அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
46. அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.
47. அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.
48. அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
49. அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான்.
50. இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
51. அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டாமல்,
52. எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.
53. அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
54. எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
55. அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.
56. அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
1. அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,
2. தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார்.
3. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம்.
4. எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள்.
5. உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.
6. அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள்.
7. அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்ட யாவையும் கேள்விப்பட்டதுமன்றி; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றும்,
8. சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:
9. யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான்.
10. அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார்.
11. ஜனங்கள் அதை அறிந்து, அவர் பின்னே போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து அவர்களுடனே பேசி, சொஸ்தமடையவேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார்.
12. சாயங்காலமாகிறபோது, பன்னிருவரும் சேர்ந்துவந்து, அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்தரமாயிருக்கிறது, சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும் ஜனங்கள் போய்த் தங்கி, போஜனபதார்த்தங்களைச் சம்பாதித்துக்கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
13. அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங் கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டு வரவேண்டுமே என்றார்கள்.
14. ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.
15. அவர்கள் அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள்.
16. அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்.
17. எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள் பன்னிரண்டு கூடைநிறைய எடுக்கப்பட்டது.
18. பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
19. அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
20. அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.
21. அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.
22. மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள்படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.
23. பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
24. தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
25. மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
26. என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.
27. இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
28. இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.
29. அவர் ஜெபம்பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது.
30. அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி,
31. அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
32. பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டுபேரையும் கண்டார்கள்.
33. அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்துபோகையில், பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான்.
34. இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள்.
35. அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.
36. அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள்.
37. மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
38. அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருள வேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான்.
39. ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது, அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கினபின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது.
40. அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.
41. இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.
42. அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.
43. அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக் குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங்குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகையில் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி:
44. நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.
45. அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்குத் தோன்றாமல் மறைபொருளாயிருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள்.
46. பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று.
47. இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தி,
48. அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார்.
49. அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.
50. அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்.
51. பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத்திருப்பி,
52. தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.
53. அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
54. அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.
55. அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,
56. மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.
57. அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
58. அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
59. வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
60. அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.
61. பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
62. அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.
1. இவைகளுக்குப்பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.
2. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
3. புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்.
4. பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோகவேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம்.
5. ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.
6. சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.
7. அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள்.
8. ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து,
9. அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
10. யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்:
11. எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.
12. அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் அந்த நாளிலே சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
13. கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.
14. நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும்.
15. வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி,
16. சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார்.
17. பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
18. அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.
19. இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.
20. ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.
21. அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
22. சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்.
23. பின்பு தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.
24. அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25. அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
26. அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.
27. அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
28. அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.
29. அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்.
30. இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
31. அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
32. அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
33. பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,
34. கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
35. மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
36. இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்.
37. அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்.
38. பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
39. அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
40. மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
41. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
42. தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.
1. அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்.
2. அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக;
3. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்;
4. எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே; எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும், என்று சொல்லுங்கள் என்றார்.
5. பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே,
6. என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
7. வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான்.
8. பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
9. மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
10. ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
11. உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா?
12. அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?
13. பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.
14. பின்பு அவர் ஊமையாயிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
15. அவர்களில் சிலர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
16. வேறு சிலர் அவரைச் சோதிக்கும்படி வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
17. அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் விழுந்துபோம்.
18. சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்க, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே.
19. நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.
20. நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
21. ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, அவனுடைய பொருள் பத்திரப்பட்டிருக்கும்.
22. அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான்.
23. என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
24. அசுத்தஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி,
25. அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு,
26. திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும் என்றார்.
27. அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள்.
28. அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.
29. ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது அவர்: இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
30. யோனா நினிவே பட்டணத்தாருக்கு அடையாளமாயிருந்ததுபோல, மனுஷகுமாரனும் இந்தச் சந்ததிக்கு அடையாளமாயிருப்பார்.
31. தென்தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கப் பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.
32. யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள்; இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
33. ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவிடத்திலாவது, மரக்காலின் கீழேயாவது வைக்காமல், உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம் காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
34. கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்.
35. ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
36. உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும் என்றார்.
37. அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசேயன் ஒருவன் தன்னுடனேகூட அவர் பகற்போஜனம் பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய்ப் பந்தியிருந்தார்.
38. அவர் போஜனம்பண்ணுகிறதற்குமுன் கைகழுவாமலிருந்ததைப் பரிசேயன் கண்டு, ஆச்சரியப்பட்டான்.
39. கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது.
40. மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ?
41. உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும்.
42. பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.
43. பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைகளில் வந்தனங்களையும் விரும்புகிறீர்கள்.
44. மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள், அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் தெரியாதிருக்கிறது என்றார்.
45. அப்பொழுது நியாயசாஸ்திரிகளில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதினால் எங்களையும் நிந்திக்கிறீரே என்றான்.
46. அதற்கு அவர்: நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள்.
47. உங்களுக்கு ஐயோ, உங்கள் பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.
48. ஆகையால் உங்கள் பிதாக்களுடைய கிரியைகளுக்கு நீங்களும் உடன்பட்டவர்களென்று சாட்சியிடுகிறீர்கள்; எப்படியென்றால், உங்கள் பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.
49. ஆதலால் தேவஞானமானது: நான் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள்;
50. ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது.
51. நிச்சயமாகவே இந்தச் சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
52. நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்.
53. இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்டும் பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக்கவும்,
54. அநேக காரியங்களைக்குறித்துப் பேசும்படி அவரை ஏவவும் தொடங்கினார்கள்.
1. அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
2. வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.
3. ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும்.
4. என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.
5. நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
6. இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப் படுகிறதில்லை.
7. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
8. அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார்.
9. மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான்.
10. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்த் தூஷணஞ் சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை.
11. அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்.
12. நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.
13. அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
14. அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார்.
15. பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
16. அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
17. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே;
18. நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து,
19. பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.
20. தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.
21. தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.
22. பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
23. ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது.
24. காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
25. கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்.
26. மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன?
27. காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
28. இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
29. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.
30. இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார்.
31. தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
32. பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.
33. உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை.
34. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
35. உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும்,
36. தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள்.
37. எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
38. அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.
39. திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.
40. அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.
41. அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான்.
42. அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்?
43. எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான்.
44. தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
45. அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால்,
46. அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்.
47. தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
48. அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.
49. பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
50. ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.
51. நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
52. எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
53. தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.
54. பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும்.
55. தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அந்தப்படியுமாகும்.
56. மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன?
57. நியாயம் இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன?
58. உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைச்சாலையில் போடுவான்.
59. நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
1. பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.
2. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
3. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.
4. சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
5. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.
6. அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.
7. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.
8. அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்,
9. கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.
10. ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.
11. அப்பொழுது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.
12. இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
13. அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
14. இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.
15. கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?
16. இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.
17. அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.
18. அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?
19. அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமாயிற்று; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்.
20. மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்?
21. அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடிமாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.
22. அவர் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் பண்ணிக்கொண்டு போனார்.
23. அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:
24. இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
25. வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
26. அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
27. ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
28. நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.
29. கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்.
30. அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார்.
31. அந்த நாளிலே சில பரிசேயர் அவரிடத்தில் வந்து: நீர் இவ்விடத்தை விட்டுப் போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாய் இருக்கிறான் என்றார்கள்.
32. அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி, மூன்றாம் நாளில் நிறைவடைவேன்.
33. இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்.
34. எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
35. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
1. ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.
2. அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
3. இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வு நாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.
4. அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு,
5. அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்.
6. அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.
7. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:
8. ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.
9. அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.
10. நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்.
11. தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
12. அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்.
13. நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக.
14. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்.
15. அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான் என்றான்.
16. அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான்.
17. விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.
18. அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
19. வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப் போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
20. வேறொருவன்: பெண்ணை விவாகம்பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான்.
21. அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.
22. ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.
23. அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா;
24. அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை யென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.
25. பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து:
26. யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
27. தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
28. உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து,
29. அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்:
30. இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?
31. அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?
32. கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.
33. அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
34. உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?
35. அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப் போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
1. சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.
2. அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.
3. அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
4. உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?
5. கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,
6. வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?
7. அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
8. அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?
9. கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல் வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா?
10. அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
11. பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.
12. அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.
13. சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.
14. எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,
15. அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
16. அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
17. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
18. நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.
19. இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
20. எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.
21. குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.
22. அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
23. கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.
24. என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.
25. அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;
26. ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.
27. அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.
28. அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.
29. அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.
30. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
31. அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.
32. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.
1. பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.
2. அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.
3. அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன்.
4. உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;
5. தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.
6. அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்.
7. பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான்.
8. அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.
9. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக் கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.
10. கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
11. அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?
12. வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?
13. எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.
14. இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.
15. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.
16. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.
17. வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.
18. தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான்.
19. ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.
20. லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,
21. அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.
22. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.
23. பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
24. அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
25. அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
26. அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.
27. அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,
28. நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
29. ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.
30. அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.
31. அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.
1. பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
2. அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்.
3. உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக.
4. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.
5. அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.
6. அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
7. உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?
8. நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக்குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா?
9. தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே.
10. அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.
11. பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார்.
12. அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று:
13. இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.
14. அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.
15. அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,
16. அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.
17. அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?
18. தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி,
19. அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
20. தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.
21. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.
22. பின்பு அவர் சீஷர்களை நோக்கி: மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள்.
23. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.
24. மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.
25. அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.
26. நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.
27. நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.
28. லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
29. லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.
30. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
31. அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.
32. லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.
33. தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்து போவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக் கொள்ளுவான்.
34. அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.
35. திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
36. வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
37. அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.
1. சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
2. ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.
3. அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள்.
4. வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,
5. இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.
6. பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.
7. அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
8. சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
9. அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
10. இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
11. பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
12. வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
13. ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
14. அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
15. பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.
16. இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
17. எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
18. அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
19. அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
20. விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்.
21. அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.
22. இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
23. அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.
24. அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது.
25. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.
26. அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
27. அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
28. அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.
29. அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றாரையாவது, சகோதரரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும்,
30. இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
31. பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.
32. எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார்.
33. அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
34. இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
35. பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
36. ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.
37. நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
38. முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.
39. இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.
40. அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி:
41. நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
42. இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
43. உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.
1. அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,
2. ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,
3. இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,
4. அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
5. இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
6. அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டுபோனான்.
7. அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.
8. சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
9. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.
10. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
11. அவர்கள் இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
12. பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான்.
13. புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.
14. அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.
15. அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.
16. அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
17. எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
18. அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
19. அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
20. பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.
21. நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.
22. அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,
23. பின்னை ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக் கொள்வேனே என்று சொல்லி;
24. சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
25. அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.
26. அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
27. அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.
28. இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்திநடந்துபோனார்.
29. அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபித்தபோது, தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி:
30. உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
31. அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.
32. அனுப்பப்பட்டவர்கள் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டார்கள்.
33. கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
34. அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,
35. அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
36. அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.
37. அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டு,
38. கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.
39. அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள்.
40. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
41. அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது,
42. உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.
43. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,
44. உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்.
45. பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத்தொடங்கி:
46. என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள் என்றார்.
47. அவர் நாடோறும் தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும்,
48. ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக்கொண்டிருந்தபடியால், அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்.
1. அந்நாட்களில் ஒன்றில், அவர் தேவாலயத்திலே ஜனங்களுக்கு உபதேசித்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் கூடிவந்து:
2. நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
3. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள்.
4. யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று கேட்டார்.
5. அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.
6. மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி:
7. அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.
8. அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.
9. பின்பு அவர் ஜனங்களுக்குச் சொல்லத்தொடங்கின உவமையாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டு, நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.
10. அந்தத் தோட்டக்காரர் திராட்சத்தோட்டத்தின் கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
11. பின்பு அவன் வேறொரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
12. அவன் மூன்றாந்தரமும் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி, துரத்திவிட்டார்கள்.
13. அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான்.
14. தோட்டக்காரர் அவனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு,
15. அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்னசெய்வான்?
16. அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.
17. அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன?
18. அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார்.
19. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்து, அந்நேரத்திலே அவரைப் பிடிக்க வகைதேடியும் ஜனங்களுக்குப் பயந்திருந்தார்கள்.
20. அவர்கள் சமயம்பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள்.
21. அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்.
22. இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
23. அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
24. ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள்.
25. அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
26. அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன உத்தரவைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்.
27. உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயரில் சிலர் அவரிடத்தில் வந்து:
28. போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாயிருந்து பிள்ளையில்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானமுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
29. சகோதரர் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.
30. பின்பு இரண்டாஞ்சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.
31. மூன்றாஞ்சகோதரனும் அவளை விவாகம்பண்ணினான். அப்படியே ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனார்கள்.
32. எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
33. இவ்விதமாய் ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணியிருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள்.
34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள்.
35. மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண்கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை.
36. அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்.
37. அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்.
38. அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார்.
39. அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு: போதகரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள்.
40. அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றுங்கேட்கத் துணியவில்லை.
41. அவர் அவர்களை நோக்கி: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?
42. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,
43. கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே.
44. தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
45. பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி:
46. நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
47. விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.
1. அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.
2. ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:
3. இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
4. அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.
5. பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக்குறித்துச் சிலர் சொன்னபோது,
6. அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.
7. அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.
8. அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.
9. யுத்தங்களையும் கலகங்களையுங்குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.
10. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.
11. பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
12. இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.
13. ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும்.
14. ஆகையால் என்ன உத்தரவு சொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.
15. உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.
16. பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள்.
17. என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.
18. ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது.
19. உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
20. எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
21. அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.
22. எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.
23. அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.
24. பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.
25. சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.
26. வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.
27. அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
28. இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.
29. அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.
30. அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.
31. அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
32. இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
33. வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.
34. உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
35. பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.
36. ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
37. அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்து, இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
38. ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்.
1. பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை சமீபமாயிற்று.
2. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச் செய்யலாமென்று வகைதேடினார்கள்.
3. அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.
4. அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத்தலைவர்களிடத்திலும் போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான்.
5. அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள்.
6. அதற்கு அவன் சம்மதித்து, ஜனக்கூட்டமில்லாத வேளையில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான்.
7. பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது.
8. அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார்.
9. அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
10. அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் பிரவேசிக்கும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்சென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும் போய்,
11. அந்த வீட்டெஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள்.
12. அவன் கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
13. அவர்கள் போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
14. வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள்.
15. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.
16. தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
17. அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்;
18. தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
19. பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
20. போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.
21. பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது.
22. தீர்மானிக்கப்பட்டபடியே மனுஷகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு ஐயோ என்றார்.
23. அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள்.
24. அன்றியும் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.
25. அவர் அவர்களை நோக்கி: புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள்.
26. உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன்.
27. பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்.
28. மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே.
29. ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.
30. நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார்.
31. பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.
32. நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.
33. அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.
34. அவர் அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
35. பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.
36. அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.
37. அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.
38. அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.
39. பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடேகூடப் போனார்கள்.
40. அவ்விடத்தில் சேர்ந்தபொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொல்லி,
41. அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:
42. பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
43. அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.
44. அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
45. அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரை பண்ணுகிறதைக் கண்டு:
46. நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார்.
47. அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான்.
48. இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.
49. அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.
50. அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்.
51. அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்.
52. பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே.
53. நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனேகூட இருக்கையில் நீங்கள் என்னைப் பிடிக்கக் கைநீட்டவில்லை; இதுவோ உங்களுடைய வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது என்றார்.
54. அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்.
55. அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்.
56. அப்பொழுது ஒரு வேலைக்காரி அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள்.
57. அதற்கு அவன்: ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான்.
58. சற்றுநேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான்.
59. ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான்.
60. அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று.
61. அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப் பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து,
62. வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
63. இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்து,
64. அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி,
65. மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள்.
66. விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:
67. நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்.
68. நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள்.
69. இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார்.
70. அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்.
71. அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.
1. அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்:
2. இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள்.
3. பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
4. அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.
5. அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இவ்விடம்வரைக்கும் யூதேயாதேசமெங்கும் உபதேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடே சொன்னார்கள்.
6. கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனுஷன் கலிலேயனா என்று விசாரித்து,
7. அவர் ஏரோதின் அதிகாரத்துக்குள்ளானவர் என்றறிந்து, அந்நாட்களில் எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான்.
8. ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு,
9. அநேக காரியங்களைக்குறித்து அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
10. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவர்மேல் பிடிவாதமாய்க் குற்றஞ்சாட்டிக்கொண்டே நின்றார்கள்.
11. அப்பொழுது ஏரோது தன் போர்ச்சேவகரோடுகூட அவரை நிந்தித்துப் பரியாசம்பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.
12. முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையத்தினம் சிநேகிதரானார்கள்.
13. பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்து,
14. அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.
15. உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.
16. ஆனபடியால் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
17. பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது அவசியமாயிருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
18. ஜனங்களெல்லாரும் அதைக் கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக் கேட்டார்கள்.
19. அந்தப் பரபாசென்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
20. பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.
21. அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள்.
22. அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
23. அப்படியிருந்தும் அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது.
24. அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,
25. கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான்.
26. அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர்பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.
27. திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்.
28. இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
29. இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.
30. அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
31. பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.
32. குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
33. கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
34. அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
35. ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.
36. போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:
37. நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.
38. இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
39. அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
40. மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
41. நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
42. இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
43. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
44. அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.
45. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.
46. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
47. நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக்கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
48. இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
49. அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
50. யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான்.
51. அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான்.
52. அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,
53. அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
54. அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று.
55. கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,
56. திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
1. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.
2. கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக்கண்டு,
3. உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,
4. அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள்.
5. அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
6. அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
7. மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள்.
8. அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து,
9. கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள்.
10. இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே.
11. இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை.
12. பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
13. அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.
14. போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
15. இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார்.
16. ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.
17. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார்.
18. அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான்.
19. அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்.
20. நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.
21. அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது.
22. ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய்,
23. அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கப்பண்ணினார்கள்.
24. அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள்.
25. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,
26. கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,
27. மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
28. அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார்.
29. அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்.
30. அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.
31. அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.
32. அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,
33. அந்நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருவரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு:
34. கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக் கேட்டு,
35. வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.
36. இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
37. அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.
38. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
39. நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
40. தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
41. ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.
42. அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
43. அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து,
44. அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.
45. அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி:
46. எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;
47. அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
48. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
49. என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
50. பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
51. அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
52. அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து,
53. நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
யோவான்
1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
4. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
6. தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.
7. அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.
8. அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.
9. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
10. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
11. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
13. அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
15. யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
16. அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
17. எப்படியெனில், நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
18. தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
19. எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,
20. அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்.
21. அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.
22. அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
23. அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.
24. அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள்.
25. அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.
26. யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்.
27. அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான்.
28. இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன.
29. மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
30. எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.
31. நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன் என்றான்.
32. பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.
33. நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.
34. அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்.
35. மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது,
36. இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
37. அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.
38. இயேசு திரும்பி, அவர்கள் பின் செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.
39. அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.
40. யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.
41. அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.
42. பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.
43. மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக் கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார்.
44. பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான்.
45. பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.
46. அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
47. இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
48. அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்.
49. அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
50. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.
51. பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
1. மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.
2. இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
3. திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.
4. அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.
5. அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.
6. யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது.
7. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.
8. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.
9. அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:
10. எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.
11. இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
12. அதன்பின்பு அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சிலநாள் தங்கினார்கள்.
13. பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய்,
14. தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு,
15. கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு,
16. புறா விற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.
17. அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்.
18. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்.
19. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.
20. அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்.
21. அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.
22. அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள்.
23. பஸ்காபண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
24. அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை.
25. மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.
1. யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
2. அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.
3. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
4. அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான்.
5. இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
6. மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.
7. நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்.
8. காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
9. அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான்.
10. இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?
11. மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக் கொள்ளுகிறதில்லை.
12. பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
13. பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
14. சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும்,
15. தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.
16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
19. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிற படியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
20. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
21. சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
22. இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங்கொடுத்துவந்தார்.
23. சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
24. அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை.
25. அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று.
26. அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
27. யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்.
28. நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.
29. மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.
30. அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
31. உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்.
32. தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
33. அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான்.
34. தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
35. பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
36. குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
1. யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது,
2. யூதேயாவைவிட்டு மறுபடியுங் கலிலேயாவுக்குப் போனார்.
3. இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்.
4. அவர் சமாரியா நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தபடியால்,
5. யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார்.
6. அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது.
7. அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள்.
8. அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத் தா என்றார்.
9. யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.
10. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.
11. அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்.
12. இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள்.
13. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.
14. நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
15. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.
16. இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார்.
17. அதற்கு அந்த ஸ்திரீ: எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான்.
18. எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.
19. அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்.
20. எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்.
21. அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
22. நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.
23. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
24. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
25. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.
26. அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
27. அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை.
28. அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி:
29. நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.
30. அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.
31. இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
32. அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார்.
33. அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள்.
34. இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
35. அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
36. விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்.
37. விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது.
38. நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார்.
39. நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
40. சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டுநாள் அங்கே தங்கினார்.
41. அப்பொழுது அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து,
42. அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
43. இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவுக்குப் போனார்.
44. ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார்.
45. அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள்; அவர்களும் பண்டிகைக்குப் போயிருந்தார்கள்.
46. பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான்.
47. இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்.
48. அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்.
49. அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்றான்.
50. இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான்.
51. அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.
52. அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது என்றார்கள்.
53. உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள்.
54. இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாம் அற்புதம்.
1. இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார்.
2. எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டுவாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு.
3. அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.
4. ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்.
5. முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.
6. படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.
7. அதற்கு வியாதிஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.
8. இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
9. உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.
10. ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள்.
11. அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான்.
12. அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்.
13. சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னாரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார்.
14. அதற்குப்பின்பு இயேசு அவனைத் தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
15. அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்.
16. இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.
17. இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன் என்றார்.
18. அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
19. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.
20. பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.
21. பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
22. அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
23. குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்.
24. என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
25. மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
26. ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார்.
27. அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.
28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;
29. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
30. நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
31. என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது.
32. என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன்.
33. நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்குச் சாட்சிகொடுத்தான்.
34. நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன்.
35. அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.
36. யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது.
37. என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.
38. அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை.
39. வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
40. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.
41. நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
42. உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்.
43. நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.
44. தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
45. பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்.
46. நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே.
47. அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.
1. இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார்.
2. அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள்.
3. இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீஷருடனேகூட உட்கார்ந்தார்.
4. அப்பொழுது யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா சமீபமாயிருந்தது.
5. இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்.
6. தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்.
7. பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவனும் கொஞ்சங் கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்.
8. அப்பொழுது அவருடைய சீஷரிலொருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரை நோக்கி:
9. இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான்.
10. இயேசு: ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.
11. இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டியமட்டும் கொடுத்தார்.
12. அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார்.
13. அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள்.
14. இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.
15. ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.
16. சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய்,
17. படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப்போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.
18. பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
19. அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள்.
20. அவர்களை அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
21. அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
22. மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற ஜனங்கள் அவருடைய சீஷர் ஏறின அந்த ஒரே படவுதவிர அங்கே வேறொரு படவும் இருந்ததில்லையென்றும், இயேசு தம்முடைய சீஷருடனேகூடப் படவில் ஏறாமல் அவருடைய சீஷர்மாத்திரம் போனார்களென்றும் அறிந்தார்கள்.
23. கர்த்தர் ஸ்தோத்திரஞ்செய்தபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்துக்குச் சமீபமாய்த் திபேரியாவிலிருந்து வேறே படவுகள் வந்தது.
24. அப்பொழுது இயேசுவும் அவருடைய சீஷரும் அங்கே இல்லாததை ஜனங்கள் கண்டு, உடனே அந்தப் படவுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள்.
25. கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைக் கண்டபோது: ரபீ, நீர் எப்பொழுது இவ்விடம் வந்தீர் என்று கேட்டார்கள்.
26. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
27. அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.
28. அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.
29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.
30. அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்?
31. வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள்.
32. இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
33. வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.
34. அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள்.
35. இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.
36. நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்.
37. பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.
38. என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.
39. அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.
40. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.
41. நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து:
42. இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும் தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள்.
43. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம்.
44. என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
45. எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
46. தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.
47. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
48. ஜீவ அப்பம் நானே.
49. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்.
50. இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.
51. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
52. அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள்.
53. அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
54. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
55. என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
56. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
57. ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
58. வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.
59. கப்பர்நகூமிலுள்ள ஜெபஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார்.
60. அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்.
61. சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ?
62. மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்?
63. ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.
64. ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்:
65. ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.
66. அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்.
67. அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்.
68. சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
69. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.
70. இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார்.
71. சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரிலொருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனாயிருந்தபடியினால் அவனைக்குறித்து இப்படிச் சொன்னார்.
1. இவைகளுக்குப்பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்துவந்தார்.
2. யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது.
3. அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம்.
4. பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.
5. அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.
6. இயேசு அவர்களை நோக்கி: என் வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது.
7. உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது.
8. நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள்; என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்.
9. இவைகளை அவர்களுடனே சொல்லி, பின்னுங் கலிலேயாவிலே தங்கினார்.
10. அவருடைய சகோதரர் போனபின்பு, அவர் வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார்.
11. பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கேயிருக்கிறார் என்றார்கள்.
12. ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டாயிற்று. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள்.
13. ஆனாலும் யூதருக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்துத் தாராளமாய்ப் பேசவில்லை.
14. பாதிப்பண்டிகையானபோது, இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம்பண்ணினார்.
15. அப்பொழுது யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.
16. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.
17. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
18. சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
19. மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார்.
20. ஜனங்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நீ பிசாசுபிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.
21. இயேசு அவர்களை நோக்கி: ஒரே கிரியையைச் செய்தேன், அதைக்குறித்து எல்லாரும் ஆச்சரியப்படுகிறீர்கள்.
22. விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம் பண்ணுகிறீர்கள்.
23. மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா?
24. தோற்றத்தின்படி தீர்ப்புசெய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள் என்றார்.
25. அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனையல்லவா கொலைசெய்யத்தேடுகிறார்கள்?
26. இதோ, இவன் தாராளமாய்ப் பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, மெய்யாய் இவன் கிறிஸ்துதான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ?
27. இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவனென்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவரென்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள்.
28. அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.
29. நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்.
30. அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.
31. ஜனங்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைப்பார்க்கிலும் அதிகம் செய்வாரோ என்றார்கள்.
32. ஜனங்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள்.
33. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்.
34. நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவுங்கூடாது என்றார்.
35. அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் காணாதபடிக்கு எங்கே போவார், கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய், கிரேக்கருக்கு உபதேசம்பண்ணுவாரோ?
36. நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்துக்கு நீங்கள் வரக்கூடாது என்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்னவென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
37. பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.
38. வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
39. தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை.
40. ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.
41. வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்?
42. தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லெகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.
43. இவ்விதமாக அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று.
44. அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க மனதாயிருந்தார்கள்; ஆகிலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.
45. பின்பு அந்தச் சேவகர் பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களை நோக்கி: நீங்கள் அவனை ஏன் கொண்டுவரவில்லை என்று கேட்டார்கள்.
46. சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்.
47. அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?
48. அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா?
49. வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.
50. இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களை நோக்கி:
51. ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான்.
52. அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள்.
53. பின்பு அவரவர் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள்.
1. இயேசு ஒலிவமலைக்குப் போனார்.
2. மறுநாள் காலையிலே அவர் திரும்பித் தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார்.
3. அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
4. போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
5. இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
6. அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
7. அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,
8. அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
9. அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.
10. இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
11. அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
12. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
13. அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
14. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.
15. நீங்கள் மாம்சத்துக்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை;
16. நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.
17. இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.
18. நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறார் என்றார்.
19. அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.
20. தேவாலயத்திலே இயேசு உபதேசம்பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.
21. இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார்.
22. அப்பொழுது யூதர்கள்: நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்கிறானே, தன்னைத்தான் கொலைசெய்துகொள்வானோ என்று பேசிக்கொண்டார்கள்.
23. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல.
24. ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.
25. அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்.
26. உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார்.
27. பிதாவைக்குறித்துப் பேசினாரென்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.
28. ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
29. என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.
30. இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
31. இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;
32. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
33. அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்.
34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
35. அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்.
36. ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.
37. நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்.
38. நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார்.
39. அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே.
40. தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.
41. நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர் தேவன் என்றார்கள்.
42. இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.
43. என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?
44. நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
45. நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.
46. என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.
47. தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.
48. அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: உன்னைச் சமாரியனென்றும், பிசாசுபிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.
49. அதற்கு இயேசு: நான் பிசாசு பிடித்தவனல்ல, நான் என் பிதாவைக் கனம்பண்ணுகிறேன், நீங்கள் என்னைக் கனவீனம்பண்ணுகிறீர்கள்.
50. நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்.
51. ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
52. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீ பிசாசுபிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய்.
53. எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள்.
54. இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
55. ஆயினும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொல்வேனாகில் உங்களைப்போல நானும் பொய்யனாயிருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன்.
56. உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.
57. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.
58. அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
59. அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.
1. அவர் அப்புறம் போகையில் பிறவிக் குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார்.
2. அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.
3. இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.
4. பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.
5. நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.
6. இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:
7. நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான்.
8. அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள்.
9. சிலர்: அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான்.
10. அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.
11. அவன் பிரதியுத்தரமாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வையடைந்தேன் என்றான்.
12. அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான்.
13. குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
14. இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.
15. ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான்.
16. அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று.
17. மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்.
18. அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வையடைந்தவனுடைய தாய்தகப்பன்மாரை அழைப்பித்து,
19. அவர்களை நோக்கி: உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.
20. தாய்தகப்பன்மார் பிரதியுத்தரமாக: இவன் எங்கள் குமாரன்தான் என்றும், குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்.
21. இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது; இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனைக் கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள்.
22. அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைபண்ணினால் அவனை ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள்.
23. அதினிமித்தம்: இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவன் தாய்தகப்பன்மார் சொன்னார்கள்.
24. ஆதலால் அவர்கள் குருடனாயிருந்த மனுஷனை இரண்டாந்தரம் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.
25. அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான்.
26. அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி: உனக்கு என்னசெய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.
27. அவன் பிரதியுத்தரமாக: முன்னமே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேளாமற்போனீர்கள்; மறுபடியும் கேட்க வேண்டியதென்ன? அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ என்றான்.
28. அப்பொழுது அவர்கள் அவனை வைது: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர்.
29. மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம் என்றார்கள்.
30. அதற்கு அந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம்.
31. பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
32. பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானதுமுதல் கேள்விப்பட்டதில்லையே.
33. அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.
34. அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள்.
35. அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார்.
36. அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான்.
37. இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார்.
38. உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.
39. அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.
40. அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.
41. இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.
1. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.
2. வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.
3. வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டு போகிறான்.
4. அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.
5. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்.
6. இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை.
7. ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
8. எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
9. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
10. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
11. நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
12. மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.
13. கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான்.
14. நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,
15. நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
16. இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.
17. நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
18. ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
19. இந்த வசனங்களினிமித்தம் யூதருக்குள்ளே மறுபடியும் பிரிவினையுண்டாயிற்று.
20. அவர்களில் அநேகர்: இவன் பிசாசுபிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள்.
21. வேறே சிலர்: இவைகள் பிசாசுபிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்.
22. பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது; மாரிகாலமுமாயிருந்தது.
23. இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார்.
24. அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள்.
25. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.
26. ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.
27. என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.
28. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை.
29. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
30. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
31. அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.
32. இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
33. யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.
34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?
35. தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,
36. பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?
37. என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை.
38. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.
39. இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி,
40. யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானங் கொடுத்துக்கொண்டிருந்த இடத்துக்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார்.
41. அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றார்கள்.
42. அவ்விடத்திலே அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
1. மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான்.
2. கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாயிருந்தான்.
3. அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.
4. இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.
5. இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்.
6. அவன் வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தங்கினார்.
7. அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார்.
8. அதற்குச் சீஷர்கள்: ரபீ, இப்பொழுதுதான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா என்றார்கள்.
9. இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான்.
10. ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் என்றார்.
11. இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார்.
12. அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள்.
13. இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள்.
14. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி;
15. நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
16. அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்.
17. இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார்.
18. பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டுமைல் தூரத்திலிருந்தது.
19. யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.
20. இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள்.
21. மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்.
22. இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
23. இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.
24. அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
25. இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
26. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
27. அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
28. இவைகளைச் சொன்னபின்பு, அவள்போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாய் அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள்.
29. அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாய் எழுந்து, அவரிடத்தில் வந்தாள்.
30. இயேசு இன்னும் கிராமத்துக்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார்.
31. அப்பொழுது, வீட்டிலே அவளுடனேகூட இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாய் எழுந்துபோகிறதைக் கண்டு: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்னே போனார்கள்.
32. இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்.
33. அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:
34. அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்.
35. இயேசு கண்ணீர் விட்டார்.
36. அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்!
37. அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள்.
38. அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.
39. இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள்.
40. இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.
41. அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
42. நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.
43. இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.
44. அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
45. அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
46. அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
47. அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்னசெய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.
48. நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப் போடுவார்களே என்றார்கள்.
49. அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது;
50. ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.
51. இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும்,
52. அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.
53. அந்நாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள்.
54. ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்.
55. யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும்பொருட்டு நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.
56. அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கையில், ஒருவரையொருவர் நோக்கி: உங்களுக் கெப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள்.
57. பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனாவது அறிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள்.
1. பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார்.
2. அங்கே அவருக்கு இராவிருந்து பண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான்.
3. அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.
4. அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:
5. இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.
6. அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.
7. அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.
8. தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார்.
9. அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள் அவர் அங்கேயிருக்கிறதை அறிந்து, இயேசுவினிமித்தமாகமாத்திரம் அல்ல, அவர் மரித்தோரிலிருந்தெழுப்பின லாசருவைக் காணும்படியாகவும் வந்தார்கள்.
10. லாசருவினிமித்தமாக யூதர்களில் அநேகர் போய், இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்தபடியால்,
11. பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள்.
12. மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு,
13. குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.
14. அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபிரகாரமாக,
15. இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார்.
16. இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக் குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள்.
17. அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சிகொடுத்தார்கள்.
18. அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டு போனார்கள்.
19. அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே என்றார்கள்.
20. பண்டிகையில் ஆராதனை செய்யவந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள்.
21. அவர்கள் கலிலேயாநாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.
22. பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.
23. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது.
24. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.
25. தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.
26. ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
27. இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.
28. பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.
29. அங்கே நின்றுகொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.
30. இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று.
31. இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.
32. நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.
33. தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார்.
34. ஜனங்கள் அவரை நோக்கி: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனுஷகுமாரன் உயர்த்தப்படவேண்டியதென்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனுஷகுமாரன் யார் என்றார்கள்.
35. அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்.
36. ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களை விட்டு மறைந்தார்.
37. அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.
38. கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது.
39. ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல்போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்:
40. அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான்.
41. ஏசாயா அவருடைய மகிமையைக்கண்டு, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்.
42. ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர்நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள்.
43. அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்.
44. அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.
45. என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.
46. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.
47. ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.
48. என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
49. நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
50. அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.
1. பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.
2. சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம் பண்ணிக்கொண்டிருக்கையில்;
3. தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து;
4. போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு,
5. பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.
6. அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான்.
7. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.
8. பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.
9. அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூடக் கழுவவேண்டும் என்றான்.
10. இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார்.
11. தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார்.
12. அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?
13. நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
14. ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.
15. நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
16. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
17. நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
18. உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
19. அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
20. நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
21. இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார்.
22. அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள்.
23. அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.
24. யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்.
25. அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.
26. இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.
27. அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.
28. அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை.
29. யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.
30. அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது.
31. அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்.
32. தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாய் அவரை மகிமைப்படுத்துவார்.
33. பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன்.
34. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
35. நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
36. சீமோன்பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார்.
37. பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப் பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான்.
38. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
1. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
2. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
3. நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
4. நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
5. தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.
6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
7. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
10. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
11. நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
12. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
13. நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
14. என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.
15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
16. நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
17. உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
18. நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.
19. இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.
20. நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.
21. என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
22. ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான்.
23. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
24. என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.
25. நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
26. என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
27. சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
28. நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
29. இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.
30. இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
31. நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.
1. நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்.
2. என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.
3. நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.
4. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.
5. நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
6. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.
7. நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
8. நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.
9. பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
10. நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.
11. என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
12. நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.
13. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.
14. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.
15. இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
16. நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.
17. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்.
18. உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.
19. நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
20. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.
21. அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்.
22. நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.
23. என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.
24. வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்.
25. முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.
26. பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.
27. நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.
1. நீங்கள் இடறலடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
2. அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.
3. அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்.
4. அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை.
5. இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை.
6. ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.
7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
8. அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
9. அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,
10. நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,
11. இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
12. இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
14. அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.
15. பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.
16. நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார்.
17. அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின் கருத்தென்ன என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டதுமன்றி:
18. கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே என்றார்கள்.
19. அதைக்குறித்துத் தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களை நோக்கி: கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ?
20. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.
21. ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்.
22. அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.
23. அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.
24. இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள்.
25. இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்.
26. அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக் கொள்வீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக் கொள்வேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.
27. நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார்.
28. நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார்.
29. அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: இதோ, இப்பொழுது நீர் உவமையாய்ப் பேசாமல், வெளிப்படையாய்ப் பேசுகிறீர்.
30. நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவ வேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
31. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்.
32. இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன் தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.
33. என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
1. இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:
2. பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.
3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
4. பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.
5. பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.
6. நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
7. நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம் உம்மாலே உண்டாயினவென்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள்.
8. நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.
9. நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே.
10. என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.
11. நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.
12. நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக் கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.
13. இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாய் அடையும்படி உலகத்தில் இருக்கையில் இவைகளைச் சொல்லுகிறேன்.
14. நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.
15. நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
16. நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.
17. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
18. நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.
19. அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.
20. நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
21. அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
22. நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
23. ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
24. பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.
25. நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.
26. நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.
1. இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள்.
2. இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்.
3. யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொண்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான்.
4. இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.
5. அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான்.
6. நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.
7. அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள்.
8. இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார்.
9. நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லை என்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.
10. அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர்.
11. அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.
12. அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி,
13. முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான்.
14. ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.
15. சீமோன்பேதுருவும் வேறொரு சீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான்.
16. பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான்.
17. அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் அல்ல என்றான்.
18. குளிர்காலமானபடியினாலே ஊழியக்காரரும் சேவகரும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களுடனேகூடப் பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.
19. பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.
20. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.
21. நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.
22. இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.
23. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.
24. பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான்.
25. சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்.
26. பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி: நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான்.
27. அப்பொழுது பேதுரு மறுபடியும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவிற்று.
28. அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்.
29. ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றான்.
30. அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.
31. அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இவனை நீங்களே கொண்டுபோய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள்.
32. தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள்.
33. அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.
34. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.
35. பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.
36. இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.
37. அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.
38. அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.
39. பஸ்காபண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலைபண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான்.
40. அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.
1. அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான்.
2. போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி:
3. யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
4. பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான்.
5. இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான்.
6. பிரதான ஆசாரியரும் சேவகரும் அவரைக் கண்டபோது: சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்றான்.
7. யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள்.
8. பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து,
9. மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
10. அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
11. இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.
12. அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.
13. பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.
14. அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.
15. அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்.
16. அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள்.
17. அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
18. அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
19. பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.
20. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது.
21. அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.
22. பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
23. போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது.
24. அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்.
25. இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
26. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.
27. பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
28. அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.
29. காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.
30. இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
31. அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
32. அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள்.
33. அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை.
34. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.
35. அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.
36. அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது.
37. அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.
38. இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான்.
39. ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்.
40. அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.
41. அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.
42. யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.
1. வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக்கண்டாள்.
2. உடனே அவள் ஓடி, சீமோன்பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.
3. அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.
4. பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து,
5. அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.
6. சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து,
7. சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.
8. முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான்.
9. அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.
10. பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
11. மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,
12. இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.
13. அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.
14. இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.
15. இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.
16. இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.
17. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
18. மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.
19. வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
20. அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.
21. இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,
22. அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;
23. எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.
24. இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.
25. மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
26. மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
27. பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.
28. தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
29. அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
30. இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.
31. இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
1. இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விவரமாவது:
2. சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது,
3. சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.
4. விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்.
5. இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.
6. அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.
7. ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.
8. மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்தபடியினால் படவிலிருந்து கொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.
9. அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள்.
10. இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்.
11. சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.
12. இயேசு அவர்களை நோக்கி: வாருங்கள், போஜனம்பண்ணுங்கள் என்றார். அவரைக் கர்த்தரென்று சீஷர்கள் அறிந்தபடியினால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை.
13. அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார்.
14. இயேசு மரித்தோரிலிருந்தெழுந்த பின்பு தம்முடைய சீஷருக்கு அருளின தரிசனங்களில் இது மூன்றாவது தரிசனம்.
15. அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
16. இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
17. மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
18. நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
19. இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்.
20. பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம்பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான்.
21. அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.
22. அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
23. ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லையென்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார்.
24. அந்தச் சீஷனே இவைகளைக்குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.
25. இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்.
அப்போஸ்தலர்
1. தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்தஆவியினாலே கட்டளையிட்ட பின்பு,
2. அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன்.
3. அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
4. அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
5. ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
6. அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.
7. அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
8. பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
9. இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.
10. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று:
11. கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
12. அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
13. அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பற்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.
14. அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
15. அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று:
16. சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்தஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேற வேண்டியதாயிருந்தது.
17. அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்கு பெற்றவனாயிருந்தான்.
18. அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.
19. இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது; அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது.
20. சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.
21. ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,
22. அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.
23. அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும் மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:
24. எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக,
25. இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;
26. பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின்பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
1. பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
2. அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
3. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
4. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
5. வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள்.
6. அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.
7. எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?
8. அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?
9. பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,
10. பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,
11. கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.
12. எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
13. மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.
14. அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
15. நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே.
16. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.
17. கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;
18. என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்.
19. அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழப் பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.
20. கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
21. அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.
22. இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.
23. அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.
24. தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.
25. அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;
26. அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;
27. என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;
28. ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.
29. சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது.
30. அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியால்,
31. அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.
32. இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.
33. அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்தஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.
34. தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும்,
35. நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான்.
36. ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.
37. இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.
38. பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
39. வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;
40. இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
41. அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
42. அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
43. எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.
44. விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.
45. காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.
46. அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
47. தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.
1. ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள்.
2. அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.
3. தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான்.
4. பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.
5. அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான்.
6. அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;
7. வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன்கொண்டது.
8. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூடத் தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.
9. அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு:
10. தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.
11. குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.
12. பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன?
13. ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்குமுன்பாக அவரை மறுதலித்தீர்கள்.
14. பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலைபண்ணவேண்டுமென்று கேட்டு,
15. ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.
16. அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.
17. சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச்செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்.
18. கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார்.
19. ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும்,
20. உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.
21. உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
22. மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
23. அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான்.
24. சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.
25. நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்கும் புத்திரராயிருக்கிறீர்கள்.
26. அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
1. அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து,
2. அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டு,
3. அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள்.
4. வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.
5. மறுநாளிலே ஜனங்களுடைய அதிகாரிகளும் மூப்பரும் வேதபாரகரும்,
6. பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி,
7. அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
8. அப்பொழுது பேதுரு பரிசுத்தஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே,
9. பிணியாளியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக்குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானானென்று நீங்கள் இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால்,
10. உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது.
11. வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.
12. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
13. பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.
14. சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது.
15. அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு:
16. இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.
17. ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாய்ப் பயமுறுத்தவேண்டுமென்று சொல்லிக்கொண்டு,
18. அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
19. பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள்.
20. நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.
21. நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள்.
22. அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.
23. அவர்கள் விடுதலையாக்கப்பட்டபின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள்.
24. அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டுத் தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர்.
25. புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும்,
26. கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.
27. அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,
28. ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.
29. இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களைத் தேவரீர் கவனித்து,
30. உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.
31. அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.
32. விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
33. கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.
34. நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,
35. அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.
36. சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,
37. தனக்கு உண்டாயிருந்த நிலத்தைவிற்று, அதின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
1. அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள்.
2. தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
3. பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்தஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
4. அதை விற்கும் முன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்பும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.
5. அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.
6. வாலிபர் எழுந்து, அவனைச் சீலையில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம்பண்ணினார்கள்.
7. ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.
8. பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள்.
9. பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான்.
10. உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு, அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
11. சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று.
12. அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலொமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள்.
13. மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள்.
14. திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.
15. பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.
16. சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்.
17. அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்த சதுசேய சமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து,
18. அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள்.
19. கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து:
20. நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
21. அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம்பண்ணினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்தவர்களும் வந்து, ஆலோசனைச் சங்கத்தாரையும் இஸ்ரவேல் புத்திரரின் மூப்பரெல்லாரையும் வரவழைத்து, அப்போஸ்தலர்களைக் கொண்டுவரும்படி சிறைச்சாலைக்குச் சேவகரை அனுப்பினார்கள்.
22. சேவகர் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து:
23. சிறைச்சாலை மிகுந்த பத்திரமாய்ப் பூட்டப்பட்டிருக்கவும், காவற்காரர் வெளியே கதவுகளுக்குமுன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள்.
24. இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற சேனைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இதென்னமாய் முடியுமோ என்று, அவர்களைக்குறித்துக் கலக்கமடைந்தார்கள்.
25. அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனுஷர் தேவாலயத்திலே நின்று ஜனங்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான்.
26. உடனே சேனைத்தலைவன் சேவகரோடேகூடப் போய், ஜனங்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான்.
27. அப்படி அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி:
28. நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான்.
29. அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.
30. நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,
31. இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.
32. இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்தஆவியும் சாட்சி என்றார்கள்.
33. அதை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனைபண்ணினார்கள்.
34. அப்பொழுது சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் என்னும் பேர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலரைச் சற்றுநேரம் வெளியே கொண்டுபோகச்சொல்லி,
35. சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
36. ஏனென்றால் இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள்.
37. அவனுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள்.
38. இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால், இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்;
39. தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்.
40. அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள்.
41. அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,
42. தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.
1. அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.
2. அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணைசெய்வது தகுதியல்ல.
3. ஆதலால் சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.
4. நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.
5. இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்தஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,
6. அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.
7. தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
8. ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
9. அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள்.
10. அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.
11. அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி;
12. ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;
13. பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷண வார்த்தைகளை ஓயாமற் பேசுகிறான்;
14. எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக்கேட்டோம் என்றார்கள்.
15. ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள்.
1. பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியாயிருக்கிறது என்று கேட்டான்.
2. அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:
3. நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்.
4. அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.
5. இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்.
6. அந்தப்படி தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள்; அத்தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள்.
7. அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தையோ நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.
8. மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.
9. அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள்.
10. தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
11. பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் மிகுந்த வருத்தமும் உண்டாகி, நம்முடைய பிதாக்களுக்கு ஆகாரம் கிடையாமற்போயிற்று.
12. அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு கேள்விப்பட்டு, நம்முடைய பிதாக்களை முதலாந்தரம் அனுப்பினான்.
13. இரண்டாந்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.
14. பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான்.
15. அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து,
16. அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.
17. ஆபிரகாமுக்குத் தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது,
18. யோசேப்பை அறியாத வேறொரு ராஜா தோன்றின காலமளவும், ஜனங்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.
19. அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.
20. அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.
21. அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.
22. மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.
23. அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேல் புத்திரராகிய தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று.
24. அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணைநின்று, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான்.
25. தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர் அறிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை அறியவில்லை.
26. மறுநாளிலே சண்டைபண்ணிகொண்டிருக்கிற இரண்டுபேருக்கு அவன் எதிர்ப்பட்டு: மனுஷரே, நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள்: ஒருவருக்கொருவர் அநியாயஞ்செய்கிறதென்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான்.
27. பிறனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார்?
28. நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட மனதாயிருக்கிறாயோ என்றான்.
29. இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.
30. நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜுவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.
31. மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்:
32. நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்று கர்த்தர் திருவுளம்பற்றின சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணியாமலிருந்தான்.
33. பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது.
34. எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால், நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.
35. உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே, தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.
36. இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் சிவந்த சமுத்திரத்திலேயும், நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
37. இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக என்று சொன்னவன் இந்த மோசேயே.
38. சீனாய்மலையில் தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே.
39. இவனுக்கு நம்முடைய பிதாக்கள் கீழ்ப்படிய மனதாயிராமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி,
40. ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;
41. அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள்.
42. அப்பொழுது தேவன் அவர்களை விட்டு விலகி, வானசேனைக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,
43. பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதே.
44. மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணுவாயாக என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்ட பிரகாரமாக, அந்தக் கூடாரம் வனாந்தரத்திலே நம்முடைய பிதாக்களோடு இருந்தது.
45. மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்தத் தேசத்தில் கொண்டுவந்து, தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள்.
46. இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான்.
47. சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
48. ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.
49. வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது;
50. இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.
51. வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்தஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.
52. தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள்.
53. தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்.
54. இவைகளை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.
55. அவன் பரிசுத்தஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு:
56. அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.
57. அப்பொழுது அவர்கள் உரத்தசத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து,
58. அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி, அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள்.
59. அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.
60. அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.
1. அவனைக் கொலைசெய்கிறதற்குச் சவுலும் சம்மதித்திருந்தான். அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப்போனார்கள்.
2. தேவபக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணி, அவனுக்காக மிகவும் துக்கங்கொண்டாடினார்கள்.
3. சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான்.
4. சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்.
5. அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக்குறித்துப் பிரசங்கித்தான்.
6. பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டுக் கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள்.
7. அநேகரிலிருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகந் திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள்.
8. அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.
9. சீமோன் என்று பேர்கொண்ட ஒரு மனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியாநாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான்.
10. தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள்.
11. அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.
12. தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
13. அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப் பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான்.
14. சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.
15. இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,
16. அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,
17. அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள்.
18. அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:
19. நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்தஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
20. பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது.
21. உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.
22. ஆகையால் நீ உன் துர்க்குணத்தை விட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.
23. நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.
24. அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.
25. இவ்விதமாய் அவர்கள் கர்த்தருடைய வசனத்தைச் சாட்சியாய் அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்.
26. பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்குமுகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ என்றான்.
27. அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து;
28. ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக்கொண்டிருந்தான்.
29. ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்.
30. அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்.
31. அதற்கு அவன்: ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி; பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான்.
32. அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டு போகப்பட்டார்; மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.
33. அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே.
34. மந்திரி பிலிப்பை நோக்கி: தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
35. அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்.
36. இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.
37. அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசுகிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி;
38. இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள்; பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங் கொடுத்தான்.
39. அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.
40. பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்.
1. சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்;
2. இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான்.
3. அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது;
4. அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.
5. அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.
6. அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
7. அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள்.
8. சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையுங் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள்.
9. அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான்.
10. தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: அனனியாவே, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான்.
11. அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்;
12. அனனியா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார்.
13. அதற்கு அனனியா: ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.
14. இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங் கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான்.
15. அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.
16. அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.
17. அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.
18. உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதிள்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.
19. பின்பு அவன் போஜனம்பண்ணிப் பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சிலநாள் இருந்து,
20. தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.
21. கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்.
22. சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினான்.
23. அநேகநாள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள்.
24. அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
25. சீஷர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள்.
26. சவுல் எருசலேமுக்கு வந்து, சீஷருடனே சேர்ந்துகொள்ளப் பார்த்தான்; அவர்கள் அவனைச் சீஷனென்று நம்பாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள்.
27. அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்ட விதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்.
28. அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து;
29. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்து, கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான்; அவர்களோ அவனைக் கொலைசெய்ய எத்தனம்பண்ணினார்கள்.
30. சகோதரர் அதை அறிந்து, அவனைச் செசரியாவுக்கு அழைத்துக்கொண்டுபோய், தர்சுவுக்கு அனுப்பிவிட்டார்கள்.
31. அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்தஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.
32. பேதுரு போய் எல்லாரையும் சந்தித்துவருகையில், அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான்.
33. அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க் கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான்.
34. பேதுரு அவனைப் பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான்.
35. லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.
36. யோப்பா பட்டணத்தில் கிரேக்குப்பாஷையிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்; அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள்.
37. அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள்.
38. யோப்பா பட்டணம் லித்தா ஊருக்குச் சமீபமானபடியினாலே, பேதுரு அவ்விடத்தில் இருக்கிறானென்று சீஷர்கள் கேள்விப்பட்டு, தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டுமென்று சொல்லும்படி இரண்டு மனுஷரை அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.
39. பேதுரு எழுந்து, அவர்களுடனே கூடப்போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனேகூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள்.
40. பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள்.
41. அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்கு முன் நிறுத்தினான்.
42. இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
43. பின்பு அவன் யோப்பா பட்டணத்திலே தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.
1. இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான்.
2. அவன் தேவபக்தியுள்ளவனும் தன்வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.
3. பகலில் ஏறக்குறைய ஒன்பதாம்மணி நேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு,
4. அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.
5. இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி.
6. அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்திலே தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.
7. கொர்நேலியு தன்னுடனே பேசின தேவதூதன் போனபின்பு, தன் வீட்டு மனுஷரில் இரண்டுபேரையும் தன்னிடத்தில் சேவிக்கிற போர்ச்சேவகரில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அழைத்து,
8. எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொல்லி, அவர்களை யோப்பா பட்டணத்துக்கு அனுப்பினான்.
9. மறுநாளிலே அவர்கள் பிரயாணப்பட்டு, அந்தப் பட்டணத்துக்குச் சமீபித்து வருகையில், பேதுரு ஆறாம்மணி நேரத்திலே ஜெபம்பண்ணும்படி மேல்வீட்டில் ஏறினான்.
10. அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து,
11. வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும்,
12. அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான்.
13. அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.
14. அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.
15. அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.
16. மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
17. அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைக்குறித்துத் தனக்குள்ளே சந்தேகப்படுகையில், இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனுஷர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்து நின்று:
18. பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள்.
19. பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.
20. நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்குஞ் சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்.
21. அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனுஷரிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற காரியம் என்ன என்றான்.
22. அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதஜனங்களெல்லாராலும் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதி உம்மைத் தம்முடைய வீட்டுக்கு அழைப்பித்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி பரிசுத்த தூதனாலே தேவயத்தனமாய்க் கட்டளைபெற்றார் என்றார்கள்.
23. அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, அவர்களுக்கு உபசாரஞ்செய்து, மறுநாளிலே அவர்களுடனேகூடப் புறப்பட்டான்; யோப்பா பட்டணத்தாராகிய சகோதரரில் சிலரும் அவனுடனேகூடப் போனார்கள்.
24. மறுநாளிலே செசரியா பட்டணத்தில் பிரவேசித்தார்கள். கொர்நேலியு தன் உறவின்முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான்.
25. பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.
26. பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான்.
27. அவனுடனே பேசிக்கொண்டு, உள்ளே போய், அநேகர் கூடிவந்திருக்கிறதைக் கண்டு,
28. அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.
29. ஆகையால் நீங்கள் என்னை அழைப்பித்தபோது நான் எதிர்பேசாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைப்பித்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான்.
30. அதற்குக் கொர்நேலியு: நாலு நாளைக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த மனுஷன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று:
31. கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது.
32. யோப்பா பட்டணத்துக்கு ஆள் அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார்.
33. அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்ல காரியம்; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படிக்கு நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவசமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான்.
34. அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும்,
35. எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.
36. எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே.
37. யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தபின்பு, கலிலேயா நாடு முதற்கொண்டு யூதேயா தேசமெங்கும் நடந்த சங்கதி இதுவே.
38. நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.
39. யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள்.
40. மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார்.
41. ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார்.
42. அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.
43. அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
44. இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
45. அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும்,
46. பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்தஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.
47. அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்தஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி,
48. கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.
1. புறஜாதியாரும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலரும் சகோதரரும் கேள்விப்பட்டார்கள்.
2. பேதுரு எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி:
3. விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய், அவர்களோடே போஜனம்பண்ணினீர் என்று, அவனோடே வாக்குவாதம்பண்ணினார்கள்.
4. அதற்குப் பேதுரு காரியத்தை முதலிலிருந்து வரிசையாய் அவர்களுக்கு விவரிக்கத் தொடங்கி:
5. நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தபோது ஞானதிருஷ்டியடைந்து, ஒரு தரிசனத்தைக்கண்டேன்; அதென்னவென்றால், நாலு முனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒரு கூடு வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது.
6. அதிலே நான் உற்றுப்பார்த்துக் கவனிக்கிறபோது, பூமியிலுள்ள நாலுகால் ஜீவன்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் கண்டேன்.
7. அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன்.
8. அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றும் ஒருக்காலும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன்.
9. இரண்டாந்தரமும் வானத்திலிருந்து சத்தம் உண்டாகி: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதேயென்று மறுமொழி சொல்லிற்று.
10. இப்படி மூன்றுதரம் சம்பவித்த பின்பு, எல்லாம் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது.
11. உடனே செசரியாவிலிருந்து என்னிடத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று மனுஷர் நான் இருந்த வீட்டுக்குமுன்னே வந்து நின்றார்கள்.
12. நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடேகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். சகோதரராகிய இந்த ஆறுபேரும் என்னோடேகூட வந்தார்கள்; அந்த மனுஷனுடைய வீட்டுக்குள் பிரவேசித்தோம்.
13. அவனோ தன் வீட்டிலே ஒரு தேவதூதன் நிற்கிறதைக் கண்டதாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைக்கும்படிக்கு மனுஷரை அவ்விடத்திற்கு அனுப்பு;
14. நீயும் உன் வீட்டாரனைவரும் இரட்சிக்கப்படுவதற்கேதுவான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு அறிவித்தான்.
15. நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார்.
16. யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைவுகூர்ந்தேன்.
17. ஆதலால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்குத் தேவன் வரத்தை அநுக்கிரகம்பண்ணினதுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே அநுக்கிரகம்பண்ணியிருக்கும்போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்றான்.
18. இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலைத் தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
19. ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதர்களுக்கேயன்றி மற்ற ஒருவருக்கும் அறிவியாமல், பெனிக்கேநாடு, சீப்புருதீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள்.
20. அவர்களில் சீப்புருதீவாரும் சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்துக்கு வந்து, கிரேக்கருடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்துப் பிரசங்கித்தார்கள்.
21. கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.
22. எருசலேமிலுள்ள சபையார் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள்.
23. அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்.
24. அவன் நல்லவனும், பரிசுத்தஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.
25. பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைக்கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்.
26. அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.
27. அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.
28. அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று.
29. அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள்.
30. அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள்.
1. அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத்தொடங்கி;
2. யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.
3. அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது.
4. அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான்.
5. அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.
6. ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரைபண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
7. அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.
8. தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.
9. அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான்.
10. அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான்.
11. பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான்.
12. அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
13. பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பேர்கொண்ட ஒரு பெண் ஒற்றுக்கேட்க வந்தாள்.
14. அவள் பேதுருவின் சத்தத்தை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறவாமல், உள்ளேயோடி, பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள்.
15. அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள்.
16. பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள்.
17. அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் கையமர்த்தி, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விவரித்து, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரருக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி; புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப் போனான்.
18. பொழுது விடிந்தபின்பு பேதுருவைக்குறித்துச் சேவகருக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல.
19. ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது, காவற்காரரை விசாரணைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயாதேசத்தை விட்டுச் செசரியா பட்டணத்துக்குப்போய், அங்கே வாசம்பண்ணினான்.
20. அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர்பேரிலும் மிகவுங் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்.
21. குறித்தநாளிலே, ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான்.
22. அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.
23. அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.
24. தேவவசனம் வளர்ந்து பெருகிற்று.
25. பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.
1. அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்.
2. அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்தஆவியானவர் திருவுளம்பற்றினார்.
3. அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.
4. அப்படியே அவர்கள் பரிசுத்தஆவியினால் அனுப்பப்பட்டுச் செலூக்கியாபட்டணத்துக்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புருதீவுக்குப் போனார்கள்.
5. சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெபஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான்.
6. அவர்கள் பாப்போ பட்டணம்வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டார்கள்.
7. அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்.
8. மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடைய அந்த எலிமா என்பவன் அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடி, அவர்களோடு எதிர்த்துநின்றான்.
9. அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்தஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து:
10. எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?
11. இதோ, இப்பொழுதே, கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, சிலகாலம் சூரியனைக் காணாமல் நீ குருடனாயிருப்பாய் என்றான். உடனே மந்தாரமும் இருளும் அவன்மேல் விழுந்தது; அவன் தடுமாறி, கைலாகு கொடுக்கிறவர்களைத் தேடினான்.
12. அப்பொழுது அதிபதி சம்பவித்ததைக் கண்டு, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.
13. பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.
14. அவர்கள் பெர்கே பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வுநாளிலே ஜெபஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள்.
15. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன ஆகமமும் வாசித்துமுடிந்தபின்பு: சகோதரரே, நீங்கள் ஜனங்களுக்குப் புத்திசொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று சொல்லும்படி ஜெபஆலயத்தலைவர்கள் அவர்களிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.
16. அப்பொழுது பவுல் எழுந்திருந்து, கையமர்த்தி: இஸ்ரவேலரே, தேவனுக்குப் பயந்து நடக்கிற சகல ஜனங்களே, கேளுங்கள்.
17. இஸ்ரவேலராகிய இந்த ஜனத்தினுடைய தேவன் நம்முடைய பிதாக்களைத் தெரிந்துகொண்டு, எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்தபோது ஜனங்களை உயர்த்தி, தமது புயபலத்தினாலே அதிலிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி,
18. நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்தில் அவர்களை ஆதரித்து,
19. கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக்கொடுத்து,
20. பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார்.
21. அதுமுதல் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய கீசுடைய குமாரனான சவுலை நாற்பது வருஷகாலமாய் அவர்களுக்குக் கொடுத்தார்.
22. பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார்.
23. அவனுடைய சந்ததியிலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார்.
24. இவர் வெளிப்படுவதற்குமுன்னே மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்து யோவான் இஸ்ரவேலர் யாவருக்கும் பிரசங்கித்தான்.
25. யோவான் தன் பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றுகிறபோது: நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள், நான் அவர் அல்ல, இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சையை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல என்றான்.
26. சகோதரரே, ஆபிரகாமின் சந்ததியில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிறவர்களே, இந்த இரட்சிப்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
27. எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும், அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்ததினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்.
28. மரணத்திற்கு ஏதுவானதொன்றும் அவரிடத்தில் காணாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படிக்குப் பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள்.
29. அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள்.
30. தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.
31. தம்முடனேகூடக் கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குப் போனவர்களுக்கு அவர் அநேகநாள் தரிசனமானார்; அவர்களே ஜனங்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறார்கள்.
32. நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,
33. இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.
34. இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம்பற்றினார்.
35. அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.
36. தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.
37. தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.
38. ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,
39. மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.
40. அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே:
41. அசட்டைக்காரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றான்.
42. அவர்கள் யூதருடைய ஜெபஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள்.
43. ஜெபஆலயத்தில் கூடின சபை கலைந்துபோனபின்பு, யூதரிலும் யூதமார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்களிலும் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். அவர்களுடனே இவர்கள் பேசி, தேவனுடைய கிருபையிலே நிலைகொண்டிருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொன்னார்கள்.
44. அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள்.
45. யூதர்கள் ஜனக்கூட்டங்களைக் கண்டபோது பொறாமையினால் நிறைந்து, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள்.
46. அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.
47. நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள்.
48. புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்.
49. கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.
50. யூதர்கள் பக்தியும் கனமுமுள்ள ஸ்திரீகளையும் பட்டணத்து முதலாளிகளையும் எடுத்துவிட்டு, பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தும்படி செய்து, தங்கள் எல்லைகளுக்குப் புறம்பாக அவர்களைத் துரத்திவிட்டார்கள்.
51. இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள்.
52. சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்.
1. இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதரிலும் கிரேக்கரிலும் திரளான ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள்.
2. விசுவாசியாத யூதர்கள் சகோதரருக்கு விரோதமாகப் புறஜாதியாருடைய மனதை எழுப்பிவிட்டு, பகையுண்டாக்கினார்கள்.
3. அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார்.
4. பட்டணத்து ஜனங்கள் பிரிந்து, சிலர் யூதரையும் சிலர் அப்போஸ்தலரையும் சேர்ந்துகொண்டார்கள்.
5. இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டுமென்று, புறஜாதியாரும் யூதரும் அவர்கள் அதிகாரிகளும் அமளிபண்ணுகையில்,
6. இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவுக்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப்புறங்களுக்கும் ஓடிப்போய்;
7. அங்கே சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணினார்கள்.
8. லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து,
9. பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு:
10. நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.
11. பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி,
12. பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள்.
13. அல்லாமலும் பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.
14. அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்:
15. மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.
16. சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும்,
17. அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.
18. இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு ஜனங்கள் பலியிடாதபடிக்கு அவர்களை அமர்த்துகிறது அரிதாயிருந்தது.
19. பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டு போனார்கள்.
20. சீஷர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கையில், அவன் எழுந்து, பட்டணத்திற்குள் பிரவேசித்தான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான்.
21. அந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பிவந்து,
22. சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
23. அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.
24. பின்பு பிசீதியாநாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து,
25. பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள்.
26. அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின கிரியைக்காகத் தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டுப் புறப்பட்டு அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.
27. அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத்திறந்ததையும் அறிவித்து,
28. அங்கே சீஷருடனேகூட அநேகநாள் சஞ்சரித்திருந்தார்கள்.
1. சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம்பண்ணினார்கள்.
2. அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்த வேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்.
3. அந்தப்படி அவர்கள் சபையாரால் வழிவிட்டனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின் வழியாய்ப் போய், புறஜாதியார் மனந்திரும்பின செய்தியை அறிவித்து, சகோதரர் எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள்.
4. அவர்கள் எருசலேமுக்கு வந்து, சபையாராலும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையெல்லாம் அறிவித்தார்கள்.
5. அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம்பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள்.
6. அப்போஸ்தலரும் மூப்பரும் இந்தக் காரியத்தைக் குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.
7. மிகுந்த தர்க்கம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரரே, நீங்கள் அறிந்திருக்கிறபடி புறஜாதியார் என்னுடைய வாயினாலே சுவிசேஷ வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்னே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார்.
8. இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்தஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக்குறித்துச் சாட்சிகொடுத்தார்;
9. விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார்.
10. இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்?
11. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான்.
12. அப்பொழுது கூடிவந்திருந்த யாவரும் அமைந்திருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும் விவரித்துச் சொல்லக்கேட்டார்கள்.
13. அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள்.
14. தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே.
15. அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது.
16. எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு,
17. நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.
18. உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது.
19. ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும்,
20. விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.
21. மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெபஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்.
22. அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக்கண்டது. அவர்கள் யாரென்றால், சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதாவும் சீலாவுமே.
23. இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்:
24. எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடைய வேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,
25. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட,
26. எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக் கண்டது.
27. அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள்.
28. எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.
29. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்தஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.
30. அவர்கள் அனுப்பிவிடப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்து, சபையைக் கூடிவரச்செய்து, நிருபத்தை ஒப்புவித்தார்கள்.
31. அதை அவர்கள் வாசித்து, அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள்.
32. யூதா சீலா என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்திசொல்லி, அவர்களைத் திடப்படுத்தி;
33. சிலகாலம் அங்கேயிருந்து, பின்பு சகோதரரால் சமாதானத்தோடே அப்போஸ்தலரிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள்.
34. ஆகிலும் சீலாவுக்கு அங்கே தரித்திருக்கிறது நலமாய்க் கண்டது.
35. பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள்.
36. சிலநாளைக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான்.
37. அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானைக்கூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான்.
38. பவுலோ: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடேகூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான்.
39. இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவுக்குப் போனான்.
40. பவுலோ சீலாவைத் தெரிந்துகொண்டு, சகோதரராலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு,
41. சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான்.
1. அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ, அவன் தகப்பன் கிரேக்கன்.
2. அவன் லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான்.
3. அவனைப் பவுல் தன்னுடனே கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அவ்விடங்களிலிருக்கும் யூதர்களெல்லாரும் அறிந்திருந்தபடியால், அவர்கள் நிமித்தம் அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.
4. அவர்கள் பட்டணங்கள்தோறும் போகையில், எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு ஒப்புவித்தார்கள்.
5. அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.
6. அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்தஆவியினாலே தடைபண்ணப்பட்டு,
7. மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம் பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.
8. அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள்.
9. அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது.
10. அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி,
11. துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி,
12. அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம்.
13. ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.
14. அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.
15. அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.
16. நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.
17. அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.
18. இப்படி அநேகநாள் செய்துகொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று.
19. அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு போனார்கள்.
20. அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி,
21. ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும் தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள் என்றார்கள்.
22. அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அதிகாரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக்கவும் சொல்லி;
23. அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள்.
24. அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான்.
25. நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
26. சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.
27. சிறைச்சாலைக்காரன் நித்திரை தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான்.
28. பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான்.
29. அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து,
30. அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.
31. அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
32. அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.
33. மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
34. பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்குப் போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்.
35. பொழுது விடிந்தபின்பு: அந்த மனுஷரை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் சேவகர்களை அனுப்பினார்கள்.
36. சிறைச்சாலைக்காரன் பவுலுக்கு இந்த வார்த்தைகளை அறிவித்து: உங்களை விடுதலையாக்கும்படிக்கு அதிகாரிகள் கட்டளை அனுப்பினார்கள்; ஆகையால் நீங்கள் இப்பொழுது புறப்பட்டுச் சமாதானத்துடனே போங்கள் என்றான்.
37. அதற்குப் பவுல்: ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம் விசாரியாமல், வெளியரங்கமாய் அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலையாக்குகிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை வெளியே அழைத்து அனுப்பி விடட்டும் என்றான்.
38. சேவகர் இந்த வார்த்தைகளை அதிகாரிகளுக்கு அறிவித்தார்கள். ரோமராயிருக்கிறார்களென்று அவர்கள் கேட்டபொழுது பயந்துவந்து,
39. அவர்களுடனே தயவாய்ப் பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுபோய், பட்டணத்தை விட்டுப் புறப்பட்டுப்போகும்படி கேட்டுக்கொண்டார்கள்.
40. அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளிடத்திற்குப்போய், சகோதரரைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் போய்விட்டார்கள்.
1. அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள்; அங்கே யூதருக்கு ஒரு ஜெபஆலயம் இருந்தது.
2. பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,
3. கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.
4. அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கரில் திரளான ஜனங்களும், கனம்பொருந்திய ஸ்திரீகளில் அநேகரும் விசுவாசித்து, பவுலையும் சீலாவையும் சேர்ந்து கொண்டார்கள்.
5. விசுவாசியாத யூதர்கள் வைராக்கியங்கொண்டு வீணராகிய சில பொல்லாதவர்களைச் சேர்த்துக்கொண்டு, கூட்டங்கூடி, பட்டணத்தில் அமளியுண்டாக்கி, யாசோனுடைய வீட்டை வளைந்துகொண்டு, அவர்களைப் பட்டணத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுவர வகைதேடினார்கள்.
6. அவர்களைக் காணாமல், யாசோனையும் சில சகோதரரையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுவந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.
7. இவர்களை யாசோன் ஏற்றுக்கொண்டான். இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவனை ராஜா என்று சொல்லி, இராயனுடைய கட்டளைகளுக்கு விரோதமாகச் செய்கிறார்களென்று கூக்குரலிட்டு,
8. இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள்.
9. பின்பு அவர்கள் யாசோனிடத்திலும் மற்றவர்களிடத்திலும் ஜாமீன் வாங்கிக்கொண்டு, அவர்களை விட்டுவிட்டார்கள்.
10. உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய ஜெபஆலயத்திற்குப் போனார்கள்.
11. அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.
12. அதனால் அவர்களில் அநேகம்பேரும் கனம்பொருந்திய கிரேக்கரில் அநேக ஸ்திரீகளும் புருஷர்களும் விசுவாசித்தார்கள்.
13. பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுகிறதென்று தெசலோனிக்கேயரான யூதர்கள் அறிந்தபோது, அங்கேயும் வந்து, ஜனங்களைக் கிளப்பிவிட்டார்கள்.
14. உடனே சகோதரர் பவுலைச் சமுத்திரவழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயும் அங்கே தங்கியிருந்தார்கள்.
15. பவுலை வழிநடத்தினவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் அழைத்துக்கொண்டுபோய்; அங்கே சீலாவும் தீமோத்தேயும் அதிசீக்கிரமாகத் தன்னிடத்திற்கு வரும்படி அவர்களுக்குச் சொல்லக் கட்டளை பெற்றுக்கொண்டு புறப்பட்டுப்போனார்கள்.
16. அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து,
17. ஜெபஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான்.
18. அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம்பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள்.
19. அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா?
20. நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறிய மனதாயிருக்கிறோம் என்றார்கள்.
21. அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.
22. அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்.
23. எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
24. உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.
25. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.
26. மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;
27. கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.
28. ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
29. நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்குத் தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.
30. அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
31. மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.
32. மரித்தோரின் உயிர்த்தெழுதலைக்குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள்.
33. இப்படியிருக்க, பவுல் அவர்களை விட்டுப் போய்விட்டான்.
34. சிலர் அவனைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ்மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள்.
1. அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து;
2. யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப் போகும்படி கிலவுதியுராயன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாய் வந்திருந்த பொந்துதேசத்தானாகிய ஆக்கில்லா என்னும் நாமமுள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே கண்டு, அவர்களிடத்திற்குப் போனான்.
3. அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி, வேலைசெய்துகொண்டு வந்தான்.
4. ஓய்வுநாள்தோறும் அவன் ஜெபஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்திசொன்னான்.
5. மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான்.
6. அவர்கள் எதிர்த்துநின்று தூஷித்தபோது, அவன் தன் வஸ்திரங்களை உதறி: உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாயிருக்கிறேன்; இதுமுதல் புறஜாதியாரிடத்திற்குப் போகிறேனென்று அவர்களுடனே சொல்லி,
7. அவ்விடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்னும் பேருள்ள ஒருவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெபஆலயத்திற்கு அடுத்ததாயிருந்தது.
8. ஜெபஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.
9. இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே;
10. நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.
11. அவன் ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்குள்ளே உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.
12. கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒருமனப்பட்டு, பவுலுக்கு விரோதமாய் எழும்பி, அவனை நியாயாசனத்துக்கு முன்பாகக் கொண்டுபோய்:
13. இவன் வேதப்பிரமாணத்துக்கு விகற்பமாய்த் தேவனைச் சேவிக்கும்படி மனுஷருக்குப் போதிக்கிறான் என்றார்கள்.
14. பவுல் பேசுவதற்கு எத்தனப்படுகையில், கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே, இது ஒரு அநியாயமாய், அல்லது பொல்லாத நடக்கையாயிருக்குமேயானால் நான் உங்களுக்குப் பொறுமையாய்ச் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும்.
15. இது சொற்களுக்கும், நாமங்களுக்கும், உங்கள் வேதத்துக்கும் அடுத்த தர்க்கமானபடியினாலே, இப்படிப்பட்டவைகளைக்குறித்து விசாரணைசெய்ய எனக்கு மனதில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி,
16. அவர்களை நியாயாசனத்தினின்று துரத்திவிட்டான்.
17. அப்பொழுது கிரேக்கரெல்லாரும் ஜெபஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நியாயாசனத்துக்கு முன்பாக அடித்தார்கள். இவைகளில் ஒன்றையுங்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை.
18. பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகோதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியாதேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்.
19. அவன் எபேசுபட்டணத்துக்கு வந்தபோது, அங்கே அவர்களை விட்டு நீங்கி, ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதருடனே சம்பாஷணைபண்ணினான்.
20. அவன் இன்னுஞ் சிலகாலம் தங்களுடனே இருக்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டபோது, அவன் சம்மதியாமல்,
21. வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் நான் எருசலேமில் இருக்கவேண்டும், தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடத்திற்கு வருவேனென்று சொல்லி, அவர்களிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி, எபேசுவை விட்டுப் புறப்பட்டு,
22. செசரியா பட்டணத்துக்கு வந்து, எருசலேமுக்குப் போய், சபையைச் சந்தித்து, அந்தியோகியாவுக்குப் போனான்.
23. அங்கே சிலகாலம் சஞ்சரித்தபின்பு, புறப்பட்டு, கிரமமாய்க் கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீஷரெல்லாரையும் திடப்படுத்தினான்.
24. அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசுபட்டணத்துக்கு வந்தான்.
25. அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான்.
26. அவன் ஜெபஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக்காண்பித்தார்கள்.
27. பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள்.
28. அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான்.
1. அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு:
2. நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.
3. அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.
4. அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
5. அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
6. அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
7. அந்த மனுஷரெல்லாரும் ஏறக்குறையப் பன்னிரண்டுபேராயிருந்தார்கள்.
8. பின்பு பவுல் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய்ப் பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான்.
9. சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது, அவன் அவர்களை விட்டு விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்துக்கொண்டுவந்தான்.
10. இரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள்.
11. பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.
12. அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன.
13. அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள்.
14. பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள்.
15. பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,
16. பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்.
17. இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது.
18. விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள்.
19. மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள்.
20. இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.
21. இவைகள் முடிந்தபின்பு, பவுல் மக்கெதோனியா அகாயா என்னும் நாடுகளில் சுற்றிநடந்து, எருசலேமுக்குப்போகும்படி ஆவியில் நிருணயம்பண்ணிக்கொண்டு: நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும் பார்க்கவேண்டியதென்று சொல்லி,
22. தனக்கு உதவிசெய்தவர்களில் இரண்டுபேராகிய தீமோத்தேயுவையும் எரஸ்துவையும் மக்கெதோனியாவுக்கு அனுப்பிவிட்டு; தான் பின்னுஞ் சிலகாலம் ஆசியாவிலே தங்கினான்.
23. அக்காலத்திலே இந்த மார்க்கத்தைக்குறித்துப் பெரிய கலகம் உண்டாயிற்று.
24. எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான்.
25. இவர்களையும் இப்படிப்பட்ட தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மனுஷர்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள்.
26. இப்படியிருக்க, கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல் என்பவன் சொல்லி, எபேசுவிலேமாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக ஜனங்களுக்குப் போதித்து, அவர்களை வசப்படுத்திக்கொண்டான் என்று நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள்.
27. இதனால் நம்முடைய தொழில் அற்றுப்போகும்படியான அபாயம் நேரிட்டிருக்கிறதுமல்லாமல், மகா தேவியாகிய தியானாளுடைய கோவில் எண்ணமற்றுப் போகிறதற்கும், ஆசியா முழுமையும் பூச்சக்கரமும் சேவிக்கிற அவளுடைய மகத்துவம் அழிந்துபோகிறதற்கும் ஏதுவாயிருக்கிறது என்றான்.
28. அவர்கள் இதைக் கேட்டு, கோபத்தால் நிறைந்து: எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று சத்தமிட்டார்கள்.
29. பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு வழித்துணையாய் வந்த மக்கெதோனியராகிய காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அரங்கசாலைக்குப் பாய்ந்தோடினார்கள்.
30. பவுல் கூட்டத்துக்குள்ளே போக மனதாயிருந்தபோது, சீஷர்கள் அவனைப் போகவிடவில்லை.
31. ஆசியாநாட்டுத் தலைவரில் அவனுக்குச் சிநேகிதராயிருந்த சிலரும் அவனிடத்திற்கு ஆள் அனுப்பி, அரங்கசாலைக்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள்.
32. கூட்டத்தில் அமளியுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது.
33. அப்பொழுது யூதர்கள் அலெக்சந்தர் என்பவனை முன்னிற்கத் தள்ளுகையில், கூட்டத்திலே சிலர் அவனை முன்னே இழுத்துவிட்டார்கள். அலெக்சந்தர் கையமர்த்தி, ஜனங்களுக்கு உத்தரவுசொல்ல மனதாயிருந்தான்.
34. அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.
35. பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி: எபேசியரே, எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ?
36. இது எதிர்பேசப்படாத காரியமாகையால், நீங்கள் ஒன்றும் பதறிச்செய்யாமல் அமர்ந்திருக்கவேண்டும்.
37. இந்த மனுஷரை இங்கே கொண்டுவந்தீர்கள்; இவர்கள் கோவிற்கொள்ளைக்காரருமல்ல, உங்கள் தேவியைத் தூஷிக்கிறவர்களுமல்ல.
38. தெமேத்திரியுக்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒருகாரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, தேசாதிபதிகளும் இருக்கிறார்கள்; ஒருவர்பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும்.
39. நீங்கள் வேறே யாதொரு காரியத்தைக்குறித்து விசாரிக்கவேண்டியதானால், அது நியாயசங்கத்திலே தீர்க்கப்படும்.
40. இன்றைக்கு உண்டான கலகத்தைக்குறித்து நாம் உத்தரவுசொல்லுகிறதற்கு ஏதுவில்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாயிருப்போமே என்று சொல்லி,
41. பின்பு கூட்டத்தை அனுப்பிவிட்டான்.
1. கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் போகப் புறப்பட்டான்.
2. அவன் அந்தத் திசைகளிலே சுற்றி நடந்து, சீஷர்களுக்கு வெகுவாய்ப் புத்திசொல்லி, கிரேக்கு தேசத்திலே சேர்ந்தான்.
3. அங்கே மூன்றுமாதம் சஞ்சரித்தபின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியாதேசத்துக்குப்போக மனதாயிருந்தபோது, யூதர்கள் அவனுக்குத் தீமைசெய்யும்படி இரகசியமான யோசனைகொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம் பண்ணினான்.
4. பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டாராகிய தீகிக்கும் துரோப்பீமும், ஆசியாநாடுவரைக்கும் அவனுக்கு வழித்துணையாய் வந்தார்கள்.
5. இவர்கள் முன்னாகப் போய், துரோவாபட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள்.
6. புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பிபட்டணத்தை விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம்.
7. வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
8. அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டிலே அநேக விளக்குகள் வைத்திருந்தது.
9. அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரைமயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான்.
10. உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான்.
11. பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டுப் புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான்.
12. அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.
13. பவுல் ஆசோபட்டணம்வரைக்கும் கரைவழியாய்ப் போக மனதாயிருந்தபடியால், அவன் திட்டம்பண்ணியிருந்தபடியே, நாங்கள் கப்பல் ஏறி, அந்தப் பட்டணத்தில் அவனை ஏற்றிக்கொள்ளும்படி முன்னாக அங்கே போயிருந்தோம்.
14. அவன் ஆசோபட்டணத்திலே எங்களைக் கண்டபோது, நாங்கள் அவனை ஏற்றிக்கொண்டு, மித்திலேனே பட்டணத்துக்கு வந்தோம்.
15. அவ்விடம்விட்டு, மறுநாளிலே கீயுதீவுக்கு எதிராக வந்து,
16. பவுல் கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமிலிருக்கவேண்டுமென்று தீவிரப்பட்டதினிமித்தம், தான் ஆசியாவிலே காலம்போக்காதபடிக்கு, எபேசு பட்டணத்தைக் கடந்து போகவேண்டுமென்று தீர்மானித்ததினால், மறுநாளிலே சாமுதீவு பிடித்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்துபட்டணத்துக்கு வந்தோம்.
17. மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான்.
18. அவர்கள் தன்னிடத்தில் வந்து சேர்ந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியாநாட்டில் வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களுடனே இன்னவிதமாய் இருந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
19. வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன்.
20. பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி,
21. தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன்.
22. இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன்.
23. கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்தஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.
24. ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.
25. இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன்.
26. தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,
27. எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.
28. ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.
29. நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.
30. உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.
31. ஆனபடியால், நான் மூன்றுவருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்.
32. இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.
33. ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை.
34. நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.
35. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.
36. இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம்பண்ணினான்.
37. அவர்களெல்லாரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு,
38. பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்து, கப்பல்வரைக்கும் அவனுடனே கூடப்போனார்கள்.
1. நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து, துறைபெயர்ந்தபின்பு, நேராயோடி, கோஸ்தீவையும், மறுநாளில் ரோதுதீவையும் சேர்ந்து, அவ்விடம் விட்டுப் பத்தாரா பட்டணத்துக்கு வந்து,
2. அங்கே பெனிக்கே தேசத்திற்குப்போகிற ஒரு கப்பலைக் கண்டு, அதிலே ஏறிப்போனோம்.
3. சீப்புருதீவைக் கண்டு, அதை இடதுபுறமாக விட்டு, சீரியாநாட்டிற்கு ஓடி, தீருபட்டணத்துறையில் இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாயிருந்தது.
4. அவ்விடத்திலுள்ள சீஷரைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாள் தங்கினோம். அவர்கள் பவுலை நோக்கி: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள்.
5. அந்த நாட்கள் நிறைவேறினபின்பு, நாங்கள் புறப்பட்டுப்போகையில், அவர்களெல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூடப் பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினோம்.
6. ஒருவரிடத்திலொருவர் உத்தரவு பெற்றுக்கொண்டபின்பு, நாங்கள் கப்பல் ஏறினோம்; அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள்.
7. நாங்கள் கப்பல்யாத்திரையை முடித்து, தீருபட்டணத்தை விட்டுப் பித்தொலோமாய் பட்டணத்துக்கு வந்து, சகோதரரை வினவி, அவர்களிடத்தில் ஒருநாள் தங்கினோம்.
8. மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டுச் செசரியாபட்டணத்துக்கு வந்து, ஏழுபேரில் ஒருவனாகிய பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசித்து, அவனிடத்தில் தங்கினோம்.
9. தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள்.
10. நாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.
11. அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான்.
12. இவைகளை நாங்கள் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அவ்விடத்தாரும் அவனை வேண்டிக்கொண்டோம்.
13. அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.
14. அவன் சம்மதியாதபடியினாலே, கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவதென்று அமர்ந்திருந்தோம்.
15. அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பிரயாண சாமான்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம்.
16. செசரியாபட்டணத்திலுள்ள சீஷரில் சிலர் எங்களுடனேகூட வந்ததுமன்றி, சீப்புருதீவானாகிய மினாசோன் என்னும் ஒரு பழைய சீஷனிடத்திலே நாங்கள் தங்கும்படியாக அவனையும் தங்களோடே கூட்டிக்கொண்டு வந்தார்கள்.
17. நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர் எங்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.
18. மறுநாளிலே பவுல் எங்களைக் கூட்டிக்கொண்டு, யாக்கோபினிடத்திற்குப் போனான்; மூப்பரெல்லாரும் அங்கே கூடிவந்தார்கள்.
19. அவர்களை அவன் வினவி, தன் ஊழியத்தினாலே தேவன் புறஜாதிகளிடத்தில் செய்தவைகளை ஒவ்வொன்றாய் விவரித்துச்சொன்னான்.
20. அதை அவர்கள் கேட்டுக் கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள். பின்பு அவர்கள் அவனை நோக்கி: சகோதரனே, யூதர்களுக்குள் அநேகமாயிரம்பேர் விசுவாசிகளாயிருக்கிறதைப் பார்க்கிறீரே, அவர்களெல்லாரும் நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
21. புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.
22. இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கூட்டங்கூடுவார்கள்.
23. ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி நீர் செய்யவேண்டும்; அதென்னவென்றால், பிரார்த்தனை பண்ணிக்கொண்டவர்களாகிய நாலுபேர் எங்களிடத்தில் இருக்கிறார்கள்.
24. அவர்களை நீர் சேர்த்துக்கொண்டு, அவர்களுடனேகூடச் சுத்திகரிப்பு செய்துகொண்டு, அவர்கள் தலைச்சவரம்பண்ணிக் கொள்வதற்குச் செல்லுமானதைச் செலவுசெய்யும்; அப்படிச் செய்தால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்ட காரியங்கள் அபத்தமென்றும், நீரும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடக்கிறவரென்றும் எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.
25. விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள்.
26. அப்பொழுது பவுல் அந்த மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும் சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும் வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்.
27. அந்த ஏழுநாட்களும் நிறைவேறி வருகையில், ஆசியாநாட்டிலிருந்து வந்த யூதர்கள் அவனைத் தேவாலயத்திலே கண்டு, ஜனங்களெல்லாரையும் எடுத்துவிட்டு, அவன்மேல் கைபோட்டு:
28. இஸ்ரவேலரே, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்தத் தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.
29. எபேசியனாகிய துரோப்பீமு என்பவன் முன்னே நகரத்தில் பவுலுடனேகூட இருக்கிறதைக் கண்டிருந்தபடியால், பவுல் அவனைத் தேவாலயத்தில் கூட்டிக்கொண்டு வந்திருப்பானென்று நினைத்தார்கள்.
30. அப்பொழுது நகரமுழுவதும் கலக்கமுற்றது; ஜனங்கள் கூட்டமாய் ஓடிவந்து, பவுலைப்பிடித்து, அவனைத் தேவாலயத்திற்குப் புறம்பே இழுத்துக்கொண்டுபோனார்கள்; உடனே கதவுகள் பூட்டப்பட்டது.
31. அவர்கள் அவனைக் கொலைசெய்ய எத்தனித்திருக்கையில், எருசலேம் முழுவதும் கலக்கமாயிருக்கிறதென்று போர்ச்சேவகரின் சேனாபதிக்குச் செய்திவந்தது.
32. உடனே அவன் போர்ச்சேவகரையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அவர்களிடத்திற்கு ஓடினான்; சேனாபதியையும் போர்ச்சேவகரையும் அவர்கள் கண்டபோது பவுலை அடிக்கிறதை விட்டு நிறுத்தினார்கள்.
33. அப்பொழுது சேனாபதி கிட்டவந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும் என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.
34. அதற்கு ஜனங்கள் பலவிதமாய்ச் சத்தமிட்டார்கள்; சந்தடியினாலே நிச்சயத்தை அவன் அறியக்கூடாமல், அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.
35. அவன் படிகள்மேல் ஏறினபோது ஜனக்கூட்டம் திரண்டு பின்சென்று,
36. இவனை அகற்றும் என்று உக்கிரமாய்க் கூப்பிட்டபடியினாலே, போர்ச்சேவகர் அவனைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாயிருந்தது.
37. அவர்கள் பவுலைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில், அவன் சேனாபதியை நோக்கி: நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்றான். அதற்கு அவன்: உனக்குக் கிரேக்குபாஷை தெரியுமா?
38. நீ இந்த நாட்களுக்குமுன்னே கலகமுண்டாக்கி, நாலாயிரங் கொலைபாதகரை வனாந்தரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன் அல்லவா என்றான்.
39. அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள கீர்த்திபெற்ற தர்சுபட்டணத்து யூதன்; ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
40. உத்தரவானபோது, பவுல் படிகளின்மேல் நின்று ஜனங்களைப் பார்த்துக் கையமர்த்தினான்; மிகுந்த அமைதலுண்டாயிற்று; அப்பொழுது அவன் எபிரெயு பாஷையிலே பேசத்தொடங்கினான்.
1. சகோதரரே, பிதாக்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களுக்குச் செவிகொடுப்பீர்களாக என்றான்.
2. அவன் எபிரெயு பாஷையிலே தங்களுடனே பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, அதிக அமைதலாயிருந்தார்கள். அப்பொழுது அவன்:
3. நான் யூதன், சிலிசியாநாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.
4. நான் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தினேன்.
5. அதற்குப் பிரதான ஆசாரியரும் மூப்பர் யாவரும் சாட்சிகொடுப்பார்கள்; அவர்கள் கையிலே நான் சகோதரருக்கு நிருபங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவிலிருக்கிறவர்களும் தண்டிக்கப்படும்படிக்கு, அவர்களைக் கட்டி, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி அவ்விடத்திற்குப்போனேன்.
6. அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமானபோது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச்சுற்றிப் பிரகாசித்தது.
7. நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
8. அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.
9. என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.
10. அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
11. அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகு கொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன்.
12. அப்பொழுது வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன்,
13. என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப்பார்த்தேன்.
14. அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.
15. நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்குமுன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய்.
16. இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.
17. பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன்.
18. அவர் என்னை நோக்கி: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆதலால் நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.
19. அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெபஆலயங்களிலே அடித்ததையும்,
20. உம்முடைய சாட்சியாகிய ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலைசெய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் வஸ்திரங்களைக் காத்துக்கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன்.
21. அதற்கு அவர்: நீ போ, நான் உன்னைத் தூரமாய்ப் புறஜாதிகளிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.
22. இந்த வார்த்தைவரைக்கும் அவனுக்குச் செவிகொடுத்தார்கள். பின்பு: இப்படிப்பட்டவனைப் பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.
23. இவ்விதமாய் அவர்கள் கூக்குரலிட்டுத் தங்கள் மேல்வஸ்திரங்களை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கையில்,
24. சேனாபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி கட்டளையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாய் இப்படிக் கூக்குரலிட்ட முகாந்தரத்தை அறியும்படிக்கு அவனைச் சவுக்கால் அடித்து விசாரிக்கச் சொன்னான்.
25. அந்தப்படி அவர்கள் அவனை வாரினால் அழுந்தக் கட்டும்போது, பவுல் சமீபமாய் நின்ற நூற்றுக்கு அதிபதியை நோக்கி: ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனுஷனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா என்றான்.
26. நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, சேனாபதியினிடத்திற்குப் போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிரும்; இந்த மனுஷன் ரோமன் என்றான்.
27. அப்பொழுது சேனாபதி பவுலினிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான்.
28. சேனாபதி பிரதியுத்தரமாக: நான் மிகுந்த திரவியத்தினாலே இந்தச் சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ இந்தச் சிலாக்கியத்திற்குரியவனாகப் பிறந்தேன் என்றான்.
29. அவனை அடித்து விசாரிக்கும்படி எத்தனமாயிருந்தவர்கள் உடனே அவனை விட்டுவிட்டார்கள். சேனாபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டுவித்ததற்காகப் பயந்தான்.
30. பவுலின்மேல் யூதராலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாய் அறிய விரும்பி, அவன் மறுநாளிலே அவனைக் கட்டவிழ்த்து, பிரதான ஆசாரியரையும் ஆலோசனைச் சங்கத்தார் அனைவரையும் கூடிவரும்படி கட்டளையிட்டு, அவனைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.
1. பவுல் ஆலோசனைச் சங்கத்தாரை உற்றுப்பார்த்து: சகோதரரே, இந்நாள்வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடே தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான்.
2. அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய அனனியா அவனுக்குச் சமீபமாய் நின்றவர்களை நோக்கி: இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான்.
3. அப்பொழுது பவுல் அவனைப்பார்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா என்றான்.
4. சமீபத்திலே நின்றவர்கள்: தேவனுடைய பிரதானஆசாரியரை வைகிறாயா என்றார்கள்.
5. அதற்குப் பவுல்: சகோதரரே, இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் ஜனத்தின் அதிபதியைத் தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றான்.
6. பின்பு அவர்களில், சதுசேயர் ஒரு பங்கும் பரிசேயர் ஒரு பங்குமாயிருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன். மரித்தோருடைய உயிர்த்தெழுதலைப்பற்றிய நம்பிக்கையைக்குறித்து நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன் என்று ஆலோசனைச் சங்கத்திலே சத்தமிட்டுச் சொன்னான்.
7. அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் வாக்குவாதமுண்டாயிற்று; கூட்டம் இரண்டாகப் பிரிந்தது.
8. என்னத்தினாலென்றால், சதுசேயர் உயிர்த்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயரோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள்.
9. ஆகையால் மிகுந்த கூக்குரல் உண்டாயிற்று. பரிசேய சமயத்தாரான வேதபாரகரில் சிலர் எழுந்து: இந்த மனுஷனிடத்தில் ஒரு பொல்லாங்கையும் காணோம்; ஒரு ஆவி அல்லது ஒரு தேவதூதன் இவனுடனே பேசினதுண்டானால், நாம் தேவனுடனே போர்செய்வது தகாது என்று வாதாடினார்கள்.
10. மிகுந்த கலகம் உண்டானபோது, பவுல் அவர்களால் பீறுண்டுபோவானென்று சேனாபதி பயந்து, போர்ச்சேவகர் போய், அவனை அவர்கள் நடுவிலிருந்து இழுத்துக் கோட்டைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.
11. அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார்.
12. விடியற்காலமானபோது, யூதரில் சிலர் ஒருமித்து, தாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள்.
13. இப்படிக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டவர்கள் நாற்பதுபேருக்கு அதிகமாயிருந்தார்கள்.
14. அவர்கள் பிரதானஆசாரியர்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும் போய்: நாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் ஒன்றும் புசிப்பதில்லையென்று உறுதியான சபதம் பண்ணிக்கொண்டோம்.
15. ஆனபடியினால் நீங்கள் ஆலோசனைச் சங்கத்தாரோடே கூடப்போய், அவனுடைய காரியத்தை அதிக திட்டமாய் விசாரிக்க மனதுள்ளவர்கள்போலச் சேனாபதிக்குக் காண்பித்து, அவர் நாளைக்கு அவனை உங்களிடத்தில் கூட்டிக்கொண்டு வரும்படி அவரிடத்தில் கேட்பீர்களாக. அவன் கிட்டவருகிறதற்குள்ளே நாங்கள் அவனைக் கொலைசெய்ய ஆயத்தமாயிருப்போம் என்றார்கள்.
16. இந்தச் சர்ப்பனையைப் பவுலினுடைய சகோதரியின் குமாரன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள்ளே போய், பவுலுக்கு அறிவித்தான்.
17. அப்பொழுது பவுல் நூற்றுக்கு அதிபதிகளில் ஒருவனை அழைத்து, இந்த வாலிபனைச் சேனாபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோம்; அவரிடத்தில் இவன் அறிவிக்கவேண்டிய ஒரு காரியம் உண்டு என்றான்.
18. அந்தப்படியே அவன் இவனைச் சேனாபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோய்: காவலில் வைக்கப்பட்டிருக்கிற பவுல் என்னை அழைத்து, உமக்கொரு காரியத்தைச் சொல்லவேண்டுமென்றிருக்கிற இந்த வாலிபனை உம்மிடத்திற்குக் கொண்டுபோகும்படி என்னைக் கேட்டுக்கொண்டான் என்றான்.
19. அப்பொழுது சேனாபதி அவனுடைய கையைப் பிடித்துத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: நீ என்னிடத்தில் அறிவிக்கவேண்டிய காரியம் என்னவென்று கேட்டான்.
20. அதற்கு அவன்: யூதர்கள் பவுலின் காரியத்தை அதிக திட்டமாய் விசாரிக்க மனதுள்ளவர்கள்போல, நீர் நாளைக்கு அவனை ஆலோசனைச் சங்கத்தாரிடத்தில் கொண்டுவரும்படி உம்மை வேண்டிக்கொள்ள உடன்பட்டிருக்கிறார்கள்.
21. நீர் அவர்களுக்குச் சம்மதிக்கவேண்டாம்; அவர்களில் நாற்பதுபேருக்கு அதிகமானவர்கள் அவனைக் கொலைசெய்யுமளவும் தாங்கள் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டு, அவனுக்குப் பதிவிருந்து, உம்முடைய உத்தரவுக்காக இப்பொழுது காத்துக்கொண்டு ஆயத்தமாயிருக்கிறார்கள் என்றான்.
22. அப்பொழுது சேனாபதி: நீ இவைகளை எனக்கு அறிவித்ததாக ஒருவருக்குஞ் சொல்லாதே என்று கட்டளையிட்டு, வாலிபனை அனுப்பிவிட்டான்.
23. பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியாபட்டணத்திற்குப் போகும்படி இருநூறு காலாட்களையும், எழுபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும், இராத்திரியில் மூன்றாம்மணி வேளையிலே, ஆயத்தம்பண்ணுங்களென்றும்;
24. பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்குப் பத்திரமாய்க் கொண்டுபோகும்படிக்குக் குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி,
25. ஒரு நிருபத்தையும் எழுதினான்; அதின் விவரமாவது:
26. கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியு லீசியா வாழ்த்துதல் சொல்லி அறிவிக்கிறது என்னவென்றால்:
27. இந்த மனுஷனை யூதர் பிடித்துக் கொலைசெய்யப்போகிற சமயத்தில், நான் போர்ச்சேவகரோடே கூடப்போய், இவன் ரோமனென்று அறிந்து, இவனை விடுவித்தேன்.
28. அவர்கள் இவன்மேல் சாட்டின குற்றத்தை நான் அறியவேண்டுமென்று இவனை அவர்கள் ஆலோசனைச் சங்கத்துக்குமுன் கொண்டுபோனேன்.
29. இவன் அவர்களுடைய வேதத்திற்கடுத்த விஷயங்களைக்குறித்துக் குற்றஞ்சாட்டப்பட்டவனென்று விளங்கினதேயல்லாமல், மரணத்துக்காவது விலங்குக்காவது ஏற்ற குற்றம் யாதொன்றும் இவனிடத்தில் இல்லையென்று கண்டறிந்தேன்.
30. யூதர்கள் இவனுக்கு விரோதமாய்ச் சர்ப்பனையான யோசனை செய்கிறார்களென்று எனக்குத் தெரியவந்தபோது, உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பினேன்; குற்றஞ்சாட்டுகிறவர்களும் இவனுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற காரியங்களை உமக்கு முன்பாக வந்து சொல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டேன். சுகமாயிருப்பீராக, என்றெழுதினான்.
31. போர்ச்சேவகர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே, பவுலைக் கூட்டிக்கொண்டு, இராத்திரியிலே அந்திப்பத்திரி ஊருக்குப் போய்,
32. மறுநாளில் குதிரைவீரரை அவனுடனேகூடப் போகும்படி அனுப்பிவிட்டு, தாங்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள்.
33. அவர்கள் செசரியாபட்டணத்தில் சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள்.
34. தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது:
35. உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வந்திருக்கும்போது உன் காரியத்தைத் திட்டமாய்க் கேட்பேனென்று சொல்லி, ஏரோதின் அரமனையிலே அவனைக் காவல்பண்ணும்படி கட்டளையிட்டான்.
1. ஐந்துநாளைக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும்கூடப் போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள்.
2. அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி:
3. கனம்பொருந்திய பேலிக்ஸே, உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சவுக்கியத்தை அநுபவிக்கிறதையும், உம்முடைய பராமரிப்பினாலே இந்தத் தேசத்தாருக்குச் சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே அங்கிகாரம்பண்ணுகிறோம்.
4. உம்மை நான் அநேக வார்த்தைகளினாலே அலட்டாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதை நீர் பொறுமையாய்க் கேட்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.
5. என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.
6. இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப் பார்த்தான். நாங்கள் இவனைப்பிடித்து எங்கள் வேதப்பிரமாணத்தின்படியே நியாயந்தீர்க்க மனதாயிருந்தோம்.
7. அப்பொழுது சேனாபதியாகிய லீசியா வந்து, மிகுந்த பலாத்காரமாய் இவனை எங்கள் கைகளிலிருந்து பறித்துக்கொண்டுபோய்,
8. இவன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சாட்டுகிற குற்றங்கள் யாவையும் அறிந்துகொள்ளலாம் என்றான்.
9. யூதர்களும் அதற்கு இசைந்து, இவைகள் யதார்த்தந்தான் என்றார்கள்.
10. பவுல் பேசும்படி தேசாதிபதி சைகைகாட்டினபோது, அவன் உத்தரவாக: நீர் அநேக வருஷகாலமாய் இந்தத் தேசத்தாருக்கு நியாயாதிபதியாயிருக்கிறீரென்றறிந்து, நான் என் காரியங்களைக்குறித்து அதிக தைரியத்துடன் உத்தரவு சொல்லுகிறேன்.
11. நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாள்மாத்திரம் ஆயிற்றென்று நீர் அறிந்துகொள்ளலாம்.
12. தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம்பண்ணினதையும், நான் ஜெபஆலயங்களிலாகிலும் நகரத்திலாகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் கண்டதில்லை.
13. இப்பொழுது என்மேல் சாட்டுகிற குற்றங்களை இவர்கள் ரூபிக்கவுமாட்டார்கள்.
14. உம்மிடத்தில் ஒன்றை ஒத்துக்கொள்ளுகிறேன்; அதென்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனைசெய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்க்கதரிசிகள் புஸ்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் விசுவாசித்து,
15. நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டிருக்கிறது போல, நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.
16. இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.
17. அநேக வருஷங்களுக்குப் பின்பு நான் என் ஜனத்தாருக்குத் தர்மப்பணத்தை ஒப்புவிக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன்.
18. அப்பொழுது கூட்டமில்லாமலும் அமளியில்லாமலும் தேவாலயத்திலே சுத்திகரித்துக்கொண்டவனாயிருக்கையில், ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைக் கண்டார்கள்.
19. அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாகிலும் உண்டாயிருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்கு முன்பாகக் குற்றஞ்சாட்டவேண்டும்.
20. நான் ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக நின்றபோது அவர்கள் யாதொரு அநியாயத்தை என்னிடத்தில் கண்டதுண்டானால் இவர்களே அதைச்சொல்லட்டும்.
21. நான் அவர்களுக்குள்ளே நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேனென்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றங்காணப்படவில்லை என்றான்.
22. இந்த மார்க்கத்தின் விஷயங்களை விவரமாய் அறிந்திருந்த பேலிக்ஸ் இவைகளைக் கேட்டபொழுது: சேனாபதியாகிய லீசியா வரும்போது உங்கள் காரியங்களைத் திட்டமாய் விசாரிப்பேன் என்று சொல்லி;
23. பவுலைக் காவல்பண்ணவும், கண்டிப்பில்லாமல் நடத்தவும், அவனுக்கு ஊழியஞ்செய்கிறதற்கும் அவனைக் கண்டுகொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனுஷர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் நூற்றுக்கு அதிபதியானவனுக்குக் கட்டளையிட்டு, அவர்களைக் காத்திருக்கும்படிசெய்தான்.
24. சில நாளைக்குப்பின்பு பேலிக்ஸ் யூதஸ்திரீயாகிய தன் மனைவி துருசில்லாளுடனேகூட வந்து, பவுலை அழைப்பித்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன் சொல்லக்கேட்டான்.
25. அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்.
26. மேலும், அவன் பவுலை விடுதலைபண்ணும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாயிருந்தான்; அதினிமித்தம் அவன் அநேகந்தரம் அவனை அழைத்து, அவனுடனே பேசினான்.
27. இரண்டு வருஷம் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாய்ப் பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதருக்குத் தயவுசெய்ய மனதாய்ப் பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.
1. பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்றுநாளானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.
2. அப்பொழுது பிரதான ஆசாரியனும் யூதரில் முதன்மையானவர்களும் அவனிடத்தில் வந்து, பவுலுக்கு விரோதமாகப் பிராதுபண்ணி,
3. அவனை வழியிலே கொன்றுபோடும்படி சர்ப்பனையான யோசனையுள்ளவர்களாய், தங்கள்மேல் தயவுசெய்து, அவனை எருசலேமுக்கு அழைப்பிக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள்.
4. அதற்குப் பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலைச் செசரியாவிலே காவல்பண்ணியிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன்.
5. ஆகையால் உங்களில் திறமுள்ளவர்கள் கூடவந்து, அந்த மனுஷனிடத்தில் குற்றம் ஏதாகிலும் உண்டானால், அந்தக் குற்றத்தை அவன்மேல் சாட்டட்டும் என்றான்.
6. அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாள் சஞ்சரித்து, பின்பு செசரியாவுக்குப் போய், மறுநாளிலே நியாயாசனத்தில் உட்கார்ந்து, பவுலைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.
7. அவன் வந்தபோது, எருசலேமிலிருந்துவந்த யூதர்கள் அவனைச் சூழ்ந்துநின்று, தங்களால் ரூபிக்கக்கூடாத அநேகங் கொடிய குற்றங்களை அவன்மேல் சாட்டினார்கள்.
8. அதற்கு அவன் உத்தரவாக: நான் யூதருடைய வேதப்பிரமாணத்துக்காகிலும், தேவாலயத்துக்காகிலும், இராயருக்காகிலும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லையென்று சொன்னான்.
9. அப்பொழுது பெஸ்து யூதருக்குத் தயவுசெய்ய மனதாய், பவுலை நோக்கி: நீ எருசலேமுக்குப் போய், அவ்விடத்திலே இந்தக் காரியங்களைக்குறித்து எனக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்றான்.
10. அதற்குப் பவுல்: நான் இராயருடைய நியாயாசனத்துக்கு முன்பாக நிற்கிறேன்; அதற்கு முன்பாக நான் நியாயம் விசாரிக்கப்படவேண்டியது; யூதருக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாய் அறிந்திருக்கிறீர்.
11. நான் அநியாயஞ்செய்து, மரணத்துக்குப் பாத்திரமானது ஏதாகிலும் நடப்பித்ததுண்டானால், நான் சாகாதபடிக்கு மனுகேட்கமாட்டேன். இவர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்கள் முற்றிலும் அபத்தமானால், அவர்களுக்குத் தயவுபண்ணும்பொருட்டு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்புக்கொடுக்கலாகாது. இராயருக்கு அபயமிடுகிறேன் என்றான்.
12. அப்பொழுது பெஸ்து தன் ஆலோசனைக்காரருடனே ஆலோசித்து: நீ இராயருக்கு அபயமிட்டாயே; இராயரிடத்திற்கே போகக்கடவாயென்று உத்தரவு சொன்னான்.
13. சிலநாள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைக் கண்டுகொள்ளும்படி செசரியாவுக்கு வந்தார்கள்.
14. அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்திருக்கையில், பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவுக்கு விவரித்து: பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனுஷன் இருக்கிறான்.
15. நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதருடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் பிராதுபண்ணி, அவனுக்கு விரோதமாகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.
16. அவர்களுக்கு நான் பிரதியுத்தரமாக: குற்றஞ்சாட்டப்பட்ட மனுஷன் குற்றஞ்சாட்டினவர்களுக்கு முகமுகமாய் நின்று, சாட்டின குற்றத்துக்குத் தனக்காக எதிருத்தரவு சொல்ல அவனுக்கு இடங்கிடைக்கிறதற்குமுன்னே, குற்றஞ்சாட்டினவர்கள் பட்சமாய் அவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறது ரோமருக்கு வழக்கமல்ல என்றேன்.
17. ஆகையால் அவர்கள் இங்கே கூடிவந்தபோது, நான் எவ்வளவும் தாமதம்பண்ணாமல், மறுநாள் நியாயாசனத்தில் உட்கார்ந்து, அந்த மனுஷனைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்.
18. அப்பொழுது குற்றஞ்சாட்டினவர்கள் வந்துநின்று, நான் நினைத்திருந்த குற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல்,
19. தங்களுடைய மார்க்கத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசு என்னும் ஒருவன் உயிரோடிருக்கிறானென்று பவுல் சாதித்ததைக்குறித்தும் சில தர்க்கவிஷயங்களை அவன் பேரில் விரோதமாய்ச் சொன்னார்கள்.
20. இப்படிப்பட்ட தர்க்க விஷயங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப் போய், அங்கே இவைகளைக்குறித்து நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்று கேட்டேன்.
21. அதற்குப் பவுல், தான் இராயருக்குமுன்பாக நியாயம் விசாரிக்கப்படும்படிக்கு நிறுத்திவைக்கப்படவேண்டுமென்று அபயமிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்புமளவும் காவல்பண்ணும்படி கட்டளையிட்டேன் என்றான்.
22. அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: அந்த மனுஷன் சொல்லுகிறதை நானும் கேட்க மனதாயிருக்கிறேன் என்றான். அதற்கு அவன்: நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான்.
23. மறுநாளிலே அகிரிப்பாவும் பெர்னீக்கேயாளும் மிகுந்த ஆடம்பரத்துடனே வந்து சேனாபதிகளோடும் பட்டணத்துப்பிரதான மனுஷரோடுங்கூட நியாயஸ்தலத்தில் பிரவேசித்தார்கள். உடனே பெஸ்துவினுடைய கட்டளையின்படி பவுல் கொண்டுவரப்பட்டான்.
24. அப்பொழுது பெஸ்து: அகிரிப்பா ராஜாவே, எங்களோடேகூட இவ்விடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனுஷனைக்குறித்து யூதஜனங்களெல்லாரும் எருசலேமிலும் இவ்விடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது தகாதென்று சொல்லிக் கூக்குரலிட்டார்கள்.
25. இவன் மரணத்துக்குப் பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன்தானே இராயனுக்கு அபயமிட்டபடியினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானம்பண்ணினேன்.
26. இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு நிச்சயப்பட்ட காரியமொன்றும் எனக்கு விளங்கவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே,
27. இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுதத்தக்க விசேஷம் ஏதாகிலும் எனக்கு விளங்கும்படி, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாய் அகிரிப்பா ராஜாவே, உமக்கு முன்பாகவும் கொண்டுவந்தேன் என்றான்.
1. அகிரிப்பா பவுலை நோக்கி: நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக உத்தரவு சொல்லத்தொடங்கினான்.
2. அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சாட்டுகிற சகல காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக உத்தரவு சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன்.
3. விசேஷமாய் நீர் யூதருடைய சகல முறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகையால் நான் சொல்வதைப் பொறுமையோடே கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.
4. நான் என் சிறுவயதுமுதற்கொண்டு, எருசலேமிலே என் ஜனத்தாருக்குள்ளே இருந்தபடியால், ஆதிமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லாரும் அறிந்திருக்கிறார்கள்.
5. நம்முடைய மார்க்கத்திலுள்ள சமயபேதங்களில் மிகவும் கண்டிப்பான சமயத்துக்கு இசைந்தபடி பரிசேயனாய் நடந்தேனென்று சாட்சிசொல்ல அவர்களுக்கு மனதிருந்தால் சொல்லலாம்.
6. தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயத்தீர்ப்படைகிறவனாய் நிற்கிறேன்.
7. இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தாரும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். அகிரிப்பா ராஜாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள் என்மேல் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
8. தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?
9. முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு விரோதமாய் அநேக காரியங்களை நடப்பிக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன்.
10. அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரம் பெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படுகையில் நானும் சம்மதித்திருந்தேன்.
11. சகல ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து, தேவதூஷணஞ் சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள் பேரில் மூர்க்கவெறி கொண்டவனாய் அந்நியபட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்.
12. இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது,
13. மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன்.
14. நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
15. அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.
16. இப்பொழுது நீ எழுந்து, காலுன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்.
17. உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி,
18. அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.
19. ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை.
20. முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு புறஜாதியாரிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன்.
21. இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்யப் பிரயத்தனம்பண்ணினார்கள்.
22. ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறி வருகிறேன்.
23. தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுய ஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்.
24. இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், பெஸ்து உரத்த சத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான்.
25. அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன்.
26. இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல.
27. அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீர் என்று அறிவேன் என்றான்.
28. அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான்.
29. அதற்குப் பவுல்: நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
30. இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களுடனேகூட உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து,
31. தனியே போய்: இந்த மனுஷன் மரணத்துக்காவது கட்டுகளுக்காவது பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
32. அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: இந்த மனுஷன் இராயனுக்கு அபயமிடாதிருந்தானானால், இவனை விடுதலைபண்ணலாகும் என்றான்.
1. நாங்கள் இத்தாலியா தேசத்துக்குக் கப்பல் ஏறிப் போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்து பட்டாளத்தைச்சேர்ந்த யூலியு என்னும் பேர்கொண்ட நூற்றுக்கு அதிபதியினிடத்தில் ஒப்புவித்தார்கள்.
2. அதிரமித்தியம் ஊர்க்கப்பலில் நாங்கள் ஏறி, ஆசியா நாட்டுக் கரைபிடித்தோடவேண்டுமென்று நினைத்துப் புறப்பட்டோம். மக்கெதோனியா தேசத்துத் தெசலோனிக்கே பட்டணத்தானாகிய அரிஸ்தர்க்கு எங்களுடனேகூட இருந்தான்.
3. மறுநாள் சீதோன் துறைபிடித்தோம். யூலியு பவுலைப் பட்சமாய் நடப்பித்து, அவன் தன் சிநேகிதரிடத்திலே போய்ப் பராமரிப்படையும்படிக்கு உத்தரவு கொடுத்தான்.
4. அவ்விடம்விட்டு நாங்கள் புறப்பட்டு, எதிர்காற்றாயிருந்தபடியினால், சீப்புருதீவின் ஒதுக்கிலே ஓடினோம்.
5. பின்பு சிலிசியா பம்பிலியா நாடுகளின் கடல்வழியாய் ஓடி, லீசியா நாட்டு மீறாப்பட்டணத்தில் சேர்ந்தோம்.
6. இத்தாலியாவுக்குப் போகிற அலெக்சந்திரியாபட்டணத்துக் கப்பலை நூற்றுக்கு அதிபதி அங்கே கண்டு, எங்களை அதில் ஏற்றினான்.
7. காற்று எங்களைத் தடுத்தபடியினாலே, நாங்கள் அநேகநாள் மெதுவாய்ச் சென்று, வருத்தத்தோடே கினீதுபட்டணத்திற்கு எதிரே வந்து, சல்மோனே ஊருக்கு எதிராய்க் கிரேத்தாதீவின் ஒதுக்கில் ஓடினோம்.
8. அதை வருத்தத்தோடே கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயபட்டணம் அதற்குச் சமீபமாயிருந்தது.
9. வெகுகாலம் சென்று, உபவாசநாளும் கழிந்துபோனபடியினாலே, இனிக் கப்பல்யாத்திரை செய்கிறது மோசத்திற்கு ஏதுவாயிருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி:
10. மனுஷரே, இந்த யாத்திரையினாலே சரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி, அவர்களை எச்சரித்தான்.
11. நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான்.
12. அந்தத் துறைமுகம் மழைகாலத்திலே தங்குவதற்கு வசதியாயிராதபடியினால், அவ்விடத்தை விட்டுத் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கியிருக்கும் கிரேத்தாதீவிலுள்ள துறைமுகமாகிய பேனிக்ஸ் என்னும் இடத்தில் சேரக்கூடுமானால் சேர்ந்து, மழைகாலத்தில் தங்கும்படி அநேகம்பேர் ஆலோசனை சொன்னார்கள்.
13. தென்றல் மெதுவாயடித்தபடியால், தாங்கள் கோரினது கைகூடிவந்ததென்று எண்ணி, அவ்விடம்விட்டுப் பெயர்ந்து கிரேத்தாதீவுக்கு அருகாக ஓடினார்கள்.
14. கொஞ்சநேரத்துக்குள்ளே யூரோக்கிலிதோன் என்னுங் கடுங்காற்று அதில் மோதிற்று.
15. கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம்.
16. அப்படிக் கிலவுதா என்னப்பட்ட ஒரு சின்ன தீவின் ஒதுக்கிலே ஓடுகையில் வெகு வருத்தத்தோடே படவை வசப்படுத்தினோம்.
17. அதை அவர்கள் தூக்கியெடுத்தபின்பு, பல உபாயங்கள் செய்து, கப்பலைச்சுற்றிக் கட்டி, சொரிமணலிலே விழுவோமென்று பயந்து, பாய்களை இறக்கி, இவ்விதமாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.
18. மேலும் பெருங்காற்று மழையில் நாங்கள் மிகவும் அடிபட்டபடியினால், மறுநாளில் சில சரக்குகளைக் கடலில் எறிந்தார்கள்.
19. மூன்றாம் நாளிலே கப்பலின் தளவாடங்களை எங்கள் கைகளினாலே எடுத்து எறிந்தோம்.
20. அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக் கொண்டிருந்தபடியினால், இனி தப்பிப் பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று.
21. அநேகநாள் அவர்கள் போஜனம்பண்ணாமல் இருந்தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது.
22. ஆகிலும், திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது.
23. ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று:
24. பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்.
25. ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன்.
26. ஆயினும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான்.
27. பதினாலாம் இராத்திரியானபோது, நாங்கள் ஆதிரியாக் கடலிலே அலைவுபட்டு ஓடுகையில், நடுஜாமத்திலே கப்பலாட்களுக்கு ஒரு கரை கிட்டிவருகிறதாகத் தோன்றிற்று.
28. உடனே அவர்கள் விழுதுவிட்டு இருபது பாகமென்று கண்டார்கள்; சற்றப்புறம் போனபொழுது, மறுபடியும் விழுது விட்டுப் பதினைந்து பாகமென்று கண்டார்கள்.
29. பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள்.
30. அப்பொழுது கப்பலாட்கள் கப்பலை விட்டோடிப்போக வகைதேடி, முன்னணியத்திலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிற பாவனையாய்ப் படவைக் கடலில் இறக்குகையில்,
31. பவுல் நூற்றுக்கு அதிபதியையும் சேவகரையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான்.
32. அப்பொழுது, போர்ச்சேவகர் படவின் கயிறுகளை அறுத்து, அதைத் தாழவிழவிட்டார்கள்.
33. பொழுது விடிகையில் எல்லாரும் போஜனம்பண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்று பதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள்.
34. ஆகையால் போஜனம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான்.
35. இப்படிச் சொல்லி, அப்பத்தை எடுத்து, எல்லாருக்குமுன்பாகவும் தேவனை ஸ்தோத்திரித்து, அதைப் பிட்டுப் புசிக்கத்தொடங்கினான்.
36. அப்பொழுது எல்லாரும் திடமனப்பட்டுப் புசித்தார்கள்.
37. கப்பலில் இருநூற்றெழுபத்தாறு பேர் இருந்தோம்.
38. திருப்தியாகப் புசித்தபின்பு அவர்கள் கோதுமையைக் கடலிலே எறிந்து, கப்பலை இலகுவாக்கினார்கள்.
39. பொழுது விடிந்தபின்பு, இன்னபூமியென்று அறியாதிருந்தார்கள். அப்பொழுது சமமான கரையுள்ள ஒரு துறைமுகம் அவர்களுக்குத் தென்பட்டது; கூடுமானால் அதற்குள் கப்பலையோட்ட யோசனையாயிருந்து,
40. நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுவிட்டு, சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டு, பெரும்பாயைக் காற்றுமுகமாய் விரித்து, கரைக்கு நேராய் ஓடி,
41. இருபுறமும் கடல் மோதிய ஒரு இடத்திலே கப்பலைத் தட்டவைத்தார்கள்; முன்னணியம் ஊன்றி அசையாமலிருந்தது, பின்னணியம் அலைகளுடைய பலத்தினால் உடைந்துபோயிற்று.
42. அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் ஒருவனும் நீந்தி ஓடிப்போகாதபடிக்கு அவர்களைக் கொன்றுபோடவேண்டுமென்று போர்ச்சேவகர் யோசனையாயிருந்தார்கள்.
43. நூற்றுக்கு அதிபதி பவுலைக் காப்பாற்ற மனதாயிருந்து, அவர்களுடைய யோசனையைத் தடுத்து, நீந்தத்தக்கவர்கள் முந்திக் கடலில் விழுந்து கரையேறவும்,
44. மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பல் துண்டுகள்மேலும் போய்க் கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாய் எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.
1. நாங்கள் தப்பிக் கரைசேர்ந்தபின்பு, அந்தத் தீவின்பேர் மெலித்தா என்று அறிந்தோம்.
2. அந்நியராகிய அந்தத் தீவார் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த வேளையிலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள்.
3. பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது.
4. விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
5. அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்.
6. அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள்.
7. தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்றுநாள் பட்சமாய் விசாரித்தான்.
8. புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான்.
9. இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து, குணமாக்கப்பட்டார்கள்.
10. அவர்கள் எங்களுக்கு அநேக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள்.
11. மூன்றுமாதம் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்குத் தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியாபட்டணத்துக் கப்பலிலே நாங்கள் ஏறிப் புறப்பட்டு,
12. சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்றுநாள் தங்கினோம்.
13. அவ்விடம்விட்டுச் சுற்றியோடி, ரேகியுதுறைமுகத்துக்கு வந்து சேர்ந்தோம். மறுநாளில் தென்றற் காற்றெடுக்கையில் புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலிபட்டணத்திற்கு வந்து,
14. அங்கே சகோதரரைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.
15. அவ்விடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபுரம்வரைக்கும், சிலர் மூன்று சத்திரம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தான்.
16. நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூற்றுக்கு அதிபதி தன் காவலிலிருந்தவர்களைச் சேனாபதியினிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்.
17. மூன்றுநாளைக்குப்பின்பு, பவுல் யூதரில் பிரதானமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரரே, நம்முடைய ஜனங்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.
18. அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்துக்கேதுவான குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள்.
19. யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனுக்கு அபயமிடவேண்டியதாயிருந்தது; ஆயினும் என் ஜனத்தார்மேல் யாதொரு குற்றஞ் சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை.
20. இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களுடனே பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான்.
21. அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் காகிதம் வரவுமில்லை, வந்த சகோதரரில் ஒருவனும் உன்பேரில் ஒரு பொல்லாங்கை அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை.
22. எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.
23. அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலமே தொடங்கிச் சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சிகொடுத்து விஸ்தரித்துப் பேசினான்.
24. அவன் சொன்னவைகளைச் சிலர் விசுவாசித்தார்கள், சிலர் விசுவாசியாதிருந்தார்கள்.
25. இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் ஒவ்வாமலிருந்து, புறப்பட்டுப்போகையில், பவுல் அவர்களுக்குச் சொன்ன வாக்கியமாவது:
26. நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள்.
27. இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்தஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார்.
28. ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு புறஜாதியாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான்.
29. இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் தர்க்கம் பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள்.
30. பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருஷமுழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு,
31. மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.
ரோமர்
1. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,
2. ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது;
3. நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
4. இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,
5. மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
6. அவர் சகல ஜாதிகளையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும்,
7. தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்.
8. உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
9. நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார்.
10. நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும்,
11. உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடேகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே,
12. எவ்விதத்திலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்குத் தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம் சீக்கிரத்தில் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
13. சகோதரரே, புறஜாதிகளான மற்றவர்களுக்குள்ளே நான் பலனை அடைந்தது போல உங்களுக்குள்ளும் சில பலனை அடையும்படிக்கு, உங்களிடத்தில் வர பலமுறை யோசனையாயிருந்தேன், ஆயினும் இதுவரைக்கும் எனக்குத் தடையுண்டாயிற்று என்று நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.
14. கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன்.
15. ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்.
16. கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.
17. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.
18. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
19. தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
20. எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.
21. அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
22. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,
23. அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.
24. இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
25. தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
26. இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.
27. அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
28. தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
29. அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,
30. புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்,
31. உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
32. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
1. ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.
2. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
3. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ?
4. அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?
5. உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.
6. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.
7. சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.
8. சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.
9. முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.
10. முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.
11. தேவனிடத்தில் பட்சபாதமில்லை.
12. எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.
13. நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.
14. அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.
15. அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.
16. என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.
17. நீ யூதனென்று பெயர்பெற்று, நியாயப்பிரமாணத்தின்மேல் பற்றுதலாயிருந்து, தேவனைக்குறித்து மேன்மைபாராட்டி,
18. நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாய், அவருடைய சித்தத்தை அறிந்து, நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கிறாயே.
19. நீ உன்னைக் குருடருக்கு வழிகாட்டியாகவும், அந்தகாரத்திலுள்ளவர்களுக்கு வெளிச்சமாகவும்,
20. பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே.
21. இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா?
22. விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா?
23. நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா?
24. எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.
25. நீ நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்; நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாயிற்றே.
26. மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக் கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா?
27. சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானல்லவா?
28. ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.
29. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.
1. இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன?
2. அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.
3. சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ?
4. அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.
5. நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?
6. அப்படிச் சொல்லக்கூடாது; சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி?
7. அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?
8. நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.
9. ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே.
10. அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
11. உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;
12. எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
13. அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;
14. அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது;
15. அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது;
16. நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது;
17. சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்;
18. அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.
19. மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.
20. இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.
21. இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.
22. அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.
23. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
24. இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
25. தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும்,
26. கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.
27. இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப்பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே.
28. ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.
29. தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.
30. விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.
31. அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.
1. அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்?
2. ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை.
3. வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.
4. கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்.
5. ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
6. அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு:
7. எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
8. எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.
9. இந்தப் பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்குமாத்திரம் வருமோ, விருத்தசேதனமில்லாதவனுக்கும் வருமோ? ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறோமே.
10. அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனமுள்ளவனாயிருந்தபோதோ, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதோ? விருத்தசேதனமுள்ளவனாயிருந்தபோதல்ல, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதே.
11. மேலும், விருத்தசேதனமில்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும்பொருட்டாக அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும்,
12. விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாய்மாத்திரமல்ல, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனமில்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாயுமிருக்கிறவர்களுக்குத் தகப்பனாயிருக்கும்படிக்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.
13. அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது.
14. நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால் விசுவாசம் வீணாய்ப்போம், வாக்குத்தத்தமும் அவமாகும்.
15. மேலும் நியாயப்பிரமாணம் கோபாக்கினையை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணமில்லாவிட்டால் மீறுதலுமில்லை.
16. ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது.
17. அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.
18. உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.
19. அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறுவயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.
20. தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல்,
21. தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.
22. ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
23. அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காக மாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
24. நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.
25. அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.
1. இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
2. அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.
3. அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,
4. உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.
5. மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
6. அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.
7. நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.
8. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
9. இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
10. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
11. அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்.
12. இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.
13. நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.
14. அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
15. ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
16. மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.
17. அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.
18. ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.
19. அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
20. மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.
21. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.
1. ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.
2. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?
3. கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
4. மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
5. ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
6. நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
7. மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
8. ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூடப் பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
9. மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.
10. அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
11. அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
12. ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.
13. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
14. நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
15. இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவஞ்செய்யலாமா? கூடாதே.
16. மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?
17. முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.
18. பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.
19. உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.
20. பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள்.
21. இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
22. இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
23. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
1. நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா?
2. அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள்.
3. ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம்பண்ணினாலும் விபசாரியல்ல.
4. அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.
5. நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது.
6. இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
7. ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.
8. பாவமானது கற்பனையினாலே சமயம் பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே.
9. முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன்.
10. இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக்கண்டேன்.
11. பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது.
12. ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.
13. இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.
14. மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன்.
15. எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.
16. இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே.
17. ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.
18. அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை.
19. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.
20. அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.
21. ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்.
22. உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.
23. ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.
24. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?
25. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.
1. ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
2. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
3. அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
4. மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.
5. அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
6. மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.
7. எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.
8. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.
9. தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.
10. மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.
11. அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
12. ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல.
13. மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
14. மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
15. அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
16. நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.
17. நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.
18. ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
19. மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.
20. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே,
21. அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
22. ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
23. அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
24. அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?
25. நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.
26. அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
27. ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.
28. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
29. தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
30. எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.
31. இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?
32. தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?
33. தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
34. ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே.
35. உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,
36. கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
37. இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
38. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,
39. உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
1. எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;
2. நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்தஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.
3. மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே.
4. அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;
5. பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.
6. தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே.
7. அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே.
8. அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்.
9. அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே.
10. இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது,
11. பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,
12. மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.
13. அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
14. ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.
15. அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.
16. ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.
17. மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.
18. ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.
19. இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்துநிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய்.
20. அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?
21. மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
22. தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,
23. தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?
24. அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.
25. அந்தப்படி: எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.
26. நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.
27. அல்லாமலும் இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள் என்றும்;
28. அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.
29. அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்.
30. இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினாலாகும் நீதியே.
31. நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை.
32. என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.
33. இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
1. சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது.
2. தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.
3. எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.
4. விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
5. மோசே நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து: இவைகளைச் செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான்.
6. விசுவாசத்தினாலாகும் நீதியானது: கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்?
7. அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக என்று சொல்லுகிறதுமன்றி;
8. இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.
9. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
11. அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
12. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.
13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
14. அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?
15. அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.
16. ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.
17. ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.
18. இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.
19. இஸ்ரவேலர் அதை அறியவில்லையா என்று கேட்கிறேன், அறிந்தார்கள். முதலாவது, மோசே: எனக்கு ஜனங்களல்லாதவர்களைக்கொண்டு நான் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன்; புத்தியீனமுள்ள ஜனங்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன் என்றான்.
20. அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தைரியங்கொண்டு சொல்லுகிறான்.
21. இஸ்ரவேலரைக்குறித்தோ: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாயிருக்கிற ஜனங்களிடத்திற்கு நாள்முழுதும் என் கைகளை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான்.
1. இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.
2. தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறியீர்களா? அவன் தேவனை நோக்கி:
3. கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத்தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு விரோதமாய் விண்ணப்பம்பண்ணினபோது,
4. அவனுக்கு உண்டான தேவஉத்தரவு என்ன? பாகாலுக்குமுன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே.
5. அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது.
6. அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே.
7. அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள்.
8. கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
9. அன்றியும், அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும் கண்ணியும் இடறுதற்கான கல்லும் பதிலுக்குப் பதிலளித்தலுமாகக்கடவது;
10. காணாதபடிக்கு அவர்களுடைய கண்கள் அந்தகாரப்படக்கடவது; அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும் என்று தாவீதும் சொல்லியிருக்கிறான்.
11. இப்படியிருக்க, விழுந்துபோகும்படிக்கா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படியல்லவே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது.
12. அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும்.
13. புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்க வேண்டுமென்று,
14. என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்.
15. அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானதுபோலிருக்குமல்லவோ?
16. மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்.
17. சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்,
18. நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமைபாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள்.
19. நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப்போடப்பட்டதென்று சொல்லுகிறாயே.
20. நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு.
21. சுபாவக்கிளைகளைத் தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு.
22. ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவுகிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்.
23. அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்குத் தேவன் வல்லவராயிருக்கிறாரே.
24. சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?
25. மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.
26. இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்;
27. நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது.
28. சுவிசேஷத்தைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் பிதாக்களினிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருக்கிறார்கள்.
29. தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.
30. ஆதலால், நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம்பெற்றிருக்கிறதுபோல,
31. அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள்.
32. எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.
33. ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!
34. கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?
35. தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?
36. சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
1. அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
2. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
3. அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.
4. ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல,
5. அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.
6. நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்.
7. ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,
8. புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.
9. உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள்.
10. சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.
11. அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.
12. நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
13. பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.
14. உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றிச் சபியாதிருங்கள்.
15. சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.
16. ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்.
17. ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.
18. கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.
19. பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.
20. அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.
21. நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.
1. எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
2. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.
3. மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.
4. உனக்கு நன்மை உண்டாகும் பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே.
5. ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும்.
6. இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே.
7. ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.
8. ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.
9. எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.
10. அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.
11. நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.
12. இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.
13. களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.
14. துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
1. விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.
2. ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளைமாத்திரம் புசிக்கிறான்.
3. புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே.
4. மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.
5. அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.
6. நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான்.
7. நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை.
8. நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.
9. கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.
10. இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.
11. அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.
12. ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.
13. இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
14. ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒருபொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும்.
15. போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.
16. உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.
17. தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
18. இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.
19. ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.
20. போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும்.
21. மாம்சம் புசிக்கிறதும், மதுபானம் பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.
22. உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்குமுன்பாக உன்மட்டும் இருக்கட்டும். நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான்.
23. ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.
1. அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.
2. நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.
3. கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.
4. தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.
5. நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு,
6. பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக.
7. ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.
8. மேலும், பிதாக்களுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்;
9. புறஜாதியாரும் இரக்கம் பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது.
10. மேலும், புறஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார்.
11. மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார்.
12. மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கைவைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான்.
13. பரிசுத்தஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.
14. என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன்.
15. அப்படியிருந்தும், சகோதரரே, புறஜாதியாராகிய பலி பரிசுத்தஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு, நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டு,
16. தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரியமாய் எழுதினேன்.
17. ஆதலால் நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மைபாராட்ட எனக்கு இடமுண்டு.
18. புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வேறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை.
19. இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன்.
20. மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள் காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே,
21. நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.
22. உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன்.
23. இப்பொழுது இந்தத் திசைகளிலே எனக்கு இடமில்லாதபடியினாலும், உங்களிடத்தில் வரும்படி அநேக வருஷமாய் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
24. நான் ஸ்பானியா தேசத்திற்குப் பிரயாணம்பண்ணுகையில் உங்களிடத்தில் வந்து, உங்களைக் கண்டுகொள்ளவும், உங்களிடத்தில் சற்றுத் திருப்தியடைந்தபின்பு, அவ்விடத்திற்கு உங்களால் வழிவிட்டனுப்பப்படவும், எனக்குச் சமயங் கிடைக்குமென்று நம்பியிருக்கிறேன்.
25. இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன்.
26. மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம் செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்;
27. இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயும் இருக்கிறார்கள். எப்படியென்றால் புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே.
28. இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன்.
29. நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன்.
30. மேலும் சகோதரரே, தேவசித்தத்தினாலே நான் சந்தோஷத்துடனே உங்களிடத்தில் வந்து உங்களோடு இளைப்பாறும்படியாக,
31. யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படும்படிக்கும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மசகாயம் அவர்களால் அங்கிகரிக்கப்படும்படிக்கும்,
32. நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
33. சமாதானத்தின் தேவன் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென்.
1. கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு,
2. எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள்.
3. கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன்வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.
4. அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
5. அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவுக்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள்.
6. எங்களுக்காக மிகவும் பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள்.
7. அப்போஸ்தலருக்குள் பெயர்பெற்றவர்களும் எனக்கு முந்திக் கிறிஸ்துவுக்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள்.
8. கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள்.
9. கிறிஸ்துவுக்குள் நம்மோடே உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள்.
10. கிறிஸ்துவுக்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள். அரிஸ்தொபூலுவின் வீட்டாரை வாழ்த்துங்கள்.
11. என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் வீட்டாரில் கர்த்தருக்குட்பட்டவர்களை வாழ்த்துங்கள்.
12. கர்த்தருக்குள் பிரயாசப்படுகிற திரிபேனாளையும் திரிபோசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள்.
13. கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள்.
14. அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரொபாவையும், எர்மேயையும், அவர்களோடிருக்கிற சகோதரரையும் வாழ்த்துங்கள்.
15. பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும், அவர்களோடிருக்கிற பரிசுத்தவான்களெல்லாரையும் வாழ்த்துங்கள்.
16. ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.
17. அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
18. அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
19. உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.
20. சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின்கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
21. என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள்.
22. இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்.
23. என்னையும் சபையனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்து உக்கிராணக்காரனாகிய ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள்.
24. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
25. ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும், சகல ஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறதான,
26. இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின்படியே உங்களை ஸ்திரப்படுத்த வல்லவரும்,
27. தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
1 கொரிந்தியர்
1. தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும்,
2. கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
3. நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
4. கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே,
5. நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,
6. அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக்குறித்து எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
7. அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள்.
8. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.
9. தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.
10. சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
11. ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.
12. உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.
13. கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?
14. என் நாமத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தேனென்று ஒருவனும் சொல்லாதபடிக்கு,
15. நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காகத் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
16. ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் இன்னும் யாருக்காவது நான் ஞானஸ்நானங் கொடுத்தேனோ இல்லையோ அறியேன்.
17. ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.
18. சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
19. அந்தப்படி ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது.
20. ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தைத் தேவன் பைத்தியமாக்கவில்லையா?
21. எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்கத் தேவனுக்குப் பிரியமாயிற்று.
22. யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்;
23. நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.
24. ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.
25. இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது.
26. எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.
27. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
28. உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.
29. மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.
30. அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,
31. அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.
1. சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை.
2. இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.
3. அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன்.
4. உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,
5. என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.
6. அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல,
7. உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.
8. அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே.
9. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;
10. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
11. மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.
12. நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.
13. அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்தஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்.
14. ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
15. ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
16. கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.
1. மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று.
2. நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.
3. பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?
4. ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா?
5. பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே.
6. நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.
7. அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.
8. மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.
9. நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.
10. எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.
11. போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.
12. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,
13. அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.
14. அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.
15. ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.
16. நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
17. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
18. ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக; இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.
19. இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,
20. ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது.
21. இப்படியிருக்க, ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே;
22. பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும், ஜீவனாகிலும் மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது;
23. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்.
1. இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்.
2. மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.
3. ஆயினும் நான் உங்களாலேயாவது மனுஷருடைய நியாயநாளின் விசாரணையினாலேயாவது தீர்ப்பைப் பெறுவது எனக்கு மிகவும் அற்ப காரியமாயிருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை.
4. என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.
5. ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
6. சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்.
7. அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?
8. இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாயிருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உங்களுடனேகூட நாங்களும் ஆளுவோமே.
9. எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.
10. நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர்.
11. இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.
12. எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.
13. தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்.
14. உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
15. கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்.
16. ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
17. இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிறபிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.
18. நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதாகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள்.
19. ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன்.
20. தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.
21. உங்களுக்கு என்னவேண்டும்? நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ?
1. உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.
2. இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.
3. நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல,
4. நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில்,
5. அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.
6. நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
7. ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.
8. ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
9. விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன்.
10. ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.
11. நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.
12. புறம்பே இருக்கிறவர்களைக் குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக் குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?
13. புறம்பே இருக்கிறவர்களைக் குறித்துத் தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.
1. உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?
2. பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா?
3. தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது எப்படி?
4. இந்த ஜீவனுக்கேற்ற வழக்குகள் உங்களுக்கு இருந்தால், தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள்.
5. உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க விவேகி ஒருவனாகிலும் உங்களுக்குள் இல்லையா?
6. சகோதரனோடே சகோதரன் வழக்காடுகிறான், அவிசுவாசிகளுக்கு முன்பாகவும் அப்படிச் செய்கிறான்.
7. நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?
8. நீங்களே அநியாயஞ்செய்கிறீர்கள், நஷ்டப்படுத்துகிறீர்கள்; சகோதரருக்கும் அப்படிச் செய்கிறீர்களே.
9. அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
10. திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
11. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
12. எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.
13. வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்துக்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர்.
14. தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார்.
15. உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே.
16. வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே.
17. அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.
18. வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.
19. உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
20. கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
1. நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது.
2. ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.
3. புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்.
4. மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.
5. உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்.
6. இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், யோசனையாகச் சொல்லுகிறேன்.
7. எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்குத் தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது.
8. விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.
9. ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம்.
10. விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது.
11. பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது.
12. மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.
13. அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.
14. என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.
15. ஆகிலும் அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
16. மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?
17. தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம்பண்ணுகிறேன்.
18. ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனமில்லாதவனாயிருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனமில்லாதவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் பெறாதிருப்பானாக.
19. விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.
20. அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்.
21. அடிமையாய் நீ அழைக்கப்பட்டிருந்தால், கவலைப்படாதே; நீ சுயாதீனனாகக்கூடுமானால் அதை நலமென்று அநுசரித்துக்கொள்.
22. கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான்.
23. நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.
24. சகோதரரே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன்.
25. அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று, என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன்.
26. அதென்னவெனில், இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் விவாகமில்லாமலிருக்கிறது மனுஷனுக்கு நலமாயிருக்குமென்று எண்ணுகிறேன்.
27. நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாயிருந்தால், மனைவியைத் தேடாதே.
28. நீ விவாகம்பண்ணினாலும் பாவமல்ல; கன்னிகை விவாகம்பண்ணினாலும் பாவமல்ல. ஆகிலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டுமென்றிருக்கிறேன்.
29. மேலும், சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும்,
30. அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள்போலவும்,
31. இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே.
32. நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.
33. விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.
34. அதுபோல, மனைவியானவளுக்கும் கன்னிகைக்கும் வித்தியாசமுண்டு. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; விவாகம்பண்ணினவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்.
35. இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.
36. ஆகிலும் ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் விவாகம்பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன்; அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும்.
37. ஆயினும் அதற்கு அவசியத்தைக் காணாமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாயும், சுயசித்தத்தின்படி செய்ய அதிகாரமுள்ளவனாயுமிருந்து, தன் புத்திரியின் கன்னிகைப் பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் தீர்மானிக்கிறவன் நன்மைசெய்கிறான்.
38. இப்படியிருக்க, அவளை விவாகம்பண்ணிக் கொடுக்கிறவனும் நன்மைசெய்கிறான்; கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மைசெய்கிறான்.
39. மனைவியானவள் தன் புருஷன் உயிரோடிருக்குங் காலமளவும் பிரமாணத்தினால் கட்டப்பட்டிருக்கிறாள்; தன் புருஷன் மரித்தபின்பு தனக்கு இஷ்டமானவனாயும் கர்த்தருக்குட்பட்டவனாயுமிருக்கிற எவனையாகிலும் விவாகம்பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள்.
40. ஆகிலும் என்னுடைய அபிப்பிராயத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.
1. விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.
2. ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை.
3. தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்.
4. விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
5. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,
6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி, விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது.
8. போஜனமானது நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.
9. ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.
10. எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா?
11. பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.
12. இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.
13. ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்.
1. நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா?
2. நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாயிராவிட்டாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாயிருக்கிறேன்; கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு முத்திரையாயிருக்கிறீர்களே.
3. என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மாறுத்தரமாவது:
4. புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு அதிகாரமில்லையா?
5. மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?
6. அல்லது, கைத்தொழில் செய்யாதிருக்கிறதற்கு எனக்கும் பர்னபாவுக்கும்மாத்திரந்தானா அதிகாரமில்லை?
7. எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்?
8. இவைகளை மனுஷர் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா?
9. போரடிக்கிற மாட்டை வாய்கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?
10. நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது.
11. நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?
12. மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடும் படுகிறோம்.
13. ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?
14. அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.
15. அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அநுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும்.
16. சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
17. நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.
18. ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன்.
19. நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.
20. யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.
21. நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.
22. பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.
23. சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்.
24. பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.
25. பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.
26. ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.
27. மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.
1. இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.
2. எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.
3. எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.
4. எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
5. அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
6. அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.
7. ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள்.
8. அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.
9. அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக.
10. அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்.
11. இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.
12. இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
13. மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
14. ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.
15. உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்; நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப்பாருங்கள்.
16. நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?
17. அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.
18. மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா?
19. இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ?
20. அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.
21. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.
22. நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா?
23. எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.
24. ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.
25. கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசியுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை.
26. பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
27. அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள்.
28. ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
29. உன்னுடைய மனச்சாட்சியைக் குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக் குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன?
30. மேலும் நான் அதை ஸ்தோத்திரிப்புடனே அநுபவித்தால், ஸ்தோத்திரித்து அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூஷிக்கப்படுவானேன்?
31. ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.
32. நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல;
33. நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.
1. நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.
2. சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினிமித்தம் உங்களைப் புகழுகிறேன்.
3. ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.
4. ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான்.
5. ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.
6. ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.
7. புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.
8. புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள்.
9. புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்.
10. ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
11. ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை.
12. ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது.
13. ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக்கொள்ளுங்கள்.
14. புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும்,
15. ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
16. ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்.
17. உங்களைப் புகழாமல் இதைக்குறித்து உங்களுக்குக் கட்டளைகொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்கேதுவாயிராமல், தீமைக்கேதுவாயிருக்கிறதே.
18. முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன்.
19. உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.
20. நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முந்திச் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாயிருக்கிறான், ஒருவன் வெறியாயிருக்கிறான்.
21. இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதலல்லவே.
22. புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அசட்டைபண்ணி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்னசொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழேன்.
23. நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,
24. ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
25. போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
26. ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
27. இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.
28. எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
29. என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான்.
30. இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.
31. நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
32. நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
33. ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.
34. நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன்.
1. அன்றியும், சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.
2. நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே.
3. ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
4. வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
5. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.
6. கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.
7. ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.
8. எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
9. வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும்,
10. வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
11. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்.
12. எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.
13. நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.
14. சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.
15. காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
16. காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
17. சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?
18. தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
19. அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?
20. அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.
21. கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.
22. சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.
23. மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
24. நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.
25. சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.
26. ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.
27. நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.
28. தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்.
29. எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா?
30. எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா?
31. இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.
1. நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.
2. நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.
3. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
4. அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
5. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,
6. அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
7. சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
8. அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.
9. நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.
10. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
11. நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.
12. இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.
13. இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.
1. அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.
2. ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
3. தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்குப் பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.
4. அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.
5. நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.
6. மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன?
7. அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்?
8. அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்?
9. அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.
10. உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.
11. ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான்.
12. நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;
13. அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன்.
14. என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால், என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்.
15. இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.
16. இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே.
17. நீ நன்றாய் ஸ்தோத்திரம்பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே.
18. உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
19. அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.
20. சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.
21. மறுபாஷைக்காரராலும், மறுஉதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.
22. அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.
23. ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?
24. எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான்.
25. அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப்பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்.
26. நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம் பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.
27. யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
28. அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.
29. தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள்.
30. அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன்.
31. எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம்.
32. தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே.
33. தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.
34. சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.
35. அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.
36. தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது?
37. ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்.
38. ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும்.
39. இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்.
40. சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.
1. அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.
2. நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.
3. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
4. அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,
5. கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
6. அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.
7. பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.
8. எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்.
9. நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல.
10. ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.
11. ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இப்படியே விசுவாசித்திருக்கிறீர்கள்.
12. கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?
13. மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.
14. கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.
15. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.
16. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை.
17. கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.
18. கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.
19. இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
20. கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
21. மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.
22. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
23. அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
24. அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.
25. எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது.
26. பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.
27. சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.
28. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.
29. மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?
30. நாங்களும் ஏன் எந்நேரமும் நாசமோசத்திற்கு ஏதுவாயிருக்கிறோம்?
31. நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக்கொண்டு சத்தியமாய்ச் சொல்லுகிறேன்.
32. நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?
33. மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.
34. நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.
35. ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,
36. புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.
37. நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
38. அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.
39. எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.
40. வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;
41. சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே; மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.
42. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;
43. கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.
44. ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.
45. அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
46. ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.
47. முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
48. மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.
49. மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்.
50. சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.
51. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
52. எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
53. அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.
54. அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
55. மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
56. மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.
57. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
58. ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.
1. பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.
2. நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
3. நான் வரும்போது உங்கள் உபகாரத்தை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் நிருபங்களைக் கொடுத்து, அவர்களை அனுப்புவேன்.
4. நானும் போகத்தக்கதானால், அவர்கள் என்னுடனேகூட வரலாம்.
5. நான் மக்கெதோனியா நாட்டின் வழியாய்ப் போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன்.
6. நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு, நான் உங்களிடத்தில் சிலகாலம் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரையும் இருப்பேன்.
7. இப்பொழுது வழிப்பிரயாணத்திலே உங்களைக் கண்டுகொள்ளமாட்டேன்; கர்த்தர் உத்தரவுகொடுத்தால் உங்களிடத்தில் வந்து சிலகாலம் தங்கியிருக்கலாமென்று நம்புகிறேன்.
8. ஆகிலும் பெந்தெகொஸ்தே பண்டிகைவரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன்.
9. ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.
10. தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடத்தில் பயமில்லாமலிருக்கப் பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே.
11. ஆனபடியினால் ஒருவனும் அவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக; சகோதரரோடேகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடே வழிவிட்டனுப்புங்கள்.
12. சகோதரனாகிய அப்பொல்லோவைக் குறித்தோவெனில், சகோதரரோடேகூட உங்களிடத்தில் வரும்படிக்கு அவனை மிகவும் வேண்டிக்கொண்டேன்; ஆகிலும் இப்பொழுது வர அவனுக்கு மனதில்லை; அவனுக்கு நற்சமயம் உண்டாயிருக்கும்போது வருவான்.
13. விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.
14. உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.
15. சகோதரரே, ஸ்தேவானுடைய வீட்டார் அகாயாநாட்டிலே முதற்பலனானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே.
16. இப்படிப்பட்டவர்களுக்கும், உடன்வேலையாட்களாய்ப் பிரயாசப்படுகிற மற்ற யாவருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்திருக்கவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
17. ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு என்பவர்கள் வந்ததற்காகச் சந்தோஷமாயிருக்கிறேன், நீங்கள் எனக்குச் செய்யவேண்டியதாயிருந்ததை அவர்கள் செய்திருக்கிறார்கள்.
18. அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்; இப்படிப்பட்டவர்களை அங்கிகாரம்பண்ணுங்கள்.
19. ஆசியா நாட்டிலுள்ள சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்கள் வீட்டிலே கூடுகிற சபையோடுங்கூடக் கர்த்தருக்குள் உங்களை மிகவும் வாழ்த்துகிறார்கள்.
20. சகோதரரெல்லாரும் உங்களை வாழ்த்துகிறார்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.
21. பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்.
22. ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்.
23. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக.
24. கிறிஸ்து இயேசுவுக்குள்ளான என்னுடைய அன்பு உங்களெல்லாரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
2 கொரிந்தியர்
1. தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்துபட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயாநாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது:
2. நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3. நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.
4. தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.
5. எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.
6. ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது.
7. நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல, எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்.
8. ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.
9. நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்.
10. அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.
11. அநேகர்மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும்பொருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.
12. மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.
13. ஏனென்றால், நீங்கள் வாசித்தும் ஒத்துக்கொண்டுமிருக்கிற காரியங்களையேயன்றி, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுபரியந்தமும் அப்படியே ஒத்துக்கொள்வீர்களென்று நம்பியிருக்கிறேன்.
14. கர்த்தராகிய இயேசுவினுடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருக்கிறதை ஒருவாறு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.
15. நான் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறபடியினால், உங்களுக்கு இரண்டாந்தரமும் பிரயோஜனமுண்டாகும்படி, முதலாவது உங்களிடத்தில் வரவும்,
16. பின்பு உங்கள் ஊர்வழியாய் மக்கெதோனியா நாட்டுக்குப் போகவும், மக்கெதோனியாவை விட்டு மறுபடியும் உங்களிடத்திற்கு வரவும், உங்களால் யூதேயாதேசத்துக்கு வழிவிட்டனுப்பப்படவும் யோசனையாயிருந்தேன்.
17. இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், அல்ல அல்ல என்கிறதும், என்னிடத்திலே இருக்கத்தக்கதாக, நான் யோசிக்கிறவைகளை மாம்சத்தின்படி யோசிக்கிறேனோ?
18. நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி.
19. என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார்.
20. எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.
21. உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.
22. அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்.
23. மேலும் நான் உங்களைத் தப்பவிடும்படிக்கே இதுவரைக்கும் கொரிந்துபட்டணத்திற்கு வராதிருக்கிறேனென்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாகக் கோருகிறேன்.
24. உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்; விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்களே.
1. நான் துக்கத்துடனே உங்களிடத்தில் மறுபடியும் வராதபடிக்கு எனக்குள்ளே தீர்மானித்துக்கொண்டேன்.
2. நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனேயல்லாமல், எவன் என்னைச் சந்தோஷப்படுத்துவான்?
3. என்னுடைய சந்தோஷம் உங்களெல்லாருக்கும் சந்தோஷமாயிருக்குமென்று, நான் உங்களெல்லாரையும்பற்றி நம்பிக்கையுள்ளவனாயிருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாதபடிக்கு, அதை உங்களுக்கு எழுதினேன்.
4. அன்றியும், நீங்கள் துக்கப்படும்படிக்கு எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மன இடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன்.
5. துக்கமுண்டாக்கினவன் எனக்குமாத்திரமல்ல, ஒருவாறு உங்களெல்லாருக்கும் துக்கமுண்டாக்கினான்; நான் உங்கள் எல்லார்மேலும் அதிக பாரஞ்சுமத்தாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
6. அப்படிப்பட்டவனுக்கு அநேகரால் உண்டான இந்த தண்டனையே போதும்.
7. ஆதலால் அவன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல்செய்யவேண்டும்.
8. அந்தப்படி, உங்கள் அன்பை அவனுக்குக் காண்பிக்கும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
9. நீங்கள் எல்லாவற்றிலேயும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்தறியும்படி இப்படி எழுதினேன்.
10. எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன்.
11. சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.
12. மேலும் நான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி துரோவாபட்டணத்தில் வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கையில்,
13. நான் என் சகோதரனாகிய தீத்துவைக் காணாததினாலே, என் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது. ஆதலால் நான் அவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டு, மக்கெதோனியா நாட்டுக்குப் புறப்பட்டுப்போனேன்.
14. கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
15. இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.
16. கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்?
17. அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.
1. எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக்கொள்ளத் தொடங்குகிறோமோ? அல்லது சிலருக்கு வேண்டியதாயிருக்கிறதுபோல, உங்களுக்கு உபசார நிருபங்களை அனுப்பவும், உங்களிடத்தில் உபசார நிருபங்களைப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வேண்டியதோ?
2. எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே.
3. ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது.
4. நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம்.
5. எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.
6. புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.
7. எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே.
8. ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?
9. ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.
10. இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்குமுன்பாக மகிமைப்பட்டதல்ல.
11. அன்றியும் ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.
12. நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம்.
13. மேலும் ஒழிந்துபோவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப்பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை.
14. அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது.
15. மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.
16. அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம்.
17. கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
18. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
1. இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை.
2. வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.
3. எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும்.
4. தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
5. நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.
6. இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
7. இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.
8. நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை;
9. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.
10. கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.
11. எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.
12. இப்படி மரணமானது எங்களிடத்திலும், ஜீவனானது உங்களிடத்திலும் பெலன்செய்கிறது.
13. விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.
14. கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம்.
15. தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு, இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாயிருக்கிறது.
16. ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
17. மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
18. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.
1. பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
2. ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்;
3. தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம்.
4. இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்.
5. இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே.
6. நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.
7. இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம்.
8. நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.
9. அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.
10. ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
11. ஆகையால் கர்த்தருக்குப் பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறோம்; உங்கள் மனச்சாட்சிக்கும் வெளியரங்கமாயிருக்கிறோம் என்று நம்புகிறேன்.
12. இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மறுபடியும் மெச்சிக்கொள்ளாமல், இருதயத்திலல்ல, வெளிவேஷத்தில் மேன்மைபாராட்டுகிறவர்களுக்கு எதிரே எங்களைக்குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படிக்கு ஏதுவுண்டாக்குகிறோம்.
13. நாங்கள் பைத்தியங்கொண்டவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கும்; தெளிந்தபுத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கும்.
14. கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்;
15. பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.
16. ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.
17. இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
18. இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
19. அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.
20. ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.
21. நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
1. தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
2. அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.
3. இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களைத் தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.
4. மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,
5. அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும்,
6. கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்தஆவியிலும், மாயமற்ற அன்பிலும்,
7. சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்,
8. கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும்; எத்தரென்னப்பட்டாலும் நிஜஸ்தராகவும்,
9. அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும்,
10. துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.
11. கொரிந்தியரே, எங்கள் வாய் உங்களோடே பேசத் திறந்திருக்கிறது, எங்கள் இருதயம் பூரித்திருக்கிறது.
12. எங்கள் உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை, உங்கள் உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.
13. ஆதலால் அதற்குப் பதிலீடாக நீங்களும் பூரிப்பாகுங்களென்று, பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
14. அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
15. கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
16. தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
17. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18. அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
1. இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.
2. எங்களுக்கு இடங்கொடுங்கள்; நாங்கள் ஒருவனுக்கும் அநியாயஞ்செய்யவில்லை, ஒருவனையும் கெடுக்கவில்லை, ஒருவனையும் வஞ்சிக்கவில்லை.
3. உங்களைக் குற்றவாளிகளாக்கும் பொருட்டாக இப்படி நான் சொல்லுகிறதில்லை; முன்னே நான் சொல்லியபடி, உங்களுடனேகூடச் சாகவும் கூடப் பிழைக்கவுந்தக்கதாக எங்களிருதயங்களில் நீங்கள் இருக்கிறீர்களே.
4. மிகுந்த தைரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன்; உங்களைக்குறித்து மிகவும் மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன், எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்.
5. எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது, எங்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன.
6. ஆகிலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல்செய்தார்.
7. அவன் வந்ததினாலே மாத்திரமல்ல, உங்கள் வாஞ்சையையும், உங்கள் துக்கிப்பையும், என்னைப்பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைராக்கியத்தையும் அவன் கண்டு, உங்களால் அடைந்த ஆறுதலைத் தெரியப்படுத்தினதினாலும், நானும் ஆறுதலடைந்து அதிகமாய்ச் சந்தோஷப்பட்டேன்.
8. ஆதலால் நான் நிருபத்தினாலே உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்த நிருபம் கொஞ்சப்பொழுதாகிலும் உங்களைத் துக்கப்படுத்தினதென்று கண்டு நான் மனஸ்தாபப்பட்டிருந்தும், இப்பொழுது மனஸ்தாபப்படுகிறதில்லை.
9. இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.
10. தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
11. பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையையும், குற்றந்தீர எவ்வளவு நியாயஞ்சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கிற்று. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப்பண்ணினீர்கள்.
12. ஆதலால் நான் உங்களுக்கு அப்படி எழுதியிருந்தும், அநியாயஞ்செய்தவனிமித்தமுமல்ல, அநியாயஞ்செய்யப்பட்டவனிமித்தமுமல்ல, தேவனுக்குமுன்பாக உங்களைக்குறித்து எங்களுக்கு உண்டாயிருக்கிற ஜாக்கிரதை உங்களுக்கு வெளிப்படும்பொருட்டே அப்படி எழுதினேன்.
13. இதினிமித்தம் நீங்கள் ஆறுதலடைந்ததினாலே நாங்களும் ஆறுதலடைந்தோம்; விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதலடைந்ததினாலே, அவனுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டோம்.
14. இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாய் நான் அவனுடனே சொன்ன யாதொன்றைக்குறித்தும், வெட்கப்படமாட்டேன்; நாங்கள் சகலத்தையும் உங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியாய்ச் சொன்னதும் சத்தியமாக விளங்கிற்றே.
15. மேலும் நீங்களெல்லாரும் கட்டளைக்கு அமைந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கையில், அவனுடைய உள்ளம் உங்களைப்பற்றி அதிக அன்பாயிருக்கிறது.
16. ஆகையால் எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடநம்பிக்கை உண்டாயிருக்கிறதென்று சந்தோஷப்படுகிறேன்.
1. அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
2. அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.
3. மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன்.
4. தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்.
5. மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.
6. ஆதலால் தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடத்தில் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டுமென்று அவனைக் கேட்டுக்கொண்டோம்.
7. அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.
8. இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய ஜாக்கிரதையைக்கொண்டு, உங்கள் அன்பின் உண்மையைச் சோதிக்கும்பொருட்டே சொல்லுகிறேன்.
9. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே.
10. இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மாத்திரமல்ல, செய்யவேண்டுமென்று உற்சாகப்படுகிறதற்கும் ஒரு வருஷமாய் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாயிருக்கும்.
11. ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.
12. ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.
13. மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன்.
14. எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம்,
15. சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.
16. அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட ஜாக்கிரதை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம்.
17. நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கிகரித்ததுமல்லாமல், அவன் அதிக ஜாக்கிரதையாயிருந்து, தன் மனவிருப்பத்தின்படியே உங்களிடத்திற்கு வரப் புறப்பட்டான்.
18. சுவிசேஷ ஊழியத்தில் எல்லாச் சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடேகூட அனுப்பியிருக்கிறோம்.
19. அதுமாத்திரமல்ல, கர்த்தருக்கு மகிமையுண்டாகவும், உங்கள் மனவிருப்பம் விளங்கவும், எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக் கொண்டுபோகையில், எங்களுக்கு வழித்துணையாயிருக்கும்படி, அவன் சபைகளால் தெரிந்து ஏற்படுத்தப்பட்டவனாயும் இருக்கிறான்.
20. எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் இந்த மிகுதியான தர்மப்பணத்தைக்குறித்து ஒருவனும் எங்களைக் குற்றப்படுத்தாதபடிக்கு நாங்கள் எச்சரிக்கையாயிருந்து,
21. கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்.
22. மேலும், அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவனென்று நாங்கள் பலமுறை கண்டறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேலுள்ள மிகுந்த நம்பிக்கையினாலே அதிக ஜாக்கிரதையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனையும் இவர்களோடே கூட அனுப்பியிருக்கிறோம்.
23. தீத்துவைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும், உங்களுக்காக என் உடன்வேலையாளுமாயிருக்கிறானென்றும்; எங்கள் சகோதரரைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளுடைய ஸ்தானாபதிகளும், கிறிஸ்துவுக்கு மகிமையுமாயிருக்கிறார்களென்றும் அறியக்கடவன்.
24. ஆதலால் உங்கள் அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்.
1. பரிசுத்தவான்களுக்குச் செய்யவேண்டிய தர்மசகாயத்தைக்குறித்து, நான் அதிகமாக உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை.
2. உங்கள் மனவிருப்பத்தை அறிந்திருக்கிறேன்; அகாயாவிலுள்ளவர்கள் ஒருவருஷமாக ஆயத்தமாயிருக்கிறார்களென்று, நான் மக்கெதோனியருடனே சொல்லி, உங்களைப் புகழ்ந்தேனே; உங்கள் ஜாக்கிரதை அநேகரை எழுப்பிவிட்டதுமுண்டு.
3. அப்படியிருந்தும், உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக் காரியத்தில் வீணாய்ப்போகாமல், நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாயிருப்பதற்கு, இந்தச் சகோதரரை அனுப்பினேன்.
4. மக்கெதோனியர் என்னுடனேகூட வந்து, உங்களை ஆயத்தப்படாதவர்களாகக் கண்டால், இவ்வளவு நிச்சயமாய் உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்களென்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாயிருக்கும்.
5. ஆகையால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானது லோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது.
6. பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.
7. அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
8. மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
9. வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.
10. விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.
11. தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதாரகுணத்திலே நீங்கள் எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாவீர்கள்.
12. இந்தத் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரண பலனுள்ளதாயும் இருக்கும்.
13. அவர்கள் இந்தத் தர்மசகாயத்தினாலாகிய நன்மையை அனுபவித்து, நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கீழ்ப்படிதலோடே அறிக்கையிட்டிருக்கிறதினிமித்தமும், தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் நீங்கள் உதாரத்துவமாய்த் தர்மஞ்செய்கிறதினிமித்தமும், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி;
14. உங்களுக்காக வேண்டுதல்செய்து, தேவன் உங்களுக்கு அளித்த மிகவும் விசேஷித்த கிருபையினிமித்தம் உங்கள்மேல் வாஞ்சையாயிருக்கிறார்கள்.
15. தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.
1. உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயும் இருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
2. எங்களை மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் என்று எண்ணுகிற சிலரைக்குறித்து நான் கண்டிப்பாயிருக்கவேண்டுமென்று நினைத்திருக்கிற தைரியத்தோடே, உங்கள்முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாயிராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
3. நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல.
4. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.
5. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.
6. உங்கள் கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்குந்தக்க நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாயுமிருக்கிறோம்.
7. வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்களா? ஒருவன் தன்னைக் கிறிஸ்துவுக்குரியவனென்று நம்பினால், தான் கிறிஸ்துவுக்குரியவனாயிருக்கிறதுபோல நாங்களும் கிறிஸ்துவுக்குரியவர்களென்று அவன் தன்னிலேதானே சிந்திக்கக்கடவன்.
8. மேலும், உங்களை நிர்மூலமாக்குகிறதற்கல்ல, உங்களை ஊன்றக் கட்டுகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும் சற்றே அதிகமாய் மேன்மைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை.
9. நான் நிருபங்களாலே உங்களைப் பயமுறுத்துகிறவனாய்த் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
10. அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே.
11. அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ, அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்.
12. ஆகிலும் தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல.
13. நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம்.
14. உங்களிடத்தில் வந்தெட்டாதவர்களாய் நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை; நாங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து உங்களிடம்வரைக்கும் வந்தோமே.
15. எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு மேன்மைபாராட்டமாட்டோம்.
16. ஆகிலும் உங்கள் விசுவாசம் விருத்தியாகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்புறமான இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்கள் அளவின்படி உங்களால் மிகவும் பெருகி விருத்தியடைவோமென்று நம்பிக்கையாயிருக்கிறோம்.
17. மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.
18. தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
1. என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே.
2. நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
3. ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.
4. எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.
5. மகா பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன்.
6. நான் பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல; எந்த விஷயத்திலும் எல்லாருக்குமுன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் வெளிப்பட்டிருக்கிறோமே.
7. நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றஞ்செய்தேனோ?
8. உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு, மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப் பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.
9. நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள்; எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.
10. அகாயாநாட்டின் திசைகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லையென்று என்னிலுள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன்.
11. இப்படிச் சொல்லவேண்டியதென்ன? நான் உங்களைச் சிநேகியாதபடியினாலேயோ? தேவன் அறிவார்.
12. மேலும், எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்களுக்குச் சமயம் கிடையாதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன்.
13. அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.
14. அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.
15. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.
16. பின்னும் நான் சொல்லுகிறேன்; ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம்; அப்படி எண்ணினால், நானும் சற்றே மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
17. இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன்.
18. அநேகர் மாம்சத்திற்கேற்றபடி மேன்மைபாராட்டிக்கொள்ளுகையில், நானும் மேன்மைபாராட்டுவேன்.
19. நீங்கள் புத்தியுள்ளவர்களாயிருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாய்ச் சகித்திருக்கிறீர்களே.
20. ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே.
21. நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப் பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாயிருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாயிருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாய்ப் பேசுகிறேன்.
22. அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா? நானும் ஆபிரகாமின் சந்ததியான்.
23. அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.
24. யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்;
25. மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்.
26. அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்;
27. பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.
28. இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.
29. ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?
30. நான் மேன்மைபாராட்டவேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்.
31. என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார்.
32. தமஸ்குபட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய சேனைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டுமென்று தமஸ்கருடைய பட்டணத்தைக் காவல்வைத்துக் காத்தான்;
33. அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, ஜன்னலிலிருந்து மதில் வழியாய் இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன்.
1. மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.
2. கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
3. அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
4. அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
5. இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களிலேயன்றி, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன்.
6. சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட மனதாயிருந்தாலும், நான் புத்தியீனனல்ல, ஆனாலும் ஒருவனும் என்னிடத்தில் காண்கிறதற்கும், என்னாலே கேட்கிறதற்கும் மேலாக என்னை எண்ணாதபடிக்கு அப்படிச் செய்யாதிருப்பேன்.
7. அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.
8. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.
9. அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.
10. அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.
11. மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன்; நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே.
12. அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே.
13. எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாயிருந்தீர்கள்? நான் உங்களை வருத்தப்படுத்தாதிருந்ததே உங்களுக்குக் குறைவு; இந்த அநியாயத்தை எனக்கு மன்னியுங்கள்.
14. இதோ, உங்களிடத்திற்கு மூன்றாந்தரம் வர ஆயத்தமாயிருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவதில்லை; நான் உங்களுடையதையல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.
15. ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.
16. அப்படியாகட்டும்; நான் உங்களுக்குப் பாரமாயிருக்கவில்லை; ஆனாலும், உபாயமுள்ளவனாயிருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம்.
17. நான் உங்களிடத்திற்கு அனுப்பினவர்களில் எவன்மூலமாயாவது உங்களிடத்தில் பொழிவைத் தேடினதுண்டா?
18. தீத்து உங்களிடத்தில் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனுடனேகூட ஒரு சகோதரனை அனுப்பினேன்; தீத்து உங்களிடத்தில் ஏதாவது பொழிவைத் தேடினானா? நாங்கள் ஒரே ஆவியையுடையவர்களாய், ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோமல்லவா?
19. நாங்கள் யோக்கியர்களென்று விளங்கும்படி உங்களிடத்தில் பேசுகிறோமென்று எண்ணுகிறீர்களோ? தேவனுக்குமுன்பாகக் கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, சகலத்தையும் உங்கள் பக்திவிருத்திக்காகச் செய்கிறோம்.
20. ஆகிலும் நான் வந்து, உங்களை என் மனதின்படியிருக்கிறவர்களாகக் காணாமலும், நானும் உங்கள் மனதின்படியிருக்கிறவனாகக் காணப்படாமலுமிருப்பேனோவென்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோட்சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோவென்றும்;
21. மறுபடியும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடத்தில் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன் பாவஞ்செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் நடப்பித்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும் விட்டு மனந்திரும்பாமலிருக்கிறதைக்குறித்து, நான் துக்கப்படவேண்டியதாயிருக்குமோவென்றும் பயந்திருக்கிறேன்.
1. இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்; சகல காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.
2. நான் இரண்டாந்தரம் உங்களிடத்திலிருந்தபோது சொன்னதுபோல, இப்பொழுது தூரமாயிருந்தும் உங்களிடத்திலிருக்கிறவனாக, நான் மறுபடியும் வந்தால் தப்பவிடமாட்டேனென்று முன்பு பாவஞ்செய்தவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன்.
3. கிறிஸ்து எனக்குள்ளே பேசுகிறாரென்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே; அவர் உங்களிடமாய்ப் பலவீனரல்ல, உங்களிடத்தில் வல்லவராயிருக்கிறார்.
4. ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்.
5. நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்.
6. நாங்களோ பரீட்சைக்கு நில்லாதவர்களல்லவென்பதை அறிவீர்களென்று நம்புகிறேன்.
7. மேலும் நீங்கள் ஒரு பொல்லாங்கும் செய்யாதிருக்கும்படியாக, தேவனை நோக்கி விண்ணப்பம்பண்ணுகிறேன். நாங்கள் பரீட்சைக்கு நின்றவர்களென்று காணப்படும்பொருட்டல்ல, நாங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்கள்போலிருந்தாலும், நீங்கள் நலமானதைச் செய்யும்பொருட்டே விண்ணப்பம்பண்ணுகிறேன்.
8. சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும்.
9. நாங்கள் பலவீனரும் நீங்கள் பலமுள்ளவர்களுமாயிருக்கையில், சந்தோஷப்படுகிறோம்; நீங்கள் நற்சீர்பொருந்தும்படிக்கும் விண்ணப்பம்பண்ணுகிறோம்.
10. ஆனதால் இடித்துப்போடவல்ல, ஊன்றக் கட்டவே கர்த்தர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடத்தில் வந்திருக்கும்போது, கண்டிதம்பண்ணாதபடிக்கு, நான் தூரமாயிருந்து இவைகளை எழுதுகிறேன்.
11. கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.
12. ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
13. பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
14. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
கலாத்தியர்
1. மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்,
2. என்னுடனேகூட இருக்கிற சகோதரரெல்லாரும், கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது:
3. பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக;
4. அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;
5. அவருக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
6. உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;
7. வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
8. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
9. முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
10. இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
11. மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
12. நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.
13. நான் யூதமார்க்கத்திலிருந்தபோது என்னுடைய நடக்கையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி;
14. என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.
15. அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,
16. தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்;
17. எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.
18. மூன்று வருஷம் சென்றபின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்துநாள் தங்கியிருந்தேன்.
19. கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.
20. நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.
21. பின்பு, சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன்.
22. மேலும் யூதேயாதேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன்.
23. முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதைமாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டிருந்து,
24. என்னைப்பற்றித் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
1. பதினாலு வருஷம் சென்றபின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு பர்னபாவுடனேகூட மறுபடியும் எருசலேமுக்குப் போனேன்.
2. நான் தேவ அறிவிப்பினாலே போய், புறஜாதிகளிடத்தில் நான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தேன்; ஆயினும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகாதபடிக்கு எண்ணிக்கையுள்ளவர்களுக்கே தனிமையாய் விவரித்துக் காண்பித்தேன்.
3. ஆனாலும் என்னுடனேகூட இருந்த தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படவில்லை.
4. கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.
5. சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.
6. அல்லாமலும் எண்ணிக்கையுள்ளவர்களாயிருந்தவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை; அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, தேவன் மனுஷரிடத்தில் பட்சபாதமுள்ளவரல்லவே.
7. அதுவுமல்லாமல், விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி பேதுருவைப் பலப்படுத்தினவர் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி என்னையும் பலப்படுத்தினபடியால்,
8. விருத்தசேதனமுள்ளவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி பேதுருவுக்குக் கையளிக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி அது எனக்கும் கையளிக்கப்பட்டதென்று அவர்கள் கண்டு;
9. எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து,
10. தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படிக்குமாத்திரம் சொன்னார்கள்; அப்படிச் செய்யும்படி அதற்கு முன்னமே நானும் கருத்துள்ளவனாயிருந்தேன்.
11. மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ் சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன்.
12. எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான்.
13. மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான்.
14. இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்துகொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்?
15. புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.
16. நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.
17. கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படும்படி நாடுகிற நாமும் பாவிகளாகக் காணப்படுவோமானால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? அல்லவே.
18. நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன்.
19. தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே.
20. கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
21. நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.
1. புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.
2. ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?
3. ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?
4. இத்தனை பாடுகளையும் வீணாய்ப் பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே.
5. அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?
6. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
7. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
8. மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.
9. அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
10. நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.
11. நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.
12. நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.
13. மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
14. ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.
15. சகோதரரே, மனுஷர் முறைமையின்படி சொல்லுகிறேன்; மனுஷர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை, அதினோடே ஒன்றையும் கூட்டுகிறதுமில்லை.
16. ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே.
17. ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டுத் தேவனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி, வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது.
18. அன்றியும், சுதந்தரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிராது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.
19. அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.
20. மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர்.
21. அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.
22. அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.
23. ஆதலால் விசுவாசம் வருகிறதற்குமுன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம்.
24. இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.
25. விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.
26. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.
27. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
28. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
29. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.
1. பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை.
2. தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்.
3. அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம்.
4. நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,
5. காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.
6. மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
7. ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய்த் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.
8. நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள்.
9. இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி?
10. நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே.
11. நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்.
12. சகோதரரே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலுமானேனே. எனக்கு நீங்கள் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை.
13. உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன்.
14. அப்படியிருந்தும், என் சரீரத்தில் உண்டாயிருக்கிற சோதனையை நீங்கள் அசட்டைபண்ணாமலும், அரோசியாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.
15. அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்த பாக்கியம் எங்கே? உங்கள் கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கக்கூடுமானால், அப்படியும் செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாயிருக்கிறேன்.
16. நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ?
17. அவர்கள் உங்களை நாடி வைராக்கியம் பாராட்டுகிறார்கள்; ஆகிலும் நல்மனதோடே அப்படிச் செய்யாமல், நீங்கள் அவர்களை நாடி வைராக்கியம் பாராட்டும்பொருட்டு உங்களைப் புறம்பாக்க விரும்புகிறார்கள்.
18. நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான்; அதை நான் உங்களிடத்தில் இருக்கும்பொழுதுமாத்திரமல்ல, எப்பொழுதும் பாராட்டவேண்டும்.
19. என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்;
20. உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறபடியால், நான் இப்பொழுது உங்களிடத்தில் வந்திருந்து, வேறுவகையாகப் பேச விரும்புகிறேன்.
21. நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிற நீங்கள் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதைக் கேட்கவில்லையா? இதை எனக்குச் சொல்லுங்கள்.
22. ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன்.
23. அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான்.
24. இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையிலுண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளைபெறுகிறது, அது ஆகார் என்பவள்தானே.
25. ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே.
26. மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.
27. அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, களிப்பாய் எழும்பி ஆர்ப்பரி; புருஷனுள்ளவளைப்பார்க்கிலும் அநாத ஸ்திரீக்கே அதிக பிள்ளைகளுண்டு என்று எழுதியிருக்கிறது.
28. சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்.
29. ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது.
30. அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது.
31. இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம்.
1. ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.
2. இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
3. மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான் என்று மறுபடியும் அப்படிப்பட்டவனுக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன்.
4. நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.
5. நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம்.
6. கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும்.
7. நீங்கள் நன்றாய் ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்?
8. இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானதல்ல.
9. புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்.
10. நீங்கள் வேறுவிதமாய்ச் சிந்திக்கமாட்டீர்களென்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாயிருக்கிறேன்; உங்களைக் கலக்குகிறவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் தனக்கேற்ற ஆக்கினையை அடைவான்.
11. சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்குத் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே.
12. உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும்.
13. சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.
14. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
15. நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
16. பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.
17. மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
18. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
19. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
20. விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
21. பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
22. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
23. சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
24. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
25. நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.
26. வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.
1. சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
2. ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.
3. ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.
4. அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.
5. அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.
6. மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன்.
7. மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
8. தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.
9. நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
10. ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.
11. என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள்.
12. மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள்.
13. விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலிருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்கள் மாம்சத்தைக்குறித்து மேன்மைபாராட்டும்படிக்கு நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறார்கள்.
14. நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.
15. கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம்.
16. இந்தப் பிரமாணத்தின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும் இரக்கமும் உண்டாயிருப்பதாக.
17. இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன்.
18. சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென்.
எபேசியர்
1. தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:
2. நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.
4. தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
5. பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,
6. தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.
7. அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
8. அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.
9. காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று,
10. தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.
11. மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு,
12. தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.
13. நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
14. அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.
15. ஆனபடியினாலே, கர்த்தராகிய இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நான் கேள்விப்பட்டு,
16. இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து,
17. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,
18. தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;
19. தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
20. எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,
21. அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,
22. எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,
23. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.
1. அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.
2. அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.
3. அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.
4. தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,
5. அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
6. கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,
7. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.
8. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
9. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;
10. ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
11. ஆனபடியினால் முன்னே மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து, மாம்சத்தில் கையினாலே செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்ட நீங்கள்,
12. அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்.
13. முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
14. எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,
15. சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,
16. பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
17. அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.
18. அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்.
19. ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,
20. அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;
21. அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;
22. அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.
1. இதினிமித்தம், பவுலாகிய நான் புறஜாதியாராயிருக்கிற உங்கள்பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன்.
2. உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தெய்வகிருபைக்குரிய நியமமும் இன்னதென்று கேட்டிருப்பீர்களே;
3. அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.
4. இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாய் எழுதியிருக்கிறேன்.
5. அதை நீங்கள் வாசிக்கையில் கிறிஸ்துவின் இரகசியத்தைக்குறித்து எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்;
6. இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை.
7. தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன்.
8. பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
9. தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே,
10. உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின்மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக,
11. இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
12. அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது.
13. ஆகையால் உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாயிருக்கிறதே.
14. இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய,
15. நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,
16. நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்,
17. விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி,
18. சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து;
19. அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
20. நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,
21. சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
1. ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து,
2. மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,
3. சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.
4. உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு;
5. ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,
6. எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.
7. கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.
8. ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.
9. ஏறினார் என்பதினாலே அவர் அதற்குமுன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?
10. இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.
11. மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும்,
12. பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
13. அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.
14. நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,
15. அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
16. அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.
17. ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்.
18. அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயகடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து;
19. உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.
20. நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை.
21. இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே.
22. அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
23. உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
24. மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
25. அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.
26. நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;
27. பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.
28. திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.
29. கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
30. அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
31. சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.
32. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
1. ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போலத் தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,
2. கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
3. மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.
4. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
5. விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.
6. இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;
7. அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள்.
8. முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.
9. ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.
10. கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
11. கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.
12. அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே.
13. அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது.
14. ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.
15. ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,
16. நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
17. ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
18. துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;
19. சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
20. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,
21. தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
22. மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.
23. கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.
24. ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.
25. புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
26. தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
27. கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
28. அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.
29. தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.
30. நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
31. இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
32. இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.
33. எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.
1. பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.
2. உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்,
3. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.
4. பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.
5. வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து;
6. மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.
7. அடிமையானவனானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து,
8. மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்.
9. எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.
10. கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
13. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
14. சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
15. சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;
16. பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
17. இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
18. எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.
19. சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக,
20. நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.
21. அன்றியும், எனக்கடுத்த காரியங்களும், என் சுகசெய்திகளும் உங்களுக்குத் தெரியவரும்படிக்கு, அவைகளையெல்லாம் நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாயிருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான்.
22. நீங்கள் எங்கள் செய்திகளை அறியவும், அவன் உங்கள் இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடத்தில் அனுப்பினேன்.
23. பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரருக்குச் சமாதானமும் விசுவாசத்தோடு கூடிய அன்பும் உண்டாவதாக.
24. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.
பிலிப்பியர்
1. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது:
2. நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3. சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால்,
4. நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி,
5. உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,
6. நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
7. என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங் குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது.
8. இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்குத் தேவனே எனக்குச் சாட்சி.
9. மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும்,
10. தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,
11. நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.
12. சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
13. அரமனை யெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி,
14. சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.
15. சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.
16. சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.
17. சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.
18. இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.
19. அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன்.
20. நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.
21. கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.
22. ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்.
23. ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;
24. அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.
25. இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மறுபடியும் உங்களிடத்தில் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவுக்குள் பெருகும்படிக்கு,
26. உங்கள் விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன்.
27. நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ளுங்கள்.
28. நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.
29. ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.
30. நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.
1. ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால்,
2. நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.
3. ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
4. அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.
5. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;
6. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
7. தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
8. அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
9. ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
10. இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
11. பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
12. ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
13. ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
14. நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,
15. கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,
16. எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.
17. மேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன்.
18. இதினிமித்தம் நீங்களும் மகிழ்ந்து, என்னோடேகூடச் சந்தோஷப்படுங்கள்.
19. அன்றியும், நானும் உங்கள் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும்படிக்குச் சீக்கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்பியிருக்கிறேன்.
20. அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை.
21. மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.
22. தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.
23. ஆகையால் என் காரியங்கள் இன்னபடி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாமென்று நினைத்திருக்கிறேன்.
24. அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேனென்று கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறேன்.
25. மேலும், என் சகோதரனும், உடன்வேலையாளும், உடன்சேவகனும், உங்கள் ஸ்தானாபதியும், என் குறைச்சலுக்கு உதவிசெய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன்.
26. அவன் உங்கள் எல்லார்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்.
27. அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார்.
28. ஆகையால் நீங்கள் அவனை மறுபடியும் கண்டு சந்தோஷப்படவும், என் துக்கங் குறையவும், அவனை அதிசீக்கிரமாய் அனுப்பினேன்.
29. ஆனபடியினாலே நீங்கள் கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத்தோடே அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள்.
30. ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.
1. மேலும், என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும்.
2. நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
3. ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.
4. மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம்.
5. நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்;
6. பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.
7. ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.
8. அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
9. நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,
10. இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,
11. அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.
12. நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.
13. சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,
14. கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
15. ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
16. ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக.
17. சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்.
18. ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
19. அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
20. நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
21. அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
1. ஆதலால், எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்.
2. கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன்.
3. அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.
4. கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
5. உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
7. அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
8. கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
9. நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.
10. என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மறுபடியும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; இப்படிச் செய்ய எண்ணங்கொண்டிருந்தீர்கள், சமயம்மாத்திரம் உங்களுக்கு நேரிடவில்லை.
11. என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
12. தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.
13. என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
14. ஆகிலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது.
15. மேலும், பிலிப்பியரே, சுவிசேஷத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, கொடுக்கல் வாங்கல் காரியத்தில் நீங்கள்மாத்திரம் எனக்கு உடன்பட்டதேயல்லாமல், வேறொரு சபையும் உடன்படவில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
16. நான் தெசலோனிக்கேயிலிருந்தபோதும், என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள்.
17. உபகாரத்தை நான் நாடாமல், உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன்.
18. எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.
19. என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
20. நம்முடைய பிதாவாகிய தேவனானவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
21. கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் யாவருக்கும் வாழ்த்துதல் சொல்லுங்கள். என்னோடிருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
22. பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரமனையிலுள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
23. நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
கொலோசெயர்
1. தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும்,
2. கொலோசெ பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாயிருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3. கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு,
4. பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,
5. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.
6. அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது;
7. அதை எங்களுக்குப் பிரியமான உடன்வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாயிருக்கிற எப்பாப்பிராவினிடத்தில் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்;
8. ஆவிக்குள்ளான உங்கள் அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.
9. இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,
10. சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,
11. சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்.
12. ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,
13. இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.
14. [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.
16. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
17. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
18. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.
19. சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்,
20. அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.
21. முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
22. நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
23. அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
24. இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன்.
25. ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு,
26. உங்கள்பொருட்டுத் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
27. புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
28. எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்.
29. அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.
1. உங்களுக்காகவும் லவோதிக்கேயாவிலிருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லாருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறிய விரும்புகிறேன்.
2. அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.
3. அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.
4. ஒருவனும் நயவசனிப்பினாலே உங்களை வஞ்சியாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
5. சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.
6. ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
7. நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.
8. லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.
9. ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.
10. மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.
11. அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.
12. ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.
13. உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;
14. நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
15. துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
16. ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
17. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
18. கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக்கொள்ளாமல்,
19. மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.
20. நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல,
21. மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன?
22. இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.
23. இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.
1. நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
2. பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
3. ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
4. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.
5. ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.
6. இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்.
7. நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே சஞ்சரித்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள்.
8. இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
9. ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
10. தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.
11. அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.
12. ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;
13. ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
14. இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
15. தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.
16. கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
17. வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
18. மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.
19. புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.
20. பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.
21. பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.
22. வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்.
23. நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,
24. எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.
25. அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.
1. எஜமான்களே, உங்களுக்கும் பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று அறிந்து, வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்யுங்கள்.
2. இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.
3. கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டியபிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு,
4. திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.
5. புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
6. அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.
7. பிரியமான சகோதரனும், உண்மையுள்ள ஊழியக்காரனும், கர்த்தருக்குள் எனக்கு உடன்வேலையாளுமாயிருக்கிற தீகிக்கு என்பவன் என் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்.
8. உங்கள் செய்திகளை அறியவும், உங்கள் இருதயங்களைத் தேற்றவும்,
9. அவனையும், உங்களிலொருவனாயிருக்கிற உண்மையும் பிரியமுமுள்ள சகோதரனாகிய ஒநேசிமு என்பவனையும், உங்களிடத்தில் அனுப்பியிருக்கிறேன்; அவர்கள் இவ்விடத்துச் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.
10. என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள்.
11. யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான். விருத்தசேதனமுள்ளவர்களில் இவர்கள்மாத்திரம் தேவனுடைய ராஜ்யத்தின்பொருட்டு என் உடன்வேலையாட்களாயிருந்து, எனக்கு ஆறுதல் செய்துவந்தவர்கள்.
12. எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்.
13. இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன்.
14. பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
15. லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரரையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.
16. இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்.
17. அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்.
18. பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.
1 தெசலோனிக்கேயர்
1. பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
2. தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து,
3. நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து,
4. எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.
5. எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.
6. நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,
7. இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.
8. எப்படியெனில், உங்களிடத்திலிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் தொனித்ததுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாயிராதபடிக்கு, தேவனைப்பற்றின உங்கள் விசுவாசம் எங்கும் பிரசித்தமாயிற்று.
9. ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டுத் தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்,
10. அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே.
1. சகோதரரே, நாங்கள் உங்களிடத்தில் பிரவேசித்தது வீணாயிருக்கவில்லையென்று நீங்களே அறிந்திருக்கிறீர்கள்.
2. உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிபட்டணத்திலே நாங்கள் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தும், வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்.
3. எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயுமிருக்கவில்லை.
4. சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.
5. உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை; தேவனே சாட்சி.
6. நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலராக உங்களுக்குப் பாரமாயிருக்கக் கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை.
7. உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல,
8. நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.
9. சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.
10. விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையுமாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.
11. மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று,
12. தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.
13. ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.
14. எப்படியெனில், சகோதரரே, யூதேயா தேசத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதராலே எப்படிப் பாடுபட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்கள் சுய ஜனங்களாலே பாடுபட்டீர்கள்.
15. அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்கள் தீர்க்கதரிசிகளையும் கொலைசெய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கேற்காதவர்களும், மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்து,
16. புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடே பேசாதபடிக்குத் தடைபண்ணுகிறார்கள்; இவ்விதமாய் எக்காலத்திலும் தங்கள் பாவங்களை நிறைவாக்குகிறார்கள்; அவர்கள்மேல் கோபாக்கினை பூரணமாய் வந்திருக்கிறது.
17. சகோதரரே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சக்காலம் உங்களைவிட்டுப் பிரிந்திருந்தபடியினாலே, உங்கள் முகத்தைப் பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடே அதிகமாய்ப் பிரயத்தனம்பண்ணினோம்.
18. ஆகையால், நாங்கள் உங்களிடத்தில் வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான்.
19. எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்;
20. நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.
1. ஆகையால், நாங்கள் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், அத்தேனே பட்டணத்தில் தனித்துவிடப்படுகிறது நன்மையென்று நினைத்து,
2. இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்.
3. இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
4. நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே வந்து நேரிட்டதென்றும் அறிந்திருக்கிறீர்கள்.
5. ஆகையால், நான் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், எங்கள் வேலை வீணாய்ப் போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன்.
6. இப்பொழுது தீமோத்தேயு உங்களிடத்திலிருந்து எங்களிடத்தில் வந்து, உங்கள் விசுவாசத்தையும் அன்பையும் குறித்தும், நீங்கள் எப்பொழுதும் எங்களைப் பட்சமாய் நினைத்துக்கொண்டு, நாங்கள் உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறதுபோல நீங்களும் எங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறீர்களென்பதைக்குறித்தும், எங்களுக்கு நற்செய்தி சொன்னதினாலே,
7. சகோதரரே, எங்களுக்கு நேரிட்ட எல்லா இக்கட்டிலும் உபத்திரவத்திலும் உங்கள் விசுவாசத்தினாலே உங்களைக்குறித்து ஆறுதலடைந்தோம்.
8. நீங்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் நாங்கள் பிழைத்திருப்போம்.
9. மேலும், நம்முடைய தேவனுக்கு முன்பாக நாங்கள் உங்களைக்குறித்து அடைந்திருக்கிற மிகுந்த சந்தோஷத்திற்காக, நாங்கள் தேவனுக்கு எவ்விதமாய் ஸ்தோத்திரம் செலுத்துவோம்?
10. உங்கள் முகத்தைக் கண்டு, உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்பொருட்டு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறோமே.
11. நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக.
12. நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து,
13. இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.
1. அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம்.
2. கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே.
3. நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,
4. தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்,
5. உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
6. இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.
7. தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
8. ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்தஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.
9. சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்குத் தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.
10. அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்குமுள்ள சகோதரரெல்லாருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்;
11. புறம்பேயிருக்கிறவர்களைப் பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,
12. நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
13. அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.
14. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.
15. கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.
16. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
17. பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
18. ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.
1. சகோதரரே, இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை.
2. இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.
3. சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.
4. சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே.
5. நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.
6. ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.
7. தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள்.
8. பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.
9. தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.
10. நாம் விழித்திருப்பவர்களானாலும், நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.
11. ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.
12. அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,
13. அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.
14. மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.
15. ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.
16. எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
17. இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
18. எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
19. ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
20. தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.
21. எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
22. பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.
23. சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
24. உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.
25. சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
26. சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.
27. இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.
28. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
2 தெசலோனிக்கேயர்
1. பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது:
2. நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3. சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகத் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது.
4. நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.
5. நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச்செய்கிறவரென்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது.
6. உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.
7. தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு,
8. கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
9. அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது,
10. அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.
11. ஆகையால், நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்பொருட்டாக;
12. நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.
1. அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
2. ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
3. எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
4. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.
5. நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா?
6. அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே.
7. அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.
8. நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.
9. அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,
10. கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.
11. ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
13. கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.
14. நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்.
15. ஆகையால், சகோதரரே, நீங்கள் நிலைகொண்டு, வார்த்தையினாலாவது நிருபத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்.
16. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும்,
17. உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.
1. கடைசியாக, சகோதரரே, உங்களிடத்தில் கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும்,
2. துர்க்குணராகிய பொல்லாத மனுஷர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; விசுவாசம் எல்லாரிடத்திலுமில்லையே.
3. கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.
4. மேலும், நாங்கள் கட்டளையிடுகிறவைகளை நீங்கள் செய்துவருகிறீர்களென்றும், இனிமேலும் செய்வீர்களென்றும், உங்களைக்குறித்துக் கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறோம்.
5. கர்த்தர் உங்கள் இருதயங்களைத் தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக.
6. மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலக வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.
7. இன்னவிதமாய் எங்களைப் பின்பற்ற வேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும்,
8. ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.
9. உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம்.
10. ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.
11. உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
12. இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
13. சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.
14. மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள்.
15. ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல், சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.
16. சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.
17. பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன்.
18. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
1 தீமோத்தேயு
1. நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,
2. விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
3. வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,
4. நான் மக்கெதோனியாவுக்குப் போகும்போது உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியே செய்வாயாக.
5. கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.
6. இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்.
7. தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.
8. ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம்.
9. எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய்தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும்,
10. வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,
11. நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.
12. என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.
13. முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம்பெற்றேன்.
14. நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று.
15. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.
16. அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.
17. நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
18. குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன் உண்டான தீர்க்கதரிசனங்களின்படியே, நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்; நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு.
19. இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.
20. இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.
1. நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
2. நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
6. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
7. இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.
8. அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.
9. ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல்,
10. தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
11. ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.
12. உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.
13. என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
14. மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
15. அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.
1. கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
2. ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
3. அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து,
4. தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.
5. ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
6. அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது.
7. அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்.
8. அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும்,
9. விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும்.
10. மேலும், இவர்கள் முன்னதாகச் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களானால் உதவிக்காரராக ஊழியஞ்செய்யலாம்.
11. அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும்.
12. மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்.
13. இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்.
14. நான் உன்னிடத்திற்குச் சீக்கிரமாய் வருவேனென்று நம்பியிருக்கிறேன்.
15. தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.
16. அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
1. ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்.
2. விவாகம்பண்ணாதிருக்கவும்,
3. விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.
4. தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல.
5. அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.
6. இவைகளை நீ சகோதரருக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நற்போதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பாய்.
7. சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவ பக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.
8. சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
9. இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமாயிருக்கிறது.
10. இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
11. இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.
12. உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.
13. நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.
14. மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே.
15. நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.
16. உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.
1. முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும்,
2. முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து, புத்திசொல்லு.
3. உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு.
4. விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.
5. உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.
6. சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.
7. அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு.
8. ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.
9. அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி,
10. பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
11. இளவயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனெனில், அவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்க் காமவிகாரங்கொள்ளும்போது விவாகம்பண்ண மனதாகி,
12. முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விடுவதினாலே, ஆக்கினைக்குட்படுவார்கள்.
13. அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.
14. ஆகையால் இளவயதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன்.
15. ஏனெனில் இதற்குமுன்னே சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள்.
16. விசுவாசியாகிய ஒருவனிடத்திலாவது ஒருத்தியிடத்திலாவது விதவைகளிருந்தால், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கடவர்கள்; சபையானது உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்யவேண்டியதாகையால் அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது.
17. நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.
18. போரடிக்கிற மாட்டை வாய்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.
19. மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.
20. மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.
21. நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.
22. ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்.
23. நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்.
24. சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.
25. அப்படியே சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்; அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது.
1. தேவனுடைய நாமமும் உபதேசமும் தூஷிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தன நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர் யாவரும் தங்கள் எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் பாத்திரரென்று எண்ணிக்கொள்ளக்கடவர்கள்.
2. விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்கள் எஜமான்கள் சகோதரராயிருக்கிறதினாலே அவர்களை அசட்டைபண்ணாமல், நல்வேலையின் பலனைப் பெற்றுக்கொள்ளுகிற அவர்கள் விசுவாசிகளும் பிரியருமாயிருக்கிறபடியால், அவர்களுக்கு அதிகமாய் ஊழியஞ்செய்யக்கடவர்கள்; இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு.
3. ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,
4. அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி,
5. கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.
6. போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
7. உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.
8. உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்.
9. ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.
10. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
11. நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.
12. விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.
13. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமாகும்வரைக்கும், நீ இந்தக் கற்பனையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள்ளும்படிக்கு,
14. எல்லாவற்றையும் உயிரோடிருக்கச் செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
15. அந்தப் பிரசன்னமாகுதலைத் தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
16. ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
17. இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,
18. நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,
19. நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.
20. ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு.
21. சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென்.
2 தீமோத்தேயு
1. கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைப்பற்றிய வாக்குத்தத்தத்தின்படி, தேவனுடைய சித்தத்தினாலே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,
2. பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
3. நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரை ஞாபகம்பண்ணி, சந்தோஷத்தால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாயிருந்து,
4. உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்த மனச்சாட்சியோடே ஆராதித்துவரும் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன்.
5. அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.
6. இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.
7. தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
8. ஆகையால் நம்முடைய கர்த்தரைப் பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக் குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவவல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கநுபவி.
9. அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.
10. நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.
11. அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதியாருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன்.
12. அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.
13. நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு.
14. உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.
15. ஆசியாநாட்டிலிருக்கிற யாவரும், அவர்களில் பிகெல்லு எர்மொகெனே முதலாய் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்.
16. ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கர்த்தர் இரக்கங் கட்டளையிடுவாராக; அவன் அநேகந்தரம் என்னை இளைப்பாற்றினான்; என் விலங்கைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை;
17. அவன் ரோமாவில் வந்திருந்தபோது அதிக ஜாக்கிரதையாய் என்னைத் தேடிக் கண்டுபிடித்தான்.
18. அந்நாளிலே அவன் கர்த்தரிடத்தில் இரக்கத்தைக் கண்டடையும்படி, கர்த்தர் அவனுக்கு அனுக்கிரகஞ்செய்வாராக; அவன் எபேசுவிலே செய்த பற்பல உதவிகளையும் நீ நன்றாய் அறிந்திருக்கிறாயே.
1. ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.
2. அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி.
3. நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி.
4. தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.
5. மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.
6. பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்.
7. நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.
8. தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்.
9. இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை.
10. ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்.
11. இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்;
12. அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;
13. நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.
14. இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு.
15. நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.
16. சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்;
17. அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்;
18. அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
19. ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது.
20. ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.
21. ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.
22. அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.
23. புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.
24. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.
25. எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,
26. பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.
1. மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.
2. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,
3. சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,
4. துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,
5. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
6. பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,
7. எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
8. யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள்.
9. ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை; அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும்.
10. நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும்,
11. அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
12. அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.
13. பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.
14. நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல்,
15. கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.
16. வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
17. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
1. நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:
2. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.
3. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,
4. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
5. நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.
6. ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது.
7. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
8. இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
9. நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.
10. ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.
11. லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.
12. தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்.
13. துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.
14. கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.
15. நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்துநின்றவன்.
16. நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.
17. கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.
18. கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
19. பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு.
20. எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்.
21. மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லாச் சகோதரரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
22. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.
தீத்து
1. தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு எழுதுகிறதாவது:
2. பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
3. பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி,
4. ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.
5. நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேனே.
6. குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்.
7. ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்,
8. அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,
9. ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.
10. அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
11. அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
12. கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களிலொருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.
13. இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்,
14. விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.
15. சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.
16. அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.
1. நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு.
2. முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு.
3. முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும்,
4. தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்குப் பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும்,
5. தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.
6. அப்படியே, பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்திசொல்லி,
7. நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து,
8. எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.
9. வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக,
10. தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு.
11. ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,
12. நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,
13. நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
14. அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
15. இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக.
1. துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும்,
2. ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு.
3. ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.
4. நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது,
5. நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
6. தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக,
7. அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.
8. இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.
9. புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.
10. வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.
11. அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.
12. நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வர ஜாக்கிரதைப்படு; மாரிகாலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்.
13. நியாயசாஸ்திரியாகிய சேனாவுக்கும் அப்பொல்லோவுக்கும் ஒரு குறைவுமில்லாதபடிக்கு அவர்களை ஜாக்கிரதையாய் விசாரித்து வழிவிட்டனுப்பு.
14. நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகட்டும்.
15. என்னோடிருக்கிற யாவரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். விசுவாசத்திலே நம்மைச் சிநேகிக்கிறவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லு. கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
பிலேமோன்
1. கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப்பட்டவனாயிருக்கிற பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாயிருக்கிற பிலேமோனுக்கும்,
2. பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்கள் உடன் போர்ச்சேவகனாகிய அர்க்கிப்புவுக்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபைக்கும் எழுதுகிறதாவது:
3. நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
4. கர்த்தராகிய இயேசுவினிடத்திலும், எல்லாப் பரிசுத்தவான்களிடத்திலுமுள்ள உம்முடைய அன்பையும் உம்முடைய விசுவாசத்தையும் நான் கேள்விப்பட்டு,
5. என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்து,
6. உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்துஇயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல்செய்கிறேன்.
7. சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்.
8. ஆகையால், பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால்,
9. நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும், அப்படிச் செய்யாமல், அன்பினிமித்தம் மன்றாடுகிறேன்.
10. என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.
11. முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்.
12. அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன்; என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.
13. சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி உமக்குப் பதிலாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமென்றிருந்தேன்.
14. ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினாலல்ல, மனப்பூர்வமாய்ச் செய்யத்தக்கதாக, நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை.
15. அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாயிருக்கும்படிக்கும், இனிமேல் அவன் அடிமையானவனாகவல்ல, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவுமிருக்கும்படிக்கும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனானாக்கும்.
16. எனக்கு அவன் பிரியமான சகோதரனானால், உமக்குச் சரீரத்தின்படியேயும் கர்த்தருக்குள்ளும் எவ்வளவு பிரியமுள்ளவனாயிருக்கவேண்டும்!
17. ஆதலால், நீர் என்னை உம்மோடே ஐக்கியமானவனென்று எண்ணினால், என்னை ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும்.
18. அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.
19. பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே.
20. ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனமுண்டாகட்டும்; கர்த்தருக்குள் என் உள்ளத்தை இளைப்பாறப்பண்ணும்.
21. நான் சொல்லுகிறதிலும் அதிகமாய்ச் செய்வீரென்று அறிந்து, இதற்கு நீர் இணங்குவீரென்று நிச்சயித்து, உமக்கு எழுதியிருக்கிறேன்.
22. மேலும், உங்கள் விண்ணப்பங்களினாலே நான் உங்களுக்கு அநுக்கிரகிக்கப்படுவேனென்று நம்பியிருக்கிறபடியால், நான் இருக்கும்படிக்கு ஓரிடத்தை எனக்காக ஆயத்தம்பண்ணும்.
23. கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னோடேகூடக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும்,
24. என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
25. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென்.
எபிரெயர்
1. பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,
2. இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.
3. இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.
4. இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.
5. எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?
6. மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.
7. தேவதூதரைக்குறித்தோ: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது.
8. குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
9. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;
10. கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;
11. அவைகள் அழிந்துபோம்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போம்;
12. ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.
13. மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?
14. இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?
1. ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.
2. ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க,
3. முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,
4. அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
5. இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.
6. ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?
7. அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான்.
8. சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற விஷயத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை; அப்படியிருந்தும், இன்னும் அவனுக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக் காணோம்.
9. என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
10. ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.
11. எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்:
12. உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்;
13. நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்.
14. ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
15. ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
16. ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்.
17. அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது.
18. ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.
1. இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;
2. மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்.
3. வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்; அதுபோல மோசேயைப்பார்க்கிலும் இவர் அதிக மகிமைக்குப் பாத்திரராயிருக்கிறார்.
4. ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.
5. சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்.
6. கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், நாமே அவருடைய வீடாயிருப்போம்.
7. ஆகையால், பரிசுத்தஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில்,
8. வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.
9. அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள்.
10. ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி;
11. என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.
12. சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.
13. உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
14. நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.
15. இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.
16. கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா?
17. மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே.
18. பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக்குறித்தல்லவா?
19. ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற்போனார்களென்று பார்க்கிறோம்.
1. ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்.
2. ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.
3. விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும்: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.
4. மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம் நாளைக்குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார்.
5. அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார்.
6. ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாயிருக்கிறபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற்போனபடியினாலும்,
7. இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒருநாளைக் குறித்திருக்கிறார்.
8. யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே.
9. ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது.
10. ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.
11. ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.
12. தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
13. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
14. வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.
15. நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
16. ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
1. அன்றியும், மனுஷரில் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காகத் தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான்.
2. தானும் பலவீனமுள்ளவனானபடியினாலே, அறியாதவர்களுக்கும் நெறிதப்பிப்போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாயிருக்கிறான்.
3. அதினிமித்தம் அவன் ஜனங்களுடைய பாவங்களுக்காகப் பலியிடவேண்டியதுபோல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலியிடவேண்டியதாயிருக்கிறது.
4. மேலும், ஆரோனைப்போலத் தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.
5. அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார்.
6. அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.
7. அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,
8. அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,
9. தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி,
10. மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.
11. இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும்.
12. காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்.
13. பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்.
14. பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.
1. ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்,
2. ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக.
3. தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம்.
4. ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
5. தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
6. மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
7. எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
8. முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.
9. பிரியமானவர்களே, நாங்கள் இப்படிச் சொன்னாலும், நன்மையானவைகளும் இரட்சிப்புக்குரியவைகளுமான காரியங்கள் உங்களிடத்தில் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம்.
10. ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே.
11. நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து,
12. உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.
13. ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு:
14. நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.
15. அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்.
16. மனுஷர் தங்களிலும் பெரியவர்பேரில் ஆணையிடுவார்கள்; உறுதிபண்ணும்படிக்கு ஆணையிடுதலே சகல விவாதத்திற்கும் முடிவு.
17. அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்.
18. நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.
19. அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.
20. நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.
1. இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.
2. இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம்.
3. இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.
4. இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்.
5. லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்துவந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள்.
6. ஆகிலும், அவர்களுடைய வம்சவரிசையில் வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையில் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றவனை ஆசீர்வதித்தான்.
7. சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச் சந்தேகமில்லை.
8. அன்றியும், இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள்; அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவன் வாங்கினான்.
9. அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் தகப்பனுடைய அரையிலிருந்தபடியால்,
10. தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாய்த் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம்.
11. அல்லாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன?
12. ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும்.
13. இவைகள் எவரைக்குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர் வேறொரு கோத்திரத்துக்குள்ளானவராயிருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனாகிலும் பலிபீடத்து ஊழியம் செய்ததில்லையே.
14. நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.
15. அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பதினால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது.
16. அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல்,
17. நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.
18. முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது.
19. நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.
20. அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம் மாறாமலுமிருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்.
21. ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ,
22. அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார்.
23. அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்.
24. இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்.
25. மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.
26. பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.
27. அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார்.
28. நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது; நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது.
1. மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில்; பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய்,
2. பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ் செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.
3. ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான்; ஆதலால் செலுத்தும்படிக்கு ஏதோ ஒன்று இவருக்கும் அவசியம் வேண்டியதாயிருக்கிறது.
4. பூமியிலே அவர் இருப்பாரானால் ஆசாரியராயிருக்கமாட்டார்; ஏனெனில், நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே;
5. இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணப் போகையில்: மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.
6. இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார்.
7. அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.
8. அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது.
9. அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்தநாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10. அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.
11. அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை.
12. ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13. புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.
1. அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது.
2. எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும்.
3. இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது.
4. அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
5. அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைக்குறித்து விவரமாய்ப்பேச இப்பொழுது சமயமில்லை.
6. இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள்.
7. இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான்.
8. அதினாலே, முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார்.
9. அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.
10. இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல.
11. கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்,
12. வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
13. அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால்,
14. நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!
15. ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.
16. ஏனென்றால், எங்கே மரணசாசனமுண்டோ, அங்கே அந்தச் சாசனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும்.
17. எப்படியெனில், மரணமுண்டான பின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே.
18. அந்தப்படி, முதலாம் உடன்படிக்கையும் இரத்தமில்லாமல் பிரதிஷ்டை பண்ணப்படவில்லை.
19. எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து, புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து:
20. தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான்.
21. இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய சகல பணிமுட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான்.
22. நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
23. ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே.
24. அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.
25. பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை.
26. அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.
27. அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
28. கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
1. இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.
2. பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?
3. அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது.
4. அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.
5. ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;
6. சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர்.
7. அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.
8. நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு:
9. தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.
10. இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
11. அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான்.
12. இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,
13. இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.
14. ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.
15. இதைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிசொல்லுகிறார்; எப்படியெனில்:
16. அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்தபின்பு,
17. அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்.
18. இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே.
19. ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
20. அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
21. தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,
22. துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
23. அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.
24. மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து;
25. சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
26. சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,
27. நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
28. மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;
29. தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
30. பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்.
31. ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே.
32. முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே.
33. நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமல்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள்.
34. நான் கட்டப்பட்டிருக்கையில் நீங்கள் என்னைக்குறித்துப் பரிதபித்ததுமன்றி, பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து, உங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக்கொடுத்தீர்கள்.
35. ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.
36. நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.
37. வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.
38. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
39. நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.
1. விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.
2. அதினாலே முன்னோர்கள் நற்சாட்சிபெற்றார்கள்.
3. விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
4. விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.
5. விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்.
6. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
7. விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்துத் தேவஎச்சரிப்புப் பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்.
8. விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.
9. விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;
10. ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்.
11. விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.
12. ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்.
13. இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.
14. இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.
15. தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே.
16. அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.
17. மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்.
18. ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்தும் எழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,
19. தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
20. விசுவாசத்தினாலே ஈசாக்கு வருங்காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்.
21. விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.
22. விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்.
23. மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்துவைத்தார்கள்.
24. விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,
25. அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,
26. இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.
27. விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.
28. விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்.
29. விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்துபோனார்கள்; எகிப்தியர் அப்படிச் செய்யத்துணிந்து அமிழ்ந்துபோனார்கள்.
30. விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது.
31. விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்.
32. பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது.
33. விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,
34. அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்.
35. ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்;
36. வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்;
37. கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்;
38. உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.
39. இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள்.
40. அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.
1. ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
2. அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
3. ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.
4. பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே.
5. அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
6. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.
7. நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?
8. எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.
9. அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
10. அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.
11. எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.
12. ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி,
13. முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்.
14. யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
15. ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,
16. ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
17. ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.
18. அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும்,
19. எக்காளமுழக்கத்தினிடத்திற்கும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடத்திற்கும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள்.
20. ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு, அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள்.
21. மோசேயும்: நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாயிருந்தது.
22. நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்,
23. பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,
24. புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.
25. பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?
26. அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ் செய்திருக்கிறார்.
27. இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல மாறிப்போம் என்பதைக் குறிக்கிறது.
28. ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
29. நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.
1. சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது.
2. அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.
3. கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
4. விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
5. நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
6. அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே.
7. தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.
8. இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
9. பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே.
10. நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை.
11. ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும்.
12. அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.
13. ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப்போகக்கடவோம்.
14. நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம்.
15. ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
16. அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.
17. உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.
18. எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம்.
19. நான் அதிசீக்கிரமாய் உங்களிடத்தில் வரும்படிக்கு நீங்கள் இப்படி வேண்டிக்கொள்ளும்படி அதிகமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன்.
20. நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,
21. இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
22. சகோதரரே, நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
23. சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டானென்று அறிவீர்களாக; அவன் சீக்கிரமாய் வந்தால், அவனோடேகூட நான் வந்து, உங்களைக் காண்பேன்.
24. உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் யாவரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் யாவரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
25. கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
யாக்கோபு
1. தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:
2. என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,
3. உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
4. நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.
5. உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
6. ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.
7. அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.
8. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.
9. தாழ்ந்த சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்.
10. ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான்.
11. சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்.
12. சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
13. சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
14. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
15. பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
16. என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள்.
17. நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
18. அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.
19. ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;
20. மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
21. ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.
22. அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.
23. என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;
24. அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.
25. சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.
26. உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
27. திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
1. என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக.
2. ஏனெனில், பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒரு மனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது,
3. மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால்,
4. உங்களுக்குள்ளே பேதகம்பண்ணி, தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்களாயிருப்பீர்களல்லவா?
5. என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?
6. நீங்களோ தரித்திரரைக் கனவீனம் பண்ணுகிறீர்கள். ஐசுவரியவான்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நியாயாசனங்களுக்கு முன்பாக இழுக்கிறார்கள்?
7. உங்களுக்குத் தரிக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ தூஷிக்கிறார்கள்?
8. உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள்.
9. பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள்.
10. எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.
11. ஏனென்றால், விபசாரஞ்செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலைசெய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரஞ்செய்யாமலிருந்தும் கொலைசெய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய்.
12. சுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப்போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்.
13. ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.
14. என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
15. ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது,
16. உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?
17. அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.
18. ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.
19. தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.
20. வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?
21. நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?
22. விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.
23. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.
24. ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே.
25. அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?
26. அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.
1. என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.
2. நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.
3. பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம்.
4. கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும்.
5. அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!
6. நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!
7. சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும்பிராணிகள், நீர்வாழும் ஜெந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம் மனுஷசுபாவத்தால் அடக்கப்படும், அடக்கப்பட்டதுமுண்டு.
8. நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.
9. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.
10. துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.
11. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?
12. என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது.
13. உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.
14. உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.
15. இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.
16. வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.
17. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.
18. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.
1. உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர்செய்கிற இச்சைகளினாலல்லவா?
2. நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும்பண்ணியும், நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.
3. நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.
4. விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
5. நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?
6. அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.
7. ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
8. தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
9. நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது.
10. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
11. சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.
12. நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?
13. மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒருவருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம் பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள்.
14. நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.
15. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.
16. இப்பொழுது உங்கள் வீம்புகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மைபாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது.
17. ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.
1. ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்.
2. உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின.
3. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.
4. இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.
5. பூமியிலே நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் நடக்கிறதுபோல உங்கள் இருதயங்களைப் போஷித்தீர்கள்.
6. நீதிமானை நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக் கொலைசெய்தீர்கள்; அவன் உங்களோடே எதிர்த்துநிற்கவில்லை.
7. இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்.
8. நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.
9. சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.
10. என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
11. இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.
12. விசேஷமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறெந்த ஆணையினாலாவது சத்தியம்பண்ணாதிருங்கள்; நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.
13. உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்.
14. உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.
15. அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
16. நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
17. எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.
18. மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.
19. சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால்,
20. தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.
1 பேதுரு
1. இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில்,
2. பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.
3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;
4. அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.
5. கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
6. இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.
7. அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.
8. அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து,
9. உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்.
10. உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக்குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள்;
11. தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.
12. தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்கத் தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.
13. ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.
14. நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து,
15. உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.
16. நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
17. அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.
18. உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,
19. குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
20. அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய்த் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட்டார்.
21. உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.
22. ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்;
23. அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.
24. மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.
25. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.
1. இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்,
2. சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
3. நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
4. மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,
5. ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
6. அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
7. ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று;
8. அவர்கள் திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.
9. நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
10. முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.
11. பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி,
12. புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
13. நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள்.
14. மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள்.
15. நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
16. சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.
17. எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.
18. வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.
19. ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.
20. நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.
21. இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.
22. அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;
23. அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
24. நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
25. சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.
1. அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
2. போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.
3. மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,
4. அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
5. இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.
6. அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.
7. அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.
8. மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து,
9. தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.
10. ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,
11. பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்.
12. கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.
13. நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்?
14. நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து;
15. கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.
16. கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள்.
17. தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.
18. ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
19. அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.
20. அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
21. அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;
22. அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
1. இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.
2. ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.
3. சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம்.
4. அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள்.
5. உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள்.
6. இதற்காக மரித்தோரானவர்கள், மனுஷர்முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக, அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.
7. எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
8. எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
9. முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
10. அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
11. ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
12. பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,
13. கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
14. நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
15. ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.
16. ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.
17. நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?
18. நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
19. ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.
1. உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறதென்னவென்றால்:
2. உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,
3. சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.
4. அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.
5. அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
6. ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
7. அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
8. தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
9. விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.
10. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;
11. அவருக்கு மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
12. உங்களுக்குப் புத்திசொல்லும்படிக்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதி, எனக்குத் தோன்றுகிறபடி உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன்.
13. உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
14. ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடே வாழ்த்துதல் செய்யுங்கள். கிறிஸ்து இயேசுவுக்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானமுண்டாவதாக. ஆமென்.
2 பேதுரு
1. நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:
2. தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.
3. தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,
4. இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
5. இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,
6. ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,
7. தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.
8. இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.
9. இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.
10. ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.
11. இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.
12. இதினிமித்தம், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பூட்ட நான் அசதியாயிரேன்.
13. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்து,
14. இந்தக் கூடாரத்தில் நான் இருக்குமளவும் உங்களை நினைப்பூட்டி எழுப்பிவிடுவது நியாயமென்று எண்ணுகிறேன்.
15. மேலும், நான் சென்றுபோனபின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்தனம்பண்ணுவேன்.
16. நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.
17. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,
18. அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்.
19. அதிக உறுதியான தீர்க்கதரிசனவசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.
20. வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.
21. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
1. கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2. அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
3. பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
4. பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;
5. பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி;
6. சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து;
7. அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு;
8. நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;
9. கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.
10. விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களைத் தூஷிக்க அஞ்சாதவர்கள்.
11. அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாய்க் கர்த்தருக்கு முன்பாக அவர்களைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தமாட்டார்களே.
12. இவர்களோ பிடிபட்டழிக்கப்படுவதற்கு உண்டான புத்தியற்ற மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷித்து, தங்கள் கேட்டிலே கெட்டழிந்து, அநீதத்தின் பலனை அடைவார்கள்.
13. இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து; உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்;
14. விபசாரமயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தை விட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள்.
15. செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியை விரும்பி,
16. தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர்பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது.
17. இவர்கள் தண்ணீரில்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாயிருக்கிறார்கள்; என்றென்றைக்குமுள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
18. வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்த்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள்.
19. தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.
20. கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.
21. அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.
22. நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.
1. பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்.
2. பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன்.
3. முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து,
4. அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
5. பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும்,
6. அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
7. இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
8. பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.
9. தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
10. கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.
11. இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்!
12. தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.
13. அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
14. ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.
15. மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;
16. எல்லா நிருபங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.
17. ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,
18. நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
1 யோவான்
1. ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
2. அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
3. நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.
4. உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.
5. தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.
6. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்.
7. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
8. நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
9. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
10. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
1. என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
2. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.
3. அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.
4. அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
5. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
6. அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.
7. சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே.
8. மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.
9. ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
10. தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.
11. தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.
12. பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.
13. பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.
14. பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
15. உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
16. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
17. உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
18. பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.
19. அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்.
20. நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.
21. சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
22. இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
23. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்.
24. ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.
25. நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.
26. உங்களை வஞ்சிக்கிறவர்களைக்குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
27. நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.
28. இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்.
29. அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.
1. நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
2. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
3. அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.
4. பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
5. அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை.
6. அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.
7. பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.
8. பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
9. தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
10. இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.
11. நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது.
12. பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.
13. என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்.
14. நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்.
15. தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.
16. அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.
17. ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?
18. என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
19. இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.
20. நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.
21. பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து,
22. அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.
23. நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது.
24. அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.
1. பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
2. தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.
3. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
4. பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
5. அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.
6. நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.
7. பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
8. அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.
9. தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
10. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.
11. பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.
12. தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
13. அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.
14. பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.
15. இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.
16. தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
17. நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்.
18. அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.
19. அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.
20. தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
21. தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.
1. இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.
2. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்.
3. நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.
4. தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
5. இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
6. இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.
7. [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;
8. பூலோகத்திலே] சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
9. நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.
10. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான்.
11. தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.
12. குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.
13. உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.
14. நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.
15. நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.
16. மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
17. அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.
18. தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்.
19. நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.
20. அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
21. பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.
2 யோவான்
1. நமக்குள் நிலைநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடிருப்பதுமாகிய சத்தியத்தினிமித்தம், நான் மாத்திரமல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற யாவரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும்,
2. தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது:
3. பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடுங்கூட, உங்களோடிருப்பதாக.
4. பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டேன்.
5. இப்பொழுதும் அம்மாளே, நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்று, உமக்குப் புதிய கற்பனையாக எழுதாமல், ஆதிமுதல் நமக்கு உண்டாயிருக்கிற கற்பனையாக எழுதி, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.
6. நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே.
7. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
8. உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
9. கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
10. ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.
11. அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.
12. உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன்.
13. தெரிந்துகொள்ளப்பட்ட உம்முடைய சகோதரியின் பிள்ளைகள் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். ஆமென்.
3 யோவான்
1. மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவுக்கு எழுதுகிறதாவது:
2. பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.
3. சகோதரர் வந்து நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன்.
4. என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.
5. பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்.
6. அவர்கள் உன்னுடைய அன்பைக் குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சி சொன்னார்கள்; தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி அவர்களை நீ வழிவிட்டனுப்பினால் நலமாயிருக்கும்.
7. ஏனெனில் அவர்கள் புறஜாதியாரிடத்தில் ஒன்றும் வாங்காமல் அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள்.
8. ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடனாளிகளாயிருக்கிறோம்.
9. நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
10. ஆனபடியால், நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிரியைகளை நினைத்துக்கொள்வேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தான் சகோதரரை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்குப் புறம்பே தள்ளுகிறான்.
11. பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.
12. தேமேத்திரியு எல்லாராலும் நற்சாட்சிபெற்றதுமல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றவன்; நாங்களும் சாட்சிகொடுக்கிறோம், எங்கள் சாட்சி மெய்யென்று அறிவீர்கள்.
13. எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; ஆனால் மையினாலும் இறகினாலும் எழுத எனக்கு மனதில்லை.
14. சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாய்ப் பேசிக்கொள்ளுவோம். உனக்குச் சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக.
யூதா
1. இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
2. உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது.
3. பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.
4. ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.
5. நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.
6. தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்.
7. அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
8. அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.
9. பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான்.
10. இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போலச் சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
11. இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.
12. இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப்போன மரங்களும்,
13. தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.
14. ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,
15. தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
16. இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப் பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்.
17. நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள்.
18. கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
19. இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே.
20. நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்தஆவிக்குள் ஜெபம்பண்ணி,
21. தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.
22. அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து,
23. மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்.
24. வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,
25. தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.
வெளி
1. சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.
2. இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.
3. இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
4. யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,
5. உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
6. நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
7. இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
8. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
9. உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.
10. கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
11. அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.
12. அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,
13. அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.
14. அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது;
15. அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.
16. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது.
17. நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;
18. மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
19. நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது;
20. என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.
1. எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
2. உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;
3. நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
4. ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.
5. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.
6. நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.
7. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
8. சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;
9. உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.
10. நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
11. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.
12. பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;
13. உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
14. ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.
15. அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்.
16. நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.
17. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
18. தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;
19. உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
20. ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.
21. அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.
22. இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,
23. அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.
24. தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.
25. உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
26. ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
27. அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
28. விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
29. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
1. சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.
2. நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.
3. ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.
4. ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.
5. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.
6. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
7. பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
8. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.
9. இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.
10. என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.
11. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.
12. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.
13. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
14. லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
15. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.
16. இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
17. நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;
18. நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.
19. நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
20. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
21. நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
22. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.
1. இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.
2. உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.
3. வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம்போல் தோன்றிற்று.
4. அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.
5. அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.
6. அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடலிருந்தது; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.
7. முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம் போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன.
8. அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
9. மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,
10. இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:
11. கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.
1. அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.
2. புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன்.
3. வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது.
4. ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.
5. அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
6. அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.
7. அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.
8. அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:
9. தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
10. எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
11. பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.
12. அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.
13. அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.
14. அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின. இருபத்துநான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.
1. ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன்.
2. நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.
3. அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன்.
4. அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
5. அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.
6. அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.
7. அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன்.
8. நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.
9. அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன்.
10. அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.
11. அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
12. அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று.
13. அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.
14. வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின.
15. பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,
16. பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;
17. அவருடைய கோபாக்கினையின் மகாநாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.
1. இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.
2. ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவரக்கண்டேன்; அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி:
3. நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான்.
4. முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்.
5. யூதா கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ரூபன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். காத் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
6. ஆசேர் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். நப்தலி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
7. சிமியோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
8. செபுலோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
9. இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.
10. அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.
11. தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:
12. ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.
13. அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
14. அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
15. ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.
16. இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை.
17. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.
1. அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று.
2. பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன்; அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.
3. வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
4. அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.
5. பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின.
6. அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.
7. முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.
8. இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது; அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று.
9. சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.
10. மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது.
11. அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.
12. நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று.
13. பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன்; அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காளசத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.
1. ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.
2. அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகைஎழும்பிற்று; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது.
3. அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.
4. பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.
5. மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போலிருக்கும்.
6. அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்.
7. அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது; அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளிருந்தன; அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள்போலிருந்தன.
8. அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போலிருந்தன.
9. இருப்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன.
10. அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாயிருந்தன.
11. அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.
12. முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று; இவைகளுக்குப்பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ, வருகிறது.
13. ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி,
14. எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன்.
15. அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.
16. குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன்.
17. குதிரைகளையும் அவைகளின்மேல் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன.
18. அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள்.
19. அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது.
20. அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு மனந்திரும்பவுமில்லை;
21. தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.
1. பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்திறங்கி வரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.
2. திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,
3. சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகா சத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.
4. அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.
5. சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி:
6. இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,
7. வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான்.
8. நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,
9. நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதுரமாயிருக்கும் என்றான்.
10. நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அது தேனைப்போல மதுரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.
11. அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்.
1. பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார்.
2. ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.
3. என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.
4. பூலோகத்தின் ஆண்டவருக்குமுன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.
5. ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும்.
6. அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.
7. அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.
8. அவர்களுடைய உடல்கள் மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.
9. ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள்வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள்.
10. அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.
11. மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.
12. இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.
13. அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
14. இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாய் வருகிறது.
15. ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.
16. அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து:
17. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.
18. ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
19. அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.
1. அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.
2. அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள்.
3. அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது.
4. அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளை பெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.
5. சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
6. ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபதுநாளளவும் அவளைப் போஷிப்பதற்காகத் தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது.
7. வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை.
8. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று.
9. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
10. அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்.
11. மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
12. ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.
13. வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண்பிள்ளையைப்பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது.
14. ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.
15. அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது.
16. பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது.
17. அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.
1. பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன.
2. நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.
3. அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,
4. அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.
5. பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.
6. அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது.
7. மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.
8. உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.
9. காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன்.
10. சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.
11. பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.
12. அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச் சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.
13. அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து,
14. மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
15. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.
16. அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
18. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.
1. பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.
2. அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது.
3. அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக் கூடாதிருந்தது.
4. ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.
5. இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.
6. பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,
7. மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான்.
8. வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான்.
9. அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,
10. அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.
11. அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.
12. தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.
13. பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.
14. பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன்.
15. அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.
16. அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.
17. பின்பு வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான்.
18. அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கருக்குள்ள அரிவாளைப் பிடித்திருக்கிறவனை நோக்கி: பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான்.
19. அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபாக்கினையென்னும் பெரிய ஆலையிலே போட்டான்.
20. நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகிவந்தது.
1. பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது.
2. அன்றியும், அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.
3. அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
4. கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.
5. இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது;
6. அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அவ்வேழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரந்தரித்து, மார்பருகே பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.
7. அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த பொற்கலசங்கள் ஏழையும் அந்த ஏழு தூதர்களுக்குங் கொடுத்தது.
8. அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக் கூடாதிருந்தது.
1. அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே: நீங்கள் போய்த் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன்.
2. முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று.
3. இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம் போலாயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின.
4. மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாயின.
5. அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர்.
6. அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்குப் பாத்திரராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்.
7. பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்.
8. நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைத் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.
9. அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை.
10. ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டு,
11. தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை.
12. ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத் என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.
13. அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன்.
14. அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.
15. இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.
16. அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்.
17. ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது.
18. சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.
19. அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்குத் தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது.
20. தீவுகள் யாவும் அகன்றுபோயின; பர்வதங்கள் காணப்படாமற்போயின.
21. தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள்; அந்த வாதை மகா கொடிதாயிருந்தது.
1. ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;
2. அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;
3. ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக்கண்டேன்.
4. அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.
5. மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
6. அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
7. அப்பொழுது, தூதனானவன் என்னை நோக்கி: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.
8. நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
9. ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
10. அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும்.
11. இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான்.
12. நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
13. இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
14. இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.
15. பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.
16. நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக் கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.
17. தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.
18. நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.
1. இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்திறங்கி வரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.
2. அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்தஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.
3. அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்.
4. பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
5. அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார்.
6. அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள்.
7. அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள்.
8. ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரேநாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.
9. அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்பி,
10. அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.
11. பூமியின் வர்த்தகர்களும் தங்கள் தங்கள் சரக்குகளாகிய பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், சல்லாவையும், இரத்தாம்பரத்தையும், பட்டாடைகளையும், சிவப்பாடைகளையும்,
12. சகலவித வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும்,
13. இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும், கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனுஷருடைய ஆத்துமாக்களையும் இனிக் கொள்வாரில்லாதபடியால், அவளுக்காக அழுது புலம்புவார்கள்.
14. உன் ஆத்துமா இச்சித்த பழவர்க்கங்கள் உன்னைவிட்டு நீங்கிப்போயின; கொழுமையானவைகளும் சம்பிரமமானவைகளும் உன்னைவிட்டு நீங்கிப்போயின; நீ அவைகளை இனிக் காண்பதில்லை.
15. இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி, அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று;
16. ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள்.
17. மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று,
18. அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கொப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு,
19. தங்கள் தலைகள்மேல் புழுதியைப்போட்டுக்கொண்டு: ஐயையோ, மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையிலே இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள்.
20. பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான்.
21. அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகாநகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும்.
22. சுரமண்டலக்காரரும், கீதவாத்தியக்காரரும், நாகசுரக்காரரும், எக்காளக்காரருமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; எந்தத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படுவதுமில்லை; ஏந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை.
23. விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன் வர்த்தகர் பூமியில் பெரியோர்களாயிருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே.
24. தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான்.
1. இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
2. தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள்.
3. மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.
4. இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
5. மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.
6. அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.
7. நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.
8. சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
9. பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.
10. அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.
11. பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
12. அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.
13. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
14. பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந் தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள்.
15. புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.
16. ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
17. பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து:
18. நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகா தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.
19. பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.
20. அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின்முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
21. மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.
1. ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கி வரக்கண்டேன்.
2. பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.
3. அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.
4. அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
5. மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
6. முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
7. அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
8. பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.
9. அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.
10. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
11. பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.
12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
14. அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
1. பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.
2. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
3. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.
4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
5. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.
6. அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.
7. ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.
8. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
9. பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,
10. பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம் பரலோகத்தைவிட்டுத் தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
11. அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.
12. அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.
13. வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.
14. நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.
15. என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.
16. அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது.
17. அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது.
18. அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது.
19. நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,
20. ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.
21. பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.
22. அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.
23. நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.
24. இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
25. அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.
26. உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
27. தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.
1. பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
2. நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.
3. இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.
4. அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
5. அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.
6. பின்பு, அவர் என்னை நோக்கி: இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.
7. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.
8. யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.
9. அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.
10. பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது.
11. அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
12. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
13. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.
14. ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
15. நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
16. சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
17. ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
18. இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
19. ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
20. இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
21. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment